ஞாயிறு, 28 டிசம்பர், 2014

இந்து மதத்தில் பெண்கள் நிலை


- தந்தை பெரியார்

இந்து மத தருமத்தில் பெண்கள் ஈனப் பிறவி, கடவுளாலேயே விபச்சாரிகளாகப் பிறப்பு-விக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அருகதை-யற்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னு-டைய தாய் விபச்சாரம் செய்திருப்பாள் என்கிற நம்-பிக்-கையோடுப் பிரா-யச்சித்தம் செய்து- கொள்-ளக் கூடியவன். பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும் வரையில் தகப்பனுடைய பந்தோபஸ்தில் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்ட பிறகு புரு-ஷ-னு-டைய பந்-தோபஸ்திலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்க வீணர்களாய்ப் போய்விடுவார்கள். பெண்களுக்குச் சொத்து இருக்கக் கூடாது. அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது, ரகசியம் சொல்ல கூடாது. இன்னும் இவைபோன்ற எத்தனையோ நிபந்-தனைகள் தரும சாஸ்திரத்திலும் கலியுகத்திற்கு, ஆதாரமான பராசரஸ்-மிருதியிலும் மற்றும் அவைகளை ஆதரிக்கும் இதிகாசப் புராணங்-களிலும் சொல்லப்-பட்டிருக்கிறது.
இவைகளை (இந்த புஸ்தகங்களையும் சாதிரங்-களையும்) ஒப்புக் கொள்ளுகிறவனும் உண்மையான சநாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளுகிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்பதே தான் எனது அபிப்-பிராயம்.
இந்த விஷயத்தில் திராவிட தர்மமோ, சமண தருமமோ எல்லாம் ஒரேவித யோக்கி-யதைக் கொண்டதே என்பது எனது அபிப்பி-ராயம். தெய்வத் தன்மை பொருந்தியவரென்று சொல்லும் திருவள்ளுவர் என்பவர் கூட தம் பெண் சாதியை விபச்சாரியா பதிவிரதையா என்று பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு மணலை சோறாகச் சமைக்கச் சொல்லி அந்த அம்மாளும் அது போலவே சமைத்துப் போட்ட பிறகே தான் கலியாணம் செய்து கொண்ட-தாகச் சொல்லப்-படுகிறது. இந்தப் படி பரீட்சை செய்து பார்த்தால் இன்றையதினம் உலகத்திலுள்ள பெண்கள் எல்லாம், இங்கு இருக்கிற பெண்கள் எல்லாம் விபசாரிக-ளென்று தான் நாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரியாலும் மணலை அரிசிச் சாதமாக சமைக்கவோ மழை பெய்ய சொல்லவோ, பச்சை வாழைத்தண்டுவைக் கொண்டு சமையல் செய்யவோ முடியாதென்று சொல்ல வேண்டியிருக்கிறது. வேறு எந்தக் காரியத்துக்காக-வும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்ப தாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்-பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும். இந்து மத புராண இதிகாசங்களில் புருஷன் தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதாக-வும், புருஷன் குஷ்டரோகியாகி விட்ட-தால் அவனைக் கூடையில் சுமந்து கொண்டு போன-தாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்-படுகிறது. எவ்வளவு அக்கரமும் கொடுமையு-மானக் கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள் நளாயினியைப் போல் இருப்-பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்று விடுவேனே-யொழிய குஷ்ட ரோகியை சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். பெண்கள் விபச்சாரிகள் என்பதை ஆதரிக்க எழுதி வைத்த ஆதாரங்களில் ஒன்று தான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரவுபதை என்பவள் தனக்கு அய்ந்து புருஷன் மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால்தான் விபாச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லா-மலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அரிச்சந்திர புராணத்தில் தன் பெண் ஜாதியை பல சொத்துகளில் ஒன்றாகக் கருதி வேறு எவனுக்-கோ விலைக்கு விற்றதாகவும், அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமை என்பதை ஒப்புக் கொண்டு வாங்கப் பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு புண்ணிய புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதிமார்களைக் கூட்டிக் கொடுத்ததாக-வும் அந்தப் பெண்களும் அப்புருஷர்கள் வாக்கைத் தட்டக்கூடாது என்று கருதி அடியார்-களிடம் போய் படுத்துக் கொண்டதாகவும் சொல்லப்-பட்டிருக்கிறது. மற்றும் சில நீதிக் கதைகளில் தங்கள் புருஷன்மார்களுடைய வைப்பாட்டி-களுக்குத் தொண்டு செய்ததாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்ட-தாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்-வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கிக் கொண்டு ராஜாவுக்கே கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் நம்முடைய பழைய அரசர்கள் ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்த-தாகவோ, பெண்சாதிகளை சமமாகவோ காண் பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவ-தாயிருந்தாலும் அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இது வரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டு வந்ததெல்லாம் வெறும் புரட்டும் முன்னுக்குப் பின் முரணுமாய் முடிந் திருக்கிறதே தவிர காரியத்தில் உண்மையாகப் பெண்கள் விடு-தலைக்கு மார்க்கங்கூட கண்டுப்பிடிக்கப்பட-வில்லை என்பது தான் எனது அபிப்பிராயம். பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்-தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரகாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுதலையை உண்டாக்காது. மற்றும் பெண்-களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்-கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்-தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிக-மாக அடி-மைகள் ஆவார்களா? சுதந்தர-மடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.
(31.5.1930இல் கள்ளிக்கோட்டையில் நடைபெற்ற S.N.D.P. யோகம் என்று சொல்லப்படும் தீயர் மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது-8.6.1930 குடிஅரசு இதழில் வெளியானது).

கல்யாண ரத்து தீர்மானம்

ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாகரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றுபோலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாகத் தெரிய வருகிறது.
அன்றியும் 3 மணி நேரம் அத்தீர்மானத்தின் மீது, பல பெண்கள் கூடி பலமான வாதப்பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்று விட்டாலும்கூட இந்தச் சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக்கின்றது.
ஏனெனில் கலியாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளைக் காதினால் கேட்கவே நடுங்கி கொண்டிருக்கும் கோடிக் கணக்கான, ஆண்களுக்கு அடங்கி  அடிமையாய்க் கிடந்து வந்த பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிறர்க்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் கடவுள் போலவே பாவிக்க வேண்டுமென்றும், கணவன் குஷ்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய், அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லட்சணமென்றும்.
பெண்களுக்குக் கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில், கலியாண ரத்து என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்குச் சுதந்திரம் என்றும் சொல்லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும், அதுவும் பெண்களையே அதைப் பற்றி பலர் பேசி வாதப் பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படுவதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல.
அது மாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும்படி அதற்கு ஓட்டுகிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்து கூடிய சீக்கிரம் பெண்ணுலகு விடுதலை பெற்று விடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக்கின்றோம்.
குடிஅரசு -  துணைத்தலையங்கம் - 21.12.1930

 -விடுதலை,13.9.14

சனி, 27 டிசம்பர், 2014

தொழிலாளர்களுக்காக தன் உயிரை இழந்த பெண்



1946இல், டெக்சாசில் பிறந்தார் கரென் சில்க்வுட்.. நடுத்தரக் குடும்பம். எந்த விஷயத்திலும் உறுதியாக நிற்பார். அறிவியலும் கணிதமும் விருப்பமான பாடங்கள். மருத்துவத் தொழில்நுட்பத்தை லாமர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 18 வயதில், பில் மெடாஸைச் சந்தித்தார். பில்லுக்கு வேலை கிடைத்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
க்ரெசன்ட் சிட்டியில் கெர்மெக்கி எண்ணெய் நிறுவனம் புதிதாக அணுசக்தி நிறுவனத்தைத் தொடங்கியது. அங்கே வேலைக்குச் சேர்ந்தார் சில்க்வுட். சிரத்தையாக வேலை செய்ததால் விரைவிலேயே முக்கியமான தொழிலாளராக மாறினார். புளூட்டோனியம் துகள்களை இரும்புக் குழாய்க்குள் அடைத்து வெளிவரும்போது, கசிவு ஏற்பட்டிருக் கிறதா என்பதைச் சோதிக்கும் பணி சில்க்வுட்டுக்கு.
ஆரம்பம் முதல் முடியும் வரை இந்த வேலை மிகவும் ஆபத்தானது. முகமூடி, கோட், கையுறை அணிந்து கொண்டுதான் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். புளூட்டோனியத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உடலுக்கு மிகுந்த தீங்கை விளைவிக்கக்கூடியது. அணுசக்தி மூலம் எரிபொருள் தயாரிக்கும் பணிக்கு அந்தக் காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.
இதனால் உற்பத்தியை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்தது. தொழிலாளர்கள் இரண்டு ஷிப்டுகள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். நீண்ட நேரம் கவச உடைகளுடன் நின்றுகொண்டே வேலை செய்வது மிகவும் கொடுமையானது. குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கொடுக்க வேண்டும் என்பதால் வேலையை விரைவுபடுத்தச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
18 வயதிலிருந்து 21 வயது வரை இருந்த இளம் தொழிலாளர்களும் கூட சோர்ந்து போனார்கள். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் ஆரம் பித்தனர். 3 வாரங்கள் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம், தோல்வியைச் சந்தித்தது. இதன் பிறகு தொழிற் சங்கம் மூலம் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு பற்றி ஆராயும் பொறுப்பு சில்க்வுட்டுக்கு வழங்கப்பட்டது. தேநீர், உணவு இடைவேளை நேரங்களில் சில்க்வுட் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சோதனை செய்வார். புளூட்டோனியம் கசியும் பகுதிகள், பாதுகாப்புக் குறைபாடு போன்றவற்றை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். இந்தச் செயல்பாடு நிர்வாகத்துக்குத் தெரியாது.
நிர்வாகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகளையும் செய்து வந்தார் சில்க்வுட். அதனால் தொழிலாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வந்தனர். சக மனிதர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்க வேலைகளை சில்க்வுட் மனநிறைவோடு செய்துவந்தார். தொடர்ச்சியான சோதனைகளுக்குப் பிறகு, தான் சேகரித்த தகவல்களை நிபுணர்களிடம் காட்டினார் சில்க்வுட்.
ஆபத்தான புளூட்டோனியம், யுரேனியம் பயன்படும் அந்த இடத்தில் பாதுகாப்பு என்பதே இல்லை என்பதும், இப்படி இருப்பதால் தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதும் தெரிய வந்தது. தொழிற்சங்கத்தில் சோதனை முடிவுகளை ஒப்படைத்தார் சில்க்வுட். நிர்வாகம் எந்தக் குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள வில்லை.
தொடர்ச்சியான உற்பத்தி நடைபெற்று வந்ததால், சுத்தம் செய்வதற்குக்கூட அவகாசம் இல்லை. பல தொழி லாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஒருநாள் வீட்டுக்குத் திரும்பிய சில்க்வுட், கைகளைக் கழுவும்போது புளூட்டோனியம் துகள்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடல், உடைகள் என எங்கும் புளூட்டோனியம். உடனே தன்னுடைய சிறுநீரைச் சேகரித்து, மருத்துவரிடம்  பரிசோதித்துக் கொண்டார்.
முடிவுகளுடன் நிர்வாகத்திடம் சென்றபோது, நிர்வாகத்துக்குப் பிடிக்காத தொழிலாளியாக மாறியிருந்தார் சில்க்வுட். நிர்வாகம் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கமிட்டி அமைத்து ஆராய்வதாகச் சொன்னது. ஆனால், வேலை நடந்து கொண்டே இருந்தது. சில்க்வுட், அவரது இரண்டாவது கணவர் ஸ்டீபன், நண்பர் மூவரும் மருத்துவரிடம் சென்றனர். ஸ்டீபனுக்கும் நண்பருக்கும் பிரச்சினை இல்லை. சில்க்வுட்டோ புளூட்டோனியத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் பிறகு, அவர் ஒவ்வொரு விஷயத்தையும்  ஆவணப்படுத்த ஆரம்பித்தார். எல்லாத் தகவல்களையும் கவனமாகசேகரித்தார். எப்படியாவது தொழிலாளர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் டேவிட் பர்ன்ஹாம் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருந்தார்.
1974,நவம்பர் 13... ஆவணங் களை பத்திரமாக ஒரு பைக்குள் வைத்தார் சில்க்வுட். தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு டேவிட்டைச் சந்திப்பதற்காகத் தனியாகக் கிளம்பினார். 48 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சந்திப்பு நடைபெற இருந்தது.
பத்திரிகைகளில் செய்தி வந்தால் இந்த விஷயம் அரசாங்கத்தின் கவனத்துக்குப் போகும். விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பினார் சில்க்வுட். பக்கத்து இருக்கையில் இருந்த ஆவணங்களைப் பார்த்துக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் மோசமான விபத்து நிகழ்ந்தது. சில்க்வுட் படுகாயமடைந்து கிடந்தார்.
தகவல் அறிந்து காவல்துறை, உறவினர்கள், நண்பர்கள் வந்தபோது சில்க்வுட்டின் இறந்த உடல் மட்டுமே காரில் கிடந்தது. அவர் சேகரித்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருந்தன. ஆல்கஹால் சாப்பிட்டிருந்தார், போதைப்பொருள் உட் கொண்டிருந்தார் என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டு, அதை ஒரு விபத்தாக மாற்ற ஆரம்பித்தனர்.
விபத்து என்றால் ஆவணங்கள் எங்கே போயிருக்கும்? பல்வேறு யூகங்கள், பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும் கிளம்பின. வழக்கு நடைபெற்றது. இறுதியில் கெர்மெக்கி நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது உறுதியானது. சில்க்வுட் குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

சில்க்வுட் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகம், அந்தத் தொழிற்சாலையை மூட நேர்ந்தது. சில்க்வுட் மரணத்துக்கான காரணம் இன்று வரை கண்டறியப்படவில்லை. ஆனால், அவர் ஏற்படுத்திய தாக்கம் பல தொழிற்சாலைகளில் பிரதி பலித்தது. தொழிலாளர்களின் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் அக்கறை எடுத்து, தன் உயிரையே இழந்த சில்க்வுட் தொழிலாளர்களின் ஹீரோவாக என்றும் இருப்பார்!

-விடுதலை,23.12.14

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மரண தண்டனையிலிருந்து காக்க போராடும் தாய்



டெஹ்ரான், அக். 18- ரெய்னா ஜபாரி என்னும் இளம்பெண்ணின் தாய் 6.10.2014 அன்று மனித உரிமை ஆர்வலர்களுக்கு, தன் மகளை மரணதண்ட னையிலிருந்து காக்க வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அடுத்த நாள் காலை யில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. ரெய்னாவுக்காக பன்னாட்டளவில் குரல் ஒலிக்கத் தொடங்கியதா லேயே தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைக் கப்பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. அவருடைய தாயார் தண்டனையை நிரந்தரமாக நிறுத்திவிட அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
26 வயது உள்ள ரெய்னா கடந்த 7 ஆண்டுகளாக சிறைவாசத்தில் உள்ளார். 19 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவளை பாலியல் வன்முறை செய்ய முயன்றவனைக் கொலை செய்துள்ளதாக வழக்கு. தன்னைப் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்க முயன்ற அவனைத் தாக் கியதென்னவோ உண்மை தான். ஆனால், கொலை யில் தொடர்புடையவர் வேறொருவர் என்று ரெய்னா கூறுகிறார்.
இதன்மூலம் அக் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
பன்னாட்டு மன்னிப்பு சபையுடன் இணைந்து மனித உரிமை ஆர்வலர் களும் ரெய்னாவை மீட் கும் முயற்சியில் அவரு டைய தாயுடன் சேர்ந்து களமிறங்கியுள்ளனர்.

18-10-2014 விடுதலை நாளிதழ்

பெண்கள் தினம் எப்போது வந்தது?


ஆண்டுதோறும், மார்ச் 8ஆம் தேதி பன்னாட்டு பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளா தாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண் களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர் கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந் தவர்கள் அல்லர் என்ற நிலையை உருவாக்கு வதற்காகவுமே பன்னாட்டு பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதன் முதலில் 1909இல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிப்.,28ஆம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
பிறகு, கோபன்ஹேகனில் 1910இல் நடந்த பன்னாட்டு மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, பன்னாட்டு பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911இல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, பன்னாட்டு பெண்கள் தினம் மார்ச் 19ஆம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின், மேற்கத்திய, அய்ரோப்பிய நாடுகள் 1913இல் ஒன்று கூடி, மார்ச் 8ஆம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி அய்.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, பன்னாட்டு பெண்கள் தினம் மார்ச் 8ஆம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
அதன் பின்னரும் பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு உரிய உரிமை, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. 1946இல் தான் பெண்கள் ஓரளவு உரிமை பெற துவங்கியுள்ளனர் என்று அங்கீகரித்து, அது முதல் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி, பன்னாட்டு பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விடுதலை28.9.10

இந்தியாவின் முதல் பெண்கள்


இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி (நாயுடு)
இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967)
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்)
இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989)
இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்
இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947_1949)
இந்தியாவின் முதல் மத்திய (காபினெட்) அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கௌர் (1957)
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி (1966_1977)
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய் ஜோஷி (1886)
இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் லலிதா (1937)
இந்தியாவின் முதல் அய்.ஏ.எஸ். அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)
இந்தியாவின் முதல் அய்.பி.எஸ். கிரண் பேடி (1972)
இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் சுவர்ணகுமாரி தேவி
இந்தியாவின் முதல் விமானி காப்டன் துர்கா பானர்ஜி
இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா
இந்தியாவின் முதல் விமானப்படை விமானி அரிதா கவுர்
இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனைகள் மேரி டிசௌதா, நீலிமா கோஸ்
இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி (தமிழ்நாடு)
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா (யாதவ்).
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி.
புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய்.
இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். ரமாதேவி
சிறந்த பெண் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் வசந்தா கந்தசாமி.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முத்துலட்சுமி (ரெட்டி) (1926)
இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் கார்னிலியா சொராப்ஜி (1923, அலகாபாத்)
இந்தியாவின் முதல் பெண் மேயர் சுலோச்சனா மோதி.
இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர் கர்னிலியா சோராப்ஜி.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

-    பெரியார் பிஞ்சு மார்ச்2012

ஜென்னி மார்க்ஸ்

ஜென்னி மார்க்ஸ் - JENNY VON WEST PHALEN (1814-1881)
உலகில் உள்ள தொழிலாளர்கள் சமுதாய நலன் நாடிச் சிந்திய வியர்வைத் துளிகளின் ஒட்டுமொத்த விலையைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டிய சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். உலகம் முழுதும் பாராட்டும் மேதையைக் கருத்தொருமித்துக் காதலித்துக் கைப்பிடித்தவர் ஜென்னி. கார்ல் மார்க்ஸிடம் ஜென்னி கண்டவை - அகங்காரமில்லாத அறிவு  - தன்னலமற்ற தியாகம் - பெண்களை மதிக்கும் பண்பு. இத்தகு தகுதிகள் வாய்ந்த தனது கணவனை மேலும் மேலும் உயர்த்தியவர். சிந்திக்க வைத்தவர்தான் ஜென்னி. ஜென்னியைப் பற்றி கார்ல் மார்க்ஸ் சொன்னவை: உலகிலுள்ள பூக்களிலெல்லாம் மிகச் சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அப்பூவும் கூட இவரிடம் தோற்றுப் போகும் என்பதாகும். ஜென்னி இயற்கையிலேயே கொள்ளை அழகு! அவள் தோற்றத்தால் மட்டும் அழகானவள் என்று எண்ணி விடாதீர்கள். உயர்ந்த எண்ணங்களால் - மனித நேயம் சார்ந்த சிந்தனை வளத்தால் - நெஞ்சத்து நல்லவர் என்ற நடுவு நிலைமையால் - அவள் அழகு மேலும் சிறப்படைந்தது.
ஜென்னி மிகச் சிறந்த பூவினும் சிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ள செய்தி நம் சிந்தைக்கு உரமூட்டுவதாய் உள்ளது; ஏனெனில், மலர் ஒரு நாள் மட்டும் இவ்வுலகில் வாழ்கிறது. அந்த ஒரு நாளிலேயே சமுதாயத்திற்கு வாழும் முறையைக் காட்டிச் செல்கிறது. மலரானது தன்னைத் தேடிவரும் வண்டுக்குத் தேனைத் தந்து - அங்கு உலவிவரும் தென்றலுக்கு இனிய மணத்தைத் தந்து -பாடிவரும் பாடகனுக்குத் தன்னையே தந்து தியாகத்தின் திருவுருவாய் விளங்குகிறது; அம்மலர் வாடி, சருகாகி நிலத்தில் வீழ்ந்தபோதும் தன்னை ஈந்த செடிக்கு உரமாகித் தன் இனம் வளரவும் செழிக்கவும், இவ்வுலகமே பூக்காடாகி நீடித்த மணம் பரப்பவும் வாய்ப்பளிக்கிறது. இத்தகு மலரினைப் போன்று ஜென்னி உழைக்கும் மக்கள் வறுமையைப் போக்க, தான் வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்ட நிலையிலும் - தன் உயிரினும் மேலான குழந்தைகள் நால்வர் வறுமையால் நோய்வாய்ப்பட்டு இழந்த போதும் - தன்னை நோய் வாட்டிய போதும் தனது கணவனது சிந்தனை ஆற்றலை வளப்படுத்துவதிலும், சமுதாய நலனைப் பேணுவதிலும், மாந்தர் அனைவரும் நலவாழ்வு வாழவேண்டும் என்பதிலேயுமே உறுதியாக இருந்தார்.
பிறப்பும் இளமையும்: ஜெர்மனியில் ரைன் நதிக்கரையில் 1814ஆம் ஆண்டில் செல்வமும், செல்வாக்கும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்தான் ஜென்னி. இவரது தந்தையார் லுத்விக் வோன்வெஸ்ட் ஃபிலான்; தாயார் கரோலின் ஹ்யூபெ. ஜென்னியின் குடும்பத்தினர் கவிதைப் பிரியர்கள். ஜென்னியின் வீட்டிற்கு அருகில் வாழ்ந்தவர் கார்ல் மார்க்ஸ். இவர் இசைப் பிரியர். ஷேக்ஸ்பியரின் கவிதைகளை விரும்பிப் படித்து மனப்பாடம் செய்து மீண்டும் மீண்டும் ஒப்புவிப்பதில் இன்பம் கண்டவர். கார்ல் மார்க்ஸ் தனது 17 வயதில் அதாவது 1835ஆம் வருடத்தில் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது தனது எதிர்கால வேலை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். ஜென்னி கார்ல் மார்க்சை விரும்பி ஏற்றுக் கொண்டதற்கு அக்கட்டுரை வரிகள்தான் காரணம். அந்த வரிகள்: மனிதன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்லன்; அவன் சக மனிதர்களுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளனாக இருக்கலாம் - நல்ல நிர்வாகியாக இருக்கலாம்; ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது. மனித குலத்தின் பெரும்பான்மைக்கும் பயன்படக்கூடிய ஒரு வேலையைச் செய்தால் - அதில் வரும் எந்தத் தடையும் நம்மை ஒன்றும் செய்து விடாது. நம் தியாகத்தால் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதில் இருக்கும் உண்மையான மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அது போன்ற பணியை நான் விரும்பி ஏற்கப் போகிறேன். இவ்வரிகள்தான் பிற்காலத்தில் கார்ல் மார்க்சைப் புரட்சிமிக்க சிந்தனையாளர் என்று மக்கள் வியந்து போற்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தன எனலாம்.
திருமண வாழ்வும் - சந்தித்த இடையூறுகளும்:
1843ஆம் ஆண்டு 13ஆம் நாள் ஜென்னி _ மார்க்ஸ் திருமணம் ஜெர்மனி நாட்டில் க்ருஸ்னாக் என்னும் ஊரில் நடைபெற்றது. அத்துடன் ஜென்னியின் வசதியான வாழ்வு முடிவுக்கு வந்தது. அக்கால கட்டத்தில் (1843இல்) கார்ல் மார்க்சின் சோசலிசக் கருத்துகளுக்கு ஜெர்மனி அரசு பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தது. அதனால் கார்ல் மார்க்சுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. குடும்பம் வறுமையின் விளிம்பில் தவித்தது. மிகச் சிறிய அறையில் ஒரு வேளைச் சாப்பாட்டுடன் தத்துவ விவாதங்களில் சிறிதும் சலிப்படையாமல் தன் கணவனுடன் கலந்துரையாடுவது ஜென்னிக்கு மிகவும் பிடித்த செயல். 1844ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி அவர் முதல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்த நேரம் ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆட்பட்ட மார்க்சும் ஜென்னியும் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரீசுக்குச் சென்றனர். ஆனால், ஜெர்மன் அரசு பிரான்ஸ் நாட்டிலும் இவர்களை நிம்மதியாக விடவில்லை. இந்நிலையில் ஜென்னி தன் கைக்குழந்தையுடன் பிரான்சில் தங்க நேர்ந்தது. பிரான்சு அரசாங்கக் கட்டளைப்படி மார்க்ஸ் 24 மணிநேரத்தில் அந்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பெல்ஜிய நாட்டிற்குச் சென்று தன்னுடைய தோழர்களுடன் கலந்துரையாடிய நேரத்தில் பெல்ஜியப் போலீசார் இவரையும் இவரைச் சார்ந்தவர்களையும் சுற்றி வளைத்தனர். அனைவரும் தப்பிவிட்டனர். மார்க்ஸ் மட்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழலில் கணவனைத் தேடிவந்த ஜென்னி சிறை அதிகாரிகளால் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டார். கொடிய குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இச்செய்தி காட்டுத்தீயெனப் பரவியது. அந்நாட்டு மக்களிடம் கார்ல் மார்க்ஸின் கருத்துகளுக்குப் பெரும் ஆதரவு இருப்பதை அறிந்த அரசு- இயந்திரம் அவர்களை விடுதலை செய்தது. என்ன நடக்கும் என்று தெரியாத சூழ்நிலையில் இவர்கள் தம் கொள்கைகளையே உற்ற துணையாகக் கொண்டு இலண்டன் மாநகர் சென்றனர்.
வறுமையின் பிடியில் ஜென்னி:
தொடர்ந்து நாடு கடத்தப்பட்ட காரணத்தால் இவர்கள் குடும்பத்திற்குப் போதிய வருவாய் இல்லை. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இன்றி சொல்லொணாத் துயரில் சிக்கினர். இந்நிலையில் ஜென்னி குழந்தைகளின் தேவைகளைக் கூட மார்க்சிடம் சொல்வதில்லை. இலண்டனில் வீட்டு வாடகை கொடுக்கவும் முடியாத சூழலில் மார்க்சின் கோட்டும், சூட்டும் அடகுக் கடைக்குப் பிரயாணம் செய்தன. அதனால் இயல்பு வாழ்வு வாழவும் எங்கும் பிரயாணம் செய்யவும் இயலவில்லை. தான் சிந்தித்தவற்றை எழுத பேப்பர் வாங்கவும் பணமில்லை. இருப்பினும் அரசியல் சார்ந்த பொருளியல் ஆராய்ச்சியில் ஜென்னியும் _ மார்க்சும் ஓயாது ஈடுபட்டனர். மார்க்ஸ் எழுதும் கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றை ஜென்னி பிரதியெடுப்பார். தன்னுடைய கருத்துகளை மார்க்சுடன் விவாதித்து பத்திரிகைகளில் இச்செய்திகள் வெளிவருவதற்கு உற்ற துணையாக இருப்பார்.
இக்கால கட்டத்தில் அவர்களின் பச்சிளம் குழந்தை பிரான்சிஸ்கா மரணமடைந்தாள்.
அன்பு பிரான்சிஸ்கா, நீ பிறந்தபோது தொட்டில் வாங்கப் பணமில்லை,
நீ இறந்தபோது சவப்பெட்டி வாங்கப் பணமில்லை..... என்று மகளைப் பிரிந்த ஜென்னியின் உள்ளக் குமுறல்கள் நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது. சான்றாண்மைக்கு விளக்கமாகத் திகழ்ந்த ஜென்னி தன் வறுமையை வெளிப்படுத்தவில்லை.
மூலதனம் வெளியீடு:
ஒவ்வொரு சாதனையாளருக்கும் பின்புலமாகவும் உந்து விசையாகவும் சிலர் இருப்பர். அதற்கு இலக்கணமாக விளங்கியவர் ஜென்னி. மார்க்சின் எழுத்துகளால் உந்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் சிந்திக்கத் துவங்கியது _ ஆளும் அதிகார வர்க்கம் நடுநடுங்கியது. ஒரு சிலர் மட்டும் செல்வச் செழிப்பில் இருக்க பெரும்பாலான உழைக்கும் மக்கள் வறுமையில் வாடக் காரணம் என்ன? என்பதைத் தெளிவாகச் சிந்தித்து அதற்கான விளக்கங்களை மூலதனம் என்ற நூலின்மூலம் எளியவருக்கும் புரியும் வகையில் விளக்கிச் சென்றுள்ளார். உலக வரலாற்றையே புதுப்பாதையில் செலுத்திய மூலதனம் பற்றிய அறிமுகம் வருமாறு:
உலகில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் யாவும் உழைப்பாளர்களின் உழைப்பின் சக்தியில் தோன்றியவை. - இது முதல் விதி.
இவ்விதி அனைவரும் அறிந்த எளிய உண்மை.
உழைக்கும் உழைப்பாளியின் சக்தி இரண்டாகப் பிரிகிறது. 1. கொடுக்கப்பட்ட கூலி 2. கொடுக்கப்படாத கூலி (Surplus Value) இந்தக் கொடுக்கப்படாத கூலியின் மதிப்பு அதிகம். இதுவே இன்றைய உலகின் பெரும் ஆதிக்கக்காரர்களின் சொத்து மதிப்பாகும். அதுவே உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மூலதனமாகும் -- இது இரண்டாம் விதி.
இந்த மூலதனம் உலகில் ஒருசில ஆதிக்கவாதிகளின் உரிமையில் உள்ளது. இந்த மூலதனக் குவிப்பு (கொடுக்கப்படாத கூலி) சமூகத்திற்கும் - சமூக மக்கள் அனைவருக்கும் உரியது. - இது மூன்றாம் விதி.
இம்மூன்று விதிகளையும் சுருக்கமாகச் சொல்வதானால், உழைப்பு; உழைப்புக்கு ஏற்ற ஊதியம் - ஊதியம் உழைத்தவனைச் சென்று சேரவேண்டும்.
இத்தத்துவம் 1867ஆம் ஆண்டு மூலதனம் என்ற நூலாக செப்டம்பர் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது; ஜென்னி - மார்க்ஸ் ஆகியோர் 16 ஆண்டுகள் சிந்திய வியர்வைத் துளிகள் தன் பலனை அளித்துத் தொழிலாளர் வாழ்வில் நிரந்தர விடியலை ஏற்படுத்தியது. இன்றும் இந்நூல் உலகின் தலைசிறந்த நூலாகக் கருதப்படுகிறது.
ஏங்கெல்ஸ்: ஜென்னி - மார்க்ஸ் ஆகியோர் வாழ்வில் அவ்வப்போது தோன்றிய வசந்தம் - ஏங்கெல்ஸ். மார்க்ஸ் மறைந்தபோது மூலதனத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியிடப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் மூலதனத்தின் 2ஆம் பாகமும் - 3ஆம் பாகமும் வெளிவர முழுப்பங்கு வகித்தவர்தான் ஏங்கெல்ஸ். இவர் ஜென்னிக்கும் மார்க்சுக்கும் தத்துவரீதியாகவும் - பொருளாதார ரீதியாகவும் துணை நின்றதோடல்லாமல் _ தன் மறைவுக்குப் பின் தன் சொத்தை எல்லாம் ஜென்னி - மார்க்சின் குழந்தைகளுக்கு உரிமையாக்கியவர். ஏங்கெல்ஸ் என்ற அருமை  நண்பர் இல்லையெனில் ஜென்னி _ மார்க்ஸ் ஆகியோரின் உழைப்பின் பயன் உலகுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்திருக்காது. இவர்களின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் சாறுதான் பாட்டாளிகள் இழப்பதற்கு அவர்களின் அடிமைத் தளைகளைத் தவிர ஏதுமில்லை; ஆனால், பாட்டாளிகள் பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது. ஆகவே, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். இச்சாறு இன்றும் தொழிலாளர்களுக்கு உயிரூட்டுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிக்க இவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராக தந்தை பெரியார் நம் நாட்டில் வருணஜாதி வேற்றுமைகளை வேரோடு அழிக்க அறிவாயுதம் ஏந்தினார்.
எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. 1881ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் உயர்வான காதலுக்கும், பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இலக்கணமாக விளங்கிய ஜென்னி என்ற மலர் பூமியில் உதிர்ந்தது. இவர்தம் சிந்தனைகள் ஏதும் இல்லாத மக்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க சக்திகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்றும் இருந்து கொண்டுள்ளது.
-பெரியார் பிஞ்சு,மார்ச்,2012