2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்ட ஊர்களில் ஒன்று டியோலி வானிகிராம். இந்த ஊர் கேதார்நாத்திலிருந்து 75 கி.மீ. தூரத்தில் உள்ளது. அந்த வெள்ளத்தில் இந்த ஊரைச் சேர்ந்த 34 ஆண்கள் உயிரிழந்து விட்டனர். அதனால் அவர்களின் மனைவியர் விதவைகளாகி விட்டனர். அவர்களில் ஒருவர்தான் வினிதா தேவி என்கிற 20 வயதுப் பெண்.
அவள் அவர்களுடைய சம்பிரதாயப்படி விதவைக் கோலத்தில் வாழ்ந்து வந்தாள். கணவன் இறந்த இரண்டே மாதங்களில் தான் புகுந்த இல்லத்தை விட்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். உடல்நலமில்லாத தாய்க்கு உதவியாய் வாழ்ந்தார். அப்போது இந்தச் சமூகத்தில் விதவையாக இருப்பது எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்தார். அவளிடம் மற்றவர்கள் பேசக்கூடத் தயாராக இல்லை.
இந்த நிலையில்தான் ராகேஷ் என்ற இளைஞரைச் சந்திக்கிறார். அதே கிராமத்தில் வசித்த தன் பாட்டியைச் சந்திப்பதற்காக ராகேஷ் அடிக்கடி அங்கு வந்துகொண்டிருந்தார். ஓர் 20 வயதுப் பெண் வெள்ளைச் சேலையில் இருப்பதைப் பார்த்ததும் அவளை மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் உண்டாயிற்று. அவருடைய பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் மகனின் பிடிவாதத்தால் ஒத்துக்கொண்டனர்.
ராகேஷ்_வினிதா தேவியின் பெற்றோரைச் சந்தித்து அவர்களுடைய அரைமனச் சம்மதத்துன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன் மனைவியாக வாழும் நிலையில், இவர்கள் கேவலமாகப் பேசப்பட்டனர்.
மரபுப்படி செய்யப்பட்ட விதவைத் திருமணம்!
அந்த இளம் உள்ளங்கள் வருந்தியதோடு இதை எப்படிச் சமாளிப்பது என்று திட்டமிட்டனர். இறுதியில் நாம் மரபுப்படியே அனைத்து சம்பிரதாய சடங்குகளுடன் மீண்டும் மணம் புரிந்து விதவை மறுமணம் செய்ய முடியும். அது தவறல்ல என்று காட்ட வேண்டும் என்று விரும்பினர்.
அதன்படி, 16.07.2017 அன்று மரபு மணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் பல நூற்றுக்கணக்கான விதவைகள் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர்! இத்திருமணம் தங்களுக்கெல்லாம் வாழ்வில் ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது என்று கூறினர்.
20 வயதில் மரபுகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும் தகர்த்து தன்னை விரும்பிய ஆணை மறுமணம் செய்துகொண்ட அந்த விதவைப் பெண் பெரியார் விரும்பிய புரட்சிப் பெண் ஆவார்!
- பெரியார் பித்தன்
- உண்மை இதழ், 1-15.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக