காமன்வெல்த் போட்டியில் சேலம் மாணவி சாதனை!
நிவேதா படித்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, கழுத்தில் தொங்கிய தங்கப் பதக்கங்களுடன், வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றபடி சேலம் நகரை கம்பீரமாக வலம் வந்தார் நிவேதா.
பிளஸ்_டூ மாணவியான நிவேதா, சென்ற ஆண்டு ராஜஸ்தான் உதய்பூர் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 19 வயதுக்குரிய பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றே காமன்வெல்த்துக்குத் தகுதிபெற்றார்.
20 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகள் இந்த வருடம் செப்டம்பர் 10 முதல் 17ஆம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (சப்_ஜூனியர்) பளு தூக்கும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரே வீராங்கனை நிவேதா மட்டுமே. அந்தப் போட்டிகளில் எக்யுப்டு பிரிவில் 4 தங்கங்களையும், அன் எக்யுப்டு பிரிவில் 4 பதக்கங்களையும் வென்றதுடன், அன் எக்யுப்டு பிரிவில் டெட் லிப்ட்டில் 95 கிலோ எடையும் பெஞ்ச் பிரிவில் 45 கிலோ எடையும் மற்றும் ஸ்குவாடில் 70 கிலோ எடையும் தூக்கி இதற்கு முந்தைய காமன்வெல்த் சாதனைகளை முறியடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.
“என் அப்பாதான் என் ரோல் மாடல். மூன்றாம் வகுப்பு முதலே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்கேற்று மாவட்டம், மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் பல பரிசுகளையும் வென்றேன். இப்போது, பெருமைக்குரிய காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளேன். நான் படிக்கும் பள்ளியான விநாயகா வித்யாலயாவின் நிர்வாகமும் என் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.’’
இவரது தந்தை வெங்கடேஸ்வரன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில், பொறுப்பாளராக, குறைவான வருமானமே ஈட்டி வருகிறார். பளு தூக்குவதில் சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், வாய்ப்புகளின்றி தன்னால் சாதிக்க முடியாததைத் தன் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் வீட்டிலேயே சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) அமைத்து, தம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி தந்து வருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் இவரது தங்கை சோனா லட்சுமியும் பளு தூக்குவதில் சாதித்து வருகிறார்.உலகப் போட்டியிலும் அவர் சாதனை படைக்க நமது வாழ்த்துகள்!
- உண்மை இதழ், 1-15.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக