ஜென்னி மார்க்ஸ் - JENNY VON WEST PHALEN (1814-1881) |
உலகில் உள்ள தொழிலாளர்கள் சமுதாய நலன் நாடிச் சிந்திய வியர்வைத் துளிகளின் ஒட்டுமொத்த விலையைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டிய சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். உலகம் முழுதும் பாராட்டும் மேதையைக் கருத்தொருமித்துக் காதலித்துக் கைப்பிடித்தவர் ஜென்னி. கார்ல் மார்க்ஸிடம் ஜென்னி கண்டவை - அகங்காரமில்லாத அறிவு - தன்னலமற்ற தியாகம் - பெண்களை மதிக்கும் பண்பு. இத்தகு தகுதிகள் வாய்ந்த தனது கணவனை மேலும் மேலும் உயர்த்தியவர். சிந்திக்க வைத்தவர்தான் ஜென்னி. ஜென்னியைப் பற்றி கார்ல் மார்க்ஸ் சொன்னவை: உலகிலுள்ள பூக்களிலெல்லாம் மிகச் சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அப்பூவும் கூட இவரிடம் தோற்றுப் போகும் என்பதாகும். ஜென்னி இயற்கையிலேயே கொள்ளை அழகு! அவள் தோற்றத்தால் மட்டும் அழகானவள் என்று எண்ணி விடாதீர்கள். உயர்ந்த எண்ணங்களால் - மனித நேயம் சார்ந்த சிந்தனை வளத்தால் - நெஞ்சத்து நல்லவர் என்ற நடுவு நிலைமையால் - அவள் அழகு மேலும் சிறப்படைந்தது.
ஜென்னி மிகச் சிறந்த பூவினும் சிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ள செய்தி நம் சிந்தைக்கு உரமூட்டுவதாய் உள்ளது; ஏனெனில், மலர் ஒரு நாள் மட்டும் இவ்வுலகில் வாழ்கிறது. அந்த ஒரு நாளிலேயே சமுதாயத்திற்கு வாழும் முறையைக் காட்டிச் செல்கிறது. மலரானது தன்னைத் தேடிவரும் வண்டுக்குத் தேனைத் தந்து - அங்கு உலவிவரும் தென்றலுக்கு இனிய மணத்தைத் தந்து -பாடிவரும் பாடகனுக்குத் தன்னையே தந்து தியாகத்தின் திருவுருவாய் விளங்குகிறது; அம்மலர் வாடி, சருகாகி நிலத்தில் வீழ்ந்தபோதும் தன்னை ஈந்த செடிக்கு உரமாகித் தன் இனம் வளரவும் செழிக்கவும், இவ்வுலகமே பூக்காடாகி நீடித்த மணம் பரப்பவும் வாய்ப்பளிக்கிறது. இத்தகு மலரினைப் போன்று ஜென்னி உழைக்கும் மக்கள் வறுமையைப் போக்க, தான் வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்ட நிலையிலும் - தன் உயிரினும் மேலான குழந்தைகள் நால்வர் வறுமையால் நோய்வாய்ப்பட்டு இழந்த போதும் - தன்னை நோய் வாட்டிய போதும் தனது கணவனது சிந்தனை ஆற்றலை வளப்படுத்துவதிலும், சமுதாய நலனைப் பேணுவதிலும், மாந்தர் அனைவரும் நலவாழ்வு வாழவேண்டும் என்பதிலேயுமே உறுதியாக இருந்தார்.
பிறப்பும் இளமையும்: ஜெர்மனியில் ரைன் நதிக்கரையில் 1814ஆம் ஆண்டில் செல்வமும், செல்வாக்கும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்தான் ஜென்னி. இவரது தந்தையார் லுத்விக் வோன்வெஸ்ட் ஃபிலான்; தாயார் கரோலின் ஹ்யூபெ. ஜென்னியின் குடும்பத்தினர் கவிதைப் பிரியர்கள். ஜென்னியின் வீட்டிற்கு அருகில் வாழ்ந்தவர் கார்ல் மார்க்ஸ். இவர் இசைப் பிரியர். ஷேக்ஸ்பியரின் கவிதைகளை விரும்பிப் படித்து மனப்பாடம் செய்து மீண்டும் மீண்டும் ஒப்புவிப்பதில் இன்பம் கண்டவர். கார்ல் மார்க்ஸ் தனது 17 வயதில் அதாவது 1835ஆம் வருடத்தில் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது தனது எதிர்கால வேலை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். ஜென்னி கார்ல் மார்க்சை விரும்பி ஏற்றுக் கொண்டதற்கு அக்கட்டுரை வரிகள்தான் காரணம். அந்த வரிகள்: மனிதன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்லன்; அவன் சக மனிதர்களுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளனாக இருக்கலாம் - நல்ல நிர்வாகியாக இருக்கலாம்; ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது. மனித குலத்தின் பெரும்பான்மைக்கும் பயன்படக்கூடிய ஒரு வேலையைச் செய்தால் - அதில் வரும் எந்தத் தடையும் நம்மை ஒன்றும் செய்து விடாது. நம் தியாகத்தால் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதில் இருக்கும் உண்மையான மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அது போன்ற பணியை நான் விரும்பி ஏற்கப் போகிறேன். இவ்வரிகள்தான் பிற்காலத்தில் கார்ல் மார்க்சைப் புரட்சிமிக்க சிந்தனையாளர் என்று மக்கள் வியந்து போற்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தன எனலாம்.
திருமண வாழ்வும் - சந்தித்த இடையூறுகளும்:
1843ஆம் ஆண்டு 13ஆம் நாள் ஜென்னி _ மார்க்ஸ் திருமணம் ஜெர்மனி நாட்டில் க்ருஸ்னாக் என்னும் ஊரில் நடைபெற்றது. அத்துடன் ஜென்னியின் வசதியான வாழ்வு முடிவுக்கு வந்தது. அக்கால கட்டத்தில் (1843இல்) கார்ல் மார்க்சின் சோசலிசக் கருத்துகளுக்கு ஜெர்மனி அரசு பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தது. அதனால் கார்ல் மார்க்சுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. குடும்பம் வறுமையின் விளிம்பில் தவித்தது. மிகச் சிறிய அறையில் ஒரு வேளைச் சாப்பாட்டுடன் தத்துவ விவாதங்களில் சிறிதும் சலிப்படையாமல் தன் கணவனுடன் கலந்துரையாடுவது ஜென்னிக்கு மிகவும் பிடித்த செயல். 1844ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி அவர் முதல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்த நேரம் ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆட்பட்ட மார்க்சும் ஜென்னியும் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரீசுக்குச் சென்றனர். ஆனால், ஜெர்மன் அரசு பிரான்ஸ் நாட்டிலும் இவர்களை நிம்மதியாக விடவில்லை. இந்நிலையில் ஜென்னி தன் கைக்குழந்தையுடன் பிரான்சில் தங்க நேர்ந்தது. பிரான்சு அரசாங்கக் கட்டளைப்படி மார்க்ஸ் 24 மணிநேரத்தில் அந்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பெல்ஜிய நாட்டிற்குச் சென்று தன்னுடைய தோழர்களுடன் கலந்துரையாடிய நேரத்தில் பெல்ஜியப் போலீசார் இவரையும் இவரைச் சார்ந்தவர்களையும் சுற்றி வளைத்தனர். அனைவரும் தப்பிவிட்டனர். மார்க்ஸ் மட்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழலில் கணவனைத் தேடிவந்த ஜென்னி சிறை அதிகாரிகளால் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டார். கொடிய குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இச்செய்தி காட்டுத்தீயெனப் பரவியது. அந்நாட்டு மக்களிடம் கார்ல் மார்க்ஸின் கருத்துகளுக்குப் பெரும் ஆதரவு இருப்பதை அறிந்த அரசு- இயந்திரம் அவர்களை விடுதலை செய்தது. என்ன நடக்கும் என்று தெரியாத சூழ்நிலையில் இவர்கள் தம் கொள்கைகளையே உற்ற துணையாகக் கொண்டு இலண்டன் மாநகர் சென்றனர்.
வறுமையின் பிடியில் ஜென்னி:
தொடர்ந்து நாடு கடத்தப்பட்ட காரணத்தால் இவர்கள் குடும்பத்திற்குப் போதிய வருவாய் இல்லை. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இன்றி சொல்லொணாத் துயரில் சிக்கினர். இந்நிலையில் ஜென்னி குழந்தைகளின் தேவைகளைக் கூட மார்க்சிடம் சொல்வதில்லை. இலண்டனில் வீட்டு வாடகை கொடுக்கவும் முடியாத சூழலில் மார்க்சின் கோட்டும், சூட்டும் அடகுக் கடைக்குப் பிரயாணம் செய்தன. அதனால் இயல்பு வாழ்வு வாழவும் எங்கும் பிரயாணம் செய்யவும் இயலவில்லை. தான் சிந்தித்தவற்றை எழுத பேப்பர் வாங்கவும் பணமில்லை. இருப்பினும் அரசியல் சார்ந்த பொருளியல் ஆராய்ச்சியில் ஜென்னியும் _ மார்க்சும் ஓயாது ஈடுபட்டனர். மார்க்ஸ் எழுதும் கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றை ஜென்னி பிரதியெடுப்பார். தன்னுடைய கருத்துகளை மார்க்சுடன் விவாதித்து பத்திரிகைகளில் இச்செய்திகள் வெளிவருவதற்கு உற்ற துணையாக இருப்பார்.
இக்கால கட்டத்தில் அவர்களின் பச்சிளம் குழந்தை பிரான்சிஸ்கா மரணமடைந்தாள்.
அன்பு பிரான்சிஸ்கா, நீ பிறந்தபோது தொட்டில் வாங்கப் பணமில்லை,
நீ இறந்தபோது சவப்பெட்டி வாங்கப் பணமில்லை..... என்று மகளைப் பிரிந்த ஜென்னியின் உள்ளக் குமுறல்கள் நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது. சான்றாண்மைக்கு விளக்கமாகத் திகழ்ந்த ஜென்னி தன் வறுமையை வெளிப்படுத்தவில்லை.
மூலதனம் வெளியீடு:
ஒவ்வொரு சாதனையாளருக்கும் பின்புலமாகவும் உந்து விசையாகவும் சிலர் இருப்பர். அதற்கு இலக்கணமாக விளங்கியவர் ஜென்னி. மார்க்சின் எழுத்துகளால் உந்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் சிந்திக்கத் துவங்கியது _ ஆளும் அதிகார வர்க்கம் நடுநடுங்கியது. ஒரு சிலர் மட்டும் செல்வச் செழிப்பில் இருக்க பெரும்பாலான உழைக்கும் மக்கள் வறுமையில் வாடக் காரணம் என்ன? என்பதைத் தெளிவாகச் சிந்தித்து அதற்கான விளக்கங்களை மூலதனம் என்ற நூலின்மூலம் எளியவருக்கும் புரியும் வகையில் விளக்கிச் சென்றுள்ளார். உலக வரலாற்றையே புதுப்பாதையில் செலுத்திய மூலதனம் பற்றிய அறிமுகம் வருமாறு:
உலகில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் யாவும் உழைப்பாளர்களின் உழைப்பின் சக்தியில் தோன்றியவை. - இது முதல் விதி.
இவ்விதி அனைவரும் அறிந்த எளிய உண்மை.
உழைக்கும் உழைப்பாளியின் சக்தி இரண்டாகப் பிரிகிறது. 1. கொடுக்கப்பட்ட கூலி 2. கொடுக்கப்படாத கூலி (Surplus Value) இந்தக் கொடுக்கப்படாத கூலியின் மதிப்பு அதிகம். இதுவே இன்றைய உலகின் பெரும் ஆதிக்கக்காரர்களின் சொத்து மதிப்பாகும். அதுவே உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மூலதனமாகும் -- இது இரண்டாம் விதி.
இந்த மூலதனம் உலகில் ஒருசில ஆதிக்கவாதிகளின் உரிமையில் உள்ளது. இந்த மூலதனக் குவிப்பு (கொடுக்கப்படாத கூலி) சமூகத்திற்கும் - சமூக மக்கள் அனைவருக்கும் உரியது. - இது மூன்றாம் விதி.
இம்மூன்று விதிகளையும் சுருக்கமாகச் சொல்வதானால், உழைப்பு; உழைப்புக்கு ஏற்ற ஊதியம் - ஊதியம் உழைத்தவனைச் சென்று சேரவேண்டும்.
இத்தத்துவம் 1867ஆம் ஆண்டு மூலதனம் என்ற நூலாக செப்டம்பர் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது; ஜென்னி - மார்க்ஸ் ஆகியோர் 16 ஆண்டுகள் சிந்திய வியர்வைத் துளிகள் தன் பலனை அளித்துத் தொழிலாளர் வாழ்வில் நிரந்தர விடியலை ஏற்படுத்தியது. இன்றும் இந்நூல் உலகின் தலைசிறந்த நூலாகக் கருதப்படுகிறது.
ஏங்கெல்ஸ்: ஜென்னி - மார்க்ஸ் ஆகியோர் வாழ்வில் அவ்வப்போது தோன்றிய வசந்தம் - ஏங்கெல்ஸ். மார்க்ஸ் மறைந்தபோது மூலதனத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியிடப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் மூலதனத்தின் 2ஆம் பாகமும் - 3ஆம் பாகமும் வெளிவர முழுப்பங்கு வகித்தவர்தான் ஏங்கெல்ஸ். இவர் ஜென்னிக்கும் மார்க்சுக்கும் தத்துவரீதியாகவும் - பொருளாதார ரீதியாகவும் துணை நின்றதோடல்லாமல் _ தன் மறைவுக்குப் பின் தன் சொத்தை எல்லாம் ஜென்னி - மார்க்சின் குழந்தைகளுக்கு உரிமையாக்கியவர். ஏங்கெல்ஸ் என்ற அருமை நண்பர் இல்லையெனில் ஜென்னி _ மார்க்ஸ் ஆகியோரின் உழைப்பின் பயன் உலகுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்திருக்காது. இவர்களின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் சாறுதான் பாட்டாளிகள் இழப்பதற்கு அவர்களின் அடிமைத் தளைகளைத் தவிர ஏதுமில்லை; ஆனால், பாட்டாளிகள் பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது. ஆகவே, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். இச்சாறு இன்றும் தொழிலாளர்களுக்கு உயிரூட்டுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிக்க இவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராக தந்தை பெரியார் நம் நாட்டில் வருணஜாதி வேற்றுமைகளை வேரோடு அழிக்க அறிவாயுதம் ஏந்தினார்.
எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. 1881ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் உயர்வான காதலுக்கும், பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இலக்கணமாக விளங்கிய ஜென்னி என்ற மலர் பூமியில் உதிர்ந்தது. இவர்தம் சிந்தனைகள் ஏதும் இல்லாத மக்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க சக்திகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்றும் இருந்து கொண்டுள்ளது.
-பெரியார் பிஞ்சு,மார்ச்,2012
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக