சனி, 27 டிசம்பர், 2014

தொழிலாளர்களுக்காக தன் உயிரை இழந்த பெண்



1946இல், டெக்சாசில் பிறந்தார் கரென் சில்க்வுட்.. நடுத்தரக் குடும்பம். எந்த விஷயத்திலும் உறுதியாக நிற்பார். அறிவியலும் கணிதமும் விருப்பமான பாடங்கள். மருத்துவத் தொழில்நுட்பத்தை லாமர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 18 வயதில், பில் மெடாஸைச் சந்தித்தார். பில்லுக்கு வேலை கிடைத்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
க்ரெசன்ட் சிட்டியில் கெர்மெக்கி எண்ணெய் நிறுவனம் புதிதாக அணுசக்தி நிறுவனத்தைத் தொடங்கியது. அங்கே வேலைக்குச் சேர்ந்தார் சில்க்வுட். சிரத்தையாக வேலை செய்ததால் விரைவிலேயே முக்கியமான தொழிலாளராக மாறினார். புளூட்டோனியம் துகள்களை இரும்புக் குழாய்க்குள் அடைத்து வெளிவரும்போது, கசிவு ஏற்பட்டிருக் கிறதா என்பதைச் சோதிக்கும் பணி சில்க்வுட்டுக்கு.
ஆரம்பம் முதல் முடியும் வரை இந்த வேலை மிகவும் ஆபத்தானது. முகமூடி, கோட், கையுறை அணிந்து கொண்டுதான் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். புளூட்டோனியத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உடலுக்கு மிகுந்த தீங்கை விளைவிக்கக்கூடியது. அணுசக்தி மூலம் எரிபொருள் தயாரிக்கும் பணிக்கு அந்தக் காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.
இதனால் உற்பத்தியை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்தது. தொழிலாளர்கள் இரண்டு ஷிப்டுகள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். நீண்ட நேரம் கவச உடைகளுடன் நின்றுகொண்டே வேலை செய்வது மிகவும் கொடுமையானது. குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கொடுக்க வேண்டும் என்பதால் வேலையை விரைவுபடுத்தச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
18 வயதிலிருந்து 21 வயது வரை இருந்த இளம் தொழிலாளர்களும் கூட சோர்ந்து போனார்கள். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் ஆரம் பித்தனர். 3 வாரங்கள் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம், தோல்வியைச் சந்தித்தது. இதன் பிறகு தொழிற் சங்கம் மூலம் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு பற்றி ஆராயும் பொறுப்பு சில்க்வுட்டுக்கு வழங்கப்பட்டது. தேநீர், உணவு இடைவேளை நேரங்களில் சில்க்வுட் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சோதனை செய்வார். புளூட்டோனியம் கசியும் பகுதிகள், பாதுகாப்புக் குறைபாடு போன்றவற்றை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். இந்தச் செயல்பாடு நிர்வாகத்துக்குத் தெரியாது.
நிர்வாகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகளையும் செய்து வந்தார் சில்க்வுட். அதனால் தொழிலாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வந்தனர். சக மனிதர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்க வேலைகளை சில்க்வுட் மனநிறைவோடு செய்துவந்தார். தொடர்ச்சியான சோதனைகளுக்குப் பிறகு, தான் சேகரித்த தகவல்களை நிபுணர்களிடம் காட்டினார் சில்க்வுட்.
ஆபத்தான புளூட்டோனியம், யுரேனியம் பயன்படும் அந்த இடத்தில் பாதுகாப்பு என்பதே இல்லை என்பதும், இப்படி இருப்பதால் தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதும் தெரிய வந்தது. தொழிற்சங்கத்தில் சோதனை முடிவுகளை ஒப்படைத்தார் சில்க்வுட். நிர்வாகம் எந்தக் குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள வில்லை.
தொடர்ச்சியான உற்பத்தி நடைபெற்று வந்ததால், சுத்தம் செய்வதற்குக்கூட அவகாசம் இல்லை. பல தொழி லாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஒருநாள் வீட்டுக்குத் திரும்பிய சில்க்வுட், கைகளைக் கழுவும்போது புளூட்டோனியம் துகள்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடல், உடைகள் என எங்கும் புளூட்டோனியம். உடனே தன்னுடைய சிறுநீரைச் சேகரித்து, மருத்துவரிடம்  பரிசோதித்துக் கொண்டார்.
முடிவுகளுடன் நிர்வாகத்திடம் சென்றபோது, நிர்வாகத்துக்குப் பிடிக்காத தொழிலாளியாக மாறியிருந்தார் சில்க்வுட். நிர்வாகம் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கமிட்டி அமைத்து ஆராய்வதாகச் சொன்னது. ஆனால், வேலை நடந்து கொண்டே இருந்தது. சில்க்வுட், அவரது இரண்டாவது கணவர் ஸ்டீபன், நண்பர் மூவரும் மருத்துவரிடம் சென்றனர். ஸ்டீபனுக்கும் நண்பருக்கும் பிரச்சினை இல்லை. சில்க்வுட்டோ புளூட்டோனியத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் பிறகு, அவர் ஒவ்வொரு விஷயத்தையும்  ஆவணப்படுத்த ஆரம்பித்தார். எல்லாத் தகவல்களையும் கவனமாகசேகரித்தார். எப்படியாவது தொழிலாளர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் டேவிட் பர்ன்ஹாம் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருந்தார்.
1974,நவம்பர் 13... ஆவணங் களை பத்திரமாக ஒரு பைக்குள் வைத்தார் சில்க்வுட். தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு டேவிட்டைச் சந்திப்பதற்காகத் தனியாகக் கிளம்பினார். 48 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சந்திப்பு நடைபெற இருந்தது.
பத்திரிகைகளில் செய்தி வந்தால் இந்த விஷயம் அரசாங்கத்தின் கவனத்துக்குப் போகும். விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பினார் சில்க்வுட். பக்கத்து இருக்கையில் இருந்த ஆவணங்களைப் பார்த்துக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் மோசமான விபத்து நிகழ்ந்தது. சில்க்வுட் படுகாயமடைந்து கிடந்தார்.
தகவல் அறிந்து காவல்துறை, உறவினர்கள், நண்பர்கள் வந்தபோது சில்க்வுட்டின் இறந்த உடல் மட்டுமே காரில் கிடந்தது. அவர் சேகரித்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருந்தன. ஆல்கஹால் சாப்பிட்டிருந்தார், போதைப்பொருள் உட் கொண்டிருந்தார் என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டு, அதை ஒரு விபத்தாக மாற்ற ஆரம்பித்தனர்.
விபத்து என்றால் ஆவணங்கள் எங்கே போயிருக்கும்? பல்வேறு யூகங்கள், பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும் கிளம்பின. வழக்கு நடைபெற்றது. இறுதியில் கெர்மெக்கி நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது உறுதியானது. சில்க்வுட் குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

சில்க்வுட் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகம், அந்தத் தொழிற்சாலையை மூட நேர்ந்தது. சில்க்வுட் மரணத்துக்கான காரணம் இன்று வரை கண்டறியப்படவில்லை. ஆனால், அவர் ஏற்படுத்திய தாக்கம் பல தொழிற்சாலைகளில் பிரதி பலித்தது. தொழிலாளர்களின் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் அக்கறை எடுத்து, தன் உயிரையே இழந்த சில்க்வுட் தொழிலாளர்களின் ஹீரோவாக என்றும் இருப்பார்!

-விடுதலை,23.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக