பல மைல் கல் தருணங்களை 2018இல் சந்தித்திருக் கிறார்கள் இந்திய வீராங்கனைகள். அவற்றில் சில முக்கியமான தடங்கள் இவை.
மேரிகோம்
மூன்று குழந்தைகளின் தாய், 36 வயது பெண் போன்ற தடைகள் எல்லாம் மேரிகோமுக்கு எப்போதும் கிடை யாது. சென்ற ஆண்டு மட்டும் அவர் 4 தங்கப் பதக்கங் களை வென்று இந்திய குத்துச்சண்டைப் பிரிவுக்குப் பெருமைசேர்த்தார். 2018இன் தொடக்கத்தில் இந்திய ஓபனில் தங்கப் பதக்கம் வென்ற மேரிகோம், ஆண்டு இறுதியில் டில்லியில் நடைபெற்ற உலக வாகையர் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று 2018ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். இடையே காமன்வெல்த், பல்கேரியாவில் நடைபெற்ற அய்ரோப்பியப் போட்டி யிலும் இவருக்கே தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
பி.வி. சிந்து
2018-லும் பி.வி. சிந்துவை நோக்கி வெற்றிக் காற்று பலமாக வீசியது. இரண்டு பட்டங்கள், காமன்வெல்த், ஆசியப் போட்டி, உலக வாகையர் பட்டப் போட்டிகளில் 3 வெள்ளிப் பதக்கங்கள் என வெற்றி மேல் வெற்றி குவிந்தது. இந்திய ஓபன், தாய்லாந்து ஓபனில் இரண்டாமிடத்தைப் பிடித்த சிந்து, இறுதியாக பி.டபுள்யு. உலக டூர் ஃபைனல்ஸ் பட்டப் போட்ட்டியில் வாகையர் பட்டம் வென்று தொடர்ச்சியாக இறுதிப் போட்டித் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மணிகா பத்ரா
டேபிள் டென்னிஸில் சென்ற ஆண்டு அறிமுக நாயகியாக அமர்க்களப்படுத்தினர் மணிகா பத்ரா. டெல்லியைச் சேர்ந்த இவர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கினார்.
சாய்னா நேவால்
சாய்னாவுக்கு 2018 மறக்க முடியாத ஆண்டு. காமன்வெல்த் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்துவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய வாகையர் பட்டப் போட்டியிலும் வெண்கலம் இவருக்கே கிடைத்தது. தவிர இந்தோனேசியா மாஸ்டர்ஸ், டென்மார்க் ஓபன், சயீத் மோடி இண்டர் நேஷனல் போன்ற தொடர்களில் இறுதிப் போட்டிவரை முன் னேறினார். பாட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை மணந்துகொண்டு புதிய இன்னிங்ஸைத் தொடங்கினார்.
இமா தாஸ்
தடகளத்தில் தன்னிகரற்ற சாதனைகளைப் படைத்தார் ஹிமா தாஸ். பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ட்ராக் போட்டியில் 400 மீ. ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை சென்ற ஆண்டு இமாவுக்குச் சொந்தமானது. இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனை இது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று தடகளத்தில் அழியா தடம் பதித்தார்.
தீபா கர்மாகர்
ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைக் கோட்டைவிட்டது, இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதிப்பட்டது என ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் சறுக்கல்களைக் கண்ட தீபா கர்மாகருக்கு சென்ற ஆண்டு புத்துணர்வைத் தந்தது. நீண்ட ஓய்வுக்குப் பிறகு களத் துக்கு வந்த தீபா, துருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ச் கோப்பையை வென்று மீண்டும் புதிய அவதாரம் எடுத்தார்.
டுட்டி சந்த்
பயிற்சி பெறவே பெரும் சிரமங்களைச் சந்தித்த டுட்டி சந்துக்குச் சென்ற ஆண்டு மறக்க முடியாதது. ஆசிய விளையாட்டுப் போட்டி 100 மீ. ஓட்டப் போட்டியில் இவர் வெள்ளி வென்றார். வெறும் 0.02 விநாடிகளில் தங்கத்தைக் கோட்டைவிட்டார்.
ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி. உஷாவுக்குப் பிறகு வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை டுட்டிக்குக் கிடைத்தது.
வினேஷ் போகத்
கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றங்களைச் சந்தித்த வினேஷ், சென்ற ஆண்டு ஏற்றம் கண்டார். ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தன்னை நிரூபித்தார் வினேஷ். ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் யாருடன் விளையாடும்போது காயம் ஏற்பட்டதோ, அதே வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.
ஹர்சிதா தோமர்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது ஹர்சிதா தோமருக்குப் பொருந்தும். பதின் பருவத்திலேயே சர்வதேசப் படகு வலித்தல் போட்டியில் பங்கேற்றுப் பதக்கத்தை வென்றார். இளம் வயதில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது. ஹர்சிதா தற்போது 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
- விடுதலை நாளேடு, 8.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக