புதன், 29 மே, 2019

திருநங்கை திருமணம் பதிவு தமிழகத்தில் முதல்முறை



தூத்துக்குடி, மே 22- -தூத்துக்குடியில் சிவன் கோயிலில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற திருநங்கையின் திருமணம் உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவால் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த அருண்குமாரும் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சிறீஜா என்ற திருநங்கை யும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், சிறீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2018ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தூத்துக்குடி சிவன்கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவில் அலுவலகத்தில் 600 ரூபாய் முன்பணம்செலுத்தி அருண்குமார், சிறீஜா பெயர் பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் செய்வதற்காக அருண்குமாரும், சிறீஜாவும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்தனர். இவர்க ளுக்கு அங்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அந்த திரு மணத்தை பதிவுசெய்ய முடியாது என கோவில் நிர்வாகம் மறுத்ததால்தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் சந்திரசேகரன் மூலம் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி சுவாமிநாதன் திருநங்கை திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில்தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவாளர் ஜெயகாந்தன், அருண்குமார் சிறீஜா திருமணத்தை பதிவு செய்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு நீதி மன்ற உத்தரவின் பேரில் தங்கள் திருமணம் பதிவு செய்யப் பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தான் அரசு வேலைக்கு செல்வேன் என்றும், எனது கணவருக்கு குழந்தை பெற்று தருவேன் என்றும் சிறீஜா தெரிவித்தார். தமிழகத்தி லேயே திருநங்கை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப் பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 22. 5 .2019

வரலாற்று சாதனை மக்களவையில் முதல் முறையாக 78 பெண் உறுப்பினர்கள்!



புதுடில்லி, மே 26 நாட்டின் 17-ஆவது மக்களவையில் இதுவரை இல்லாத அளவு பெண்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. வரலாற்று சாதனையாக, இந்த முறை 78 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கால் பதிக்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடை பெற்று முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இந்த தொகுதிகளில் தேர்தல் களம் கண்ட 724 பெண் வேட்பாளர்களில், 78 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளனர்.

மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகள் என்று வரும்போது மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர். நாடாளு மன்றம் மற்றும் சட்டப் பேரவை களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, மாநி லங்களவையில் நிறைவேற்றப் பட்டும், மக்களவையில் நிறைவேற் றப்படாமல் உள்ளது.

இந்நிலையில், 17-ஆவது மக்களவைக்கு 14 சதவீத பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 11 பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போதைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 41 பேர் மீண்டும் போட்டியிட்ட நிலையில், அவர் களில் 27 பேரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கடந்த 1952-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் மக்களவை யில் வெறும் 24 பெண் நாடாளு மன்ற உறுப்பினர்களே இருந்தனர். 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 52 பெண்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர் தலில்(16-ஆவது மக்களவை) 64 பெண்கள் நாடாளுமன்ற உறுப் பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதை ஒப்பிடும்போது, இந்த முறை பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்றது வர லாற்று சாதனையாகும். பெண் வேட்பாளர்களை கள மிறக்கிய கட்சிகள்..: இந்த முறை ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டிக் கொண்டு பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. காங்கிரஸ் சார்பில் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களும், பாஜக சார்பில் 53 பெண் வேட் பாளர்களும் போட்டியிட்டனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 23 பேரும், பகுஜன்சமாஜ் சார்பில் 24 பெண்களும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 பெண் வேட்பாளர்களும் தேர்தல் களம் கண்டனர். அதுமட்டுமன்றி, சுயேச்சையாக 222 பெண்கள் போட்டியிட்டனர். உத்தரப் பிர தேசத்தில் அதிகபட்சமாக 104 பெண்கள் போட்டியிட்டனர். அதையடுத்து தமிழகத்தில் 64 பெண்களும், பிகாரில் 55 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பெண்களும் போட்டியிட்டனர்.

மூன்றாம் பாலினத்தவர்..: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 4 பேர் சுயேச்சையாக போட்டியிட்டனர். மூன்றாம் பாலினத்தவரை வேட்பாளராக நிறுத்திய ஒரே கட்சி ஆம் ஆத்மி யாக இருந்த போதிலும், போட்டியிட்ட அனைத்து மூன்றாம் பாலி னத்தவரும் தேர்தலில் தோல்வியை தழுவினர்.

மக்களவையில் 27 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நடந்து முடிந்த மக்களவைத் தேர் தலில் 27 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் மக்களவையில் முஸ்லிம் நாடா ளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. நாட்டு மக்கள்தொகையில் முஸ்லிம் மக்கள் சுமார் 20 சதவீதம் பேர் உள்ளனர். 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் முறையே 30 மற்றும் 34 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தனர். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது, இந்த எண்ணிக்கை 23-ஆக குறைந்தது. இந்நிலையில், இந்த முறை மீண்டும் முஸ்லிம் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள் ளது. முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 6 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். கேரளம் மற்றும் ஜம்மு-காஷ் மீரில் தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

1952-ஆம் ஆண்டு அமைக்கப் பட்ட முதல் மக்களவையில் வெறும் 11 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே இருந்தனர். மக்களவையில் கடந்த 1980-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 49 முஸ் லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 26 .5 .2019

குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய்க் கிருமிகளை அழிப்பது குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்ற பெண்மணி



மருத்துவ துறையில் விஞ்ஞானியாகவும் ஆளுமை யாளராகவும் விளங்கும் மருத்துவர் ககன்தீப் காங் இந்தியாவிற்கு ஒரு புதிய பெருமையை சென்ற வாரம் சேர்த்திருக்கிறார்.

இந்தியக் குடிமகளாக தனது அறிவியல் பங்களிப் பால் இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.

மனித குல பயன்பாட்டிற் காக, பாதுகாப்பிற்காக, உடல் நலத்திற்காக புதிய கண்டுபிடிப்புகள் காலத்தின் கட்டாயங்களாகின்றன.

பல்வேறு கால கட்டங் களில் விஞ்ஞான தேடல் கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு களை மனித சமுதாயத்திற்கு அன் பளிப்பு செய்துவரும் விஞ்ஞானிகளை 360 ஆண்டு களாக கவுரவித்து வருகிறது லண்டன் நகரில் செயல்பட்டு வரும் ராயல் சொஸைட்டி.

சர்வதேச அறிஞர் பெரு மக்களால் பெரிதும் மதிக்கப் படும் இந்த அமைப்பின் உறுப்பினராக இந்த ஆண்டு டாக்டர் ககன்தீப் காங் தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளார்.

இந்தப் பெருமையைப் பெரும் முதல் இந்திய பெண் மணி, டாக்டர் ககன்தீப் காங் ஆவார்.

இந்த ஆண்டு (2019) பல நாடுகளை சேர்ந்த 51 விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு மனித குலத்திற்கு அவர்கள் செய்த அரிய பங்களிப்பிற்காக ராயல் சொ சைட்டியின் உறுப்பினர் களாக தெரிவு செய்யப்பட் டுள்ளனர்.

மருத் துவர் ககன்தீப் தவிர அய்ந்து இந்திய விஞ்ஞானிகளும் இந்த பட்டி யலில் உள்ளனர்.

இந்தப் பெருமை பெரும் இந்தியர்களில் மருத்துவர் ககன்தீப் மட்டுமே பெண் மணி. மற்ற இந்தியர்கள் ஆண் விஞ்ஞானிகள்.

ராயல் சொசைட்டியில் அங்கீகாரம் கிடைப்பது.. கவுரவிக்கப்படுவது கனவி லும் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று என்பது உலக அரங்கில் புகழ் பெற்றிருக்கும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் தெரியும்.

அந்தக் காலத்து விஞ்ஞானிகளான அய்சக் நியூட் டன், சார்லஸ் டார்வின், மைக்கேல் ஃபாரடே, அல் பெர்ட் அய்ன் ஸ்டைன் போன்ற அறிவியல் ஜாம் பவான்கள் ராயல் சொ சைட்டியின் உறுப்பின ராகத் தெரிவு செய்யப்பட்ட வர்கள்.

கவுரவிக்கப்பட்ட வர்கள். அந்த வரிசையில் இந்திய பெண்மணி ஒருவருக்கு முதன்முதலாக இடம் கிடைத்திருப்பது சாதாரண விஷய மில்லை. , ராயல் சொஸைட்டி கி. பி 1660-இல் தொடங்கப்பட் டாலும், இந்த அமைப்பின் உறுப்பினர் ஆகும் தகுதியைப் பெற்ற முதல் இந்தியர் அர்தஷீர் கர்செட்ஜீ வாடியா. 1841-இல் தான் இவருக்கு இந்தப் பெருமை வழங்கப் பட்டது.


பிறகு இந்தப் பெருமை ஒரு சில இந்தியர்களுக்கே கிடைத்தது. விரல் விட்டு எண்ணி விடலாம்.

கணித மேதை சிறீனிவாச ராமானுஜத்துக்கு 1918லும், சுப்ர மணியன் சந்திரசேகருக்கு 1944லும், வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு 2003- லும், அஜய் குமார் சூடுக்கு 2015-லும், சுபாஷ் காட்டுக்கு 2017-லும் ராயல் சொசைட்டியில் "ஃபெல்லோ' கெரவம் வந்து சேர்ந்தது.

ஆனால் இந்தப் பெருமை பெற்றவர்களில் இந்திய பெண்மணி ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் ஏமாற்றத்தை தந்து வந்தது. அந்த குறையை டாக்டர் ககன்தீப் தீர்த்து வைத்திருக் கிறார்.

மருத்துவர் ககன்தீப் யார் ?

மத்திய அரசுக்கு சொந் தமான ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நிர் வாக இயக்குனராக டாக்டர் ககன்தீப் பணியாற்றி வரு கிறார். இந்த ஆராய்ச்சி நிலையம் ஃபரிதாபாத்தில் உள்ளது.

மருத்துவ துறையில் பிரபல விஞ்ஞானியாக இருக்கும் ககன்தீப், குழந்தை களைத் தாக்கும் ரோட்டா வைரஸ் போன்ற கிருமிகளை எப்படி ஒழிப்பது என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர். ககன்தீப் எழுதிய முன்னூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சர்வதேச அறிவியல் இதழ் களில் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் பல்வேறு குழுக்களில் டாக்டர் ககன்தீப் அங்கம் வகிக்கிறார்.

இந்தியாவில் பத்து தர மான நிறு வனங்கள் டாக்டர் ககன்தீபிற்கு விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.

டாக்டர் ககன்தீப் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல் லூரியில் 1982 முதல் 1991 வரை படித்தவர்.

1998 இல் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஹூஸ்டனில் சில காலம் ஆராய்ச்சியில் செலவு செய்த ககன்தீப் இந்தியா திரும் பினார்.

சிஎம்சி மருத்துவ கல் லூரியில் வயிறு-குடல் துறை யின் தலை வராகவும், நுண்ணுயிரியல் பேராசிரிய ராகவும் பணியாற்றியுள்ளார்.


குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் நோய் கிருமிகளை அழிப்பது குறித்து ஆராய்ச்சி களில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.

குழந்தைகள் நலனுக்காக ககன் தீப்பின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ராயல் சொ சைட்டியின் அங்கத்துவம் வழங்கப்பட் டுள்ளது.
-  விடுதலை நாளேடு, 28.5.19

ஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்



கான்பெர்ரா, மே 27- 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமை யிலான புதிய அமைச்சரவையில் அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக லின்டா ரெய்னால்ட்ஸ், வெளியுறவுத்துறை மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சராக மரிசே பய்னே உள்பட மொத்தம் 7 பெண்களுக்கு அமைச் சர்களாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களின் மூலம் அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடையும் என்று நம்புவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

-  விடுதலை நாளேடு 27. 5 .2019

சனி, 4 மே, 2019

முதல் முறையாக ராணுவ காவல் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு..!



புதுடில்லி, ஏப்.27ஆயுதப் படை வரலாற்றில் முதல்முறையாக, ராணுவ காவல் துறையில் காவலர்கள் பிரிவில் பெண்கள் இணைவதற்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவ காவல் துறையில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து மற்ற பணியிடங்களில் பெண்கள் இதுவரை நியமிக்கப்பட்டதில்லை. ராணுவ காவல் துறையில் முதல்முறையாக காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பிரிவில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ராணுவ காவல் துறையில் காவலராக சேர விரும்பும் பெண்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.  தகுதியுள்ள பெண் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கு  ஜூன் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். ராணுவ தலைமை தளபதியாக விபின் ராவத் பொறுப்பேற்ற பிறகு, பெண்களை ராணுவ காவல் துறையில் இணைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றனர்.

ராணுவ காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்களில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.  ராணுவத்துக்கு தேவைப்படும் நேரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பெண் ராணுவ காவலர்களின் பணிச்சூழல் இருக்கும்.

ராணுவ சட்டதிட்டங்களை வீரர்கள் மீறாது பாதுகாப்பது, போர் காலங்களில் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்வது, போர்க்கைதிகளை கையாள்வது, உள்ளூர் காவல் துறையினருக்கு தேவைப்படும் போது உதவி புரிவது உள்ளிட்டவை  ராணுவ காவல் துறையினரின் பணி களாகும்.

ராணுவத்தில் மருத்துவம், கல்வி, சட்டம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் மட்டுமே பெண்கள் இதுவரை பணி யமர்த்தப்பட்டனர்.

ஆண்கள் மட்டுமே பணியாற்றும் ராணுவ காவல் துறையின் காவலர் பணியிடங்களில் பெண்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கடந்த ஆண்டு கூறியது இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தில் 3. 80 சதவீதமும், விமானப்படையில் 13. 09 சதவீதமும், கடற்படையில் 6 சதவீதமும் மட்டுமே பெண்கள் பணியாற்றுவது குறிப்பிடத் தக்கது.

-  விடுதலை நாளேடு, 27.4.19