ஞாயிறு, 29 மே, 2016

இந்தியாவின் சாதனைப் பெண்


வண்ணங்களைக் குழைத்துத் தான் வரைகிற ஓவியங் களையே சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றுகிற உத்தி கைவரப்பெற்றிருக்கிறார் ஸ்வர்ணலதா. அந்தத் திறமைதான் அவர் இந்தியாவின் நூறு பெண் சாதனையாளார்களில் ஒருவராகத் தேர்வுபெறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த நூறு பெண்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் தேர்வாகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஸ்வர்ணலதா. தென்னிந்திய அளவில் இந்தப் பிரிவில் தேர்வாகியிருக்கும் ஒரே பெண் இவர்தான்.
சிங்கப்பூரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் இவர். விவரம் அறியாத வயதிலேயே அப்பா, அம்மா, சகோதரனை ஒரு பெருவிபத்தில் பறிகொடுத்துவிட்டு தன்னந்தனியாக நின்றார். உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அதன் பிறகு சென்னை மருமகளாகிவிட்டார். ஏதுமறியாத இளம் பெண் என்பதால் பிறந்த வீட்டிலிருந்தே உதவிக்கு இரண்டு பெண்களை அனுப்பிவைத்தார்களாம்.
பிறந்த வீட்டில் திடீரென பறிகொடுத்துவிட்ட அன்பு அனைத்தும் ஸ்வர்ணலதாவுக்குப் புகுந்த வீட்டில் இரட்டிப்பாகக் கிடைத்தது. அன்பான கணவர், அனுசரணையான மாமியார், மாமனார் என அனைவரின் பாச வளையத்துக்குள் மகிழ்ச்சியாக இருந்தார் ஸ்வர்ணலதா. ஆனால் இவை மட்டுமே வாழ்வின் பூரணமா? இந்தக் கேள்விதான் ஸ்வர்ணலதாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றது.
எனக்குச் சின்ன வயசுல இருந்தே படங்கள் வரையறது பிடிக்கும். நான் அப்பா, அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, பாவம் இந்தப் பொண்ணுன்னு சில உறவுக்காரங்க ஆசையா பணம் கொடுத்துட்டுப் போவாங்க. அந்தப் பணத்துல நான் பெயிண்ட்டும் பிரஷ்ஷும்தான் வாங்குவேன்.
அப்படி ஆரம் பிச்சதுதான் என் ஓவியப் பயணம் என்று சொல்லும் ஸ்வர்ண லதா, திருமணத்துக்குப் பிறகும் ஓவியங்கள் வரை வதைத் தொடர்ந்தார். யாரிடமும் முறையாக ஓவியம் கற்றுக் கொண்ட தில்லை. 1993ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இவர்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்க, அந்த வீட்டைத் தன் ஓவியங்களால் அலங்கரிக்க நினைத்தார் ஸ்வர்ணலதா. ரவி வர்மாவின் ஓவியங்கள் மீது ஸ்வர்ணா வுக்கு ஈடுபாடு அதிகம். அதனால் அந்தப் பாணி ஓவியங்கள் வரையத் தீர்மானித்தார்.
பாடம் சொன்ன கண்காட்சி
தன் மனைவியின் திறமைக்கு மேடை அமைத்துத்தர வேண்டியது தன் கடமை என நினைத்தார் வழக்கறிஞராகப் பணி யாற்றும் ஸ்வர்ணலதாவின் கணவர். அவரது முயற்சியால் 1998ஆம் ஆண்டில் தன் முதல் ஓவியக் கண்காட்சியை நடத் தினார் ஸ்வர்ணலதா. கிட்டத்தட்ட அனைத்து ஓவியங்களும் விற்றுவிட, அடுத்த வருடமே இன்னொரு கண்காட்சி லலித் கலா அகாடமியில் நடந்தது.
அங்கேதான் திறமையான பல ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத் தது. அப்போதுதான், தான் இதுநாள் வரைந்துகொண்டிருந்தவை ஓவியங்கள் அல்ல. அவை வெறும் அடுத்தவர் பாணியை அப் படியே காப்பியடித்து வரைந்தவை என்பதையும் உணர்ந்து கொண்டார்.
ஒரு முறை ஸ்வர்ணலதாவின் வீட்டுக்கு வந்த அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் இவரது ஓவியங்களைப் பார்த்து வியந்திருக்கிறார். அவற்றைக் கண்காட்சியாக வைக்கலாம் என்று சொன்னதோடு கேரள அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அதற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். ஆனால் சென்னையிலிருந்து அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று மாமனாரும் மாமியாரும் தயங்கியதால் அந்தக் கண்காட்சியில் ஸ்வர்ணலதா பங்கேற்கவில்லை.
ஓவியக் கலைஞர்களுடனான சந்திப்பு, ஓவியங்கள் குறித்த என் பார்வையை மாற்றியது. ஓவியம் என்பது தனித்துவமானது, கற்பனைத்திறனும் புதுமைகளும் நிறைந்தது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகு எனக்கென ஒரு ஓவியப் பாணியை உருவாக்கிக்கொண்டேன். சிற்பக்கலை நிபுணர் குதிரை கருப்பையா அவர் களிடம் எடுத்துக்கொண்ட பயிற்சி அதற்குக் கைகொடுத்தது என்கிறார் ஸ்வர்ணலதா.
இதற்கிடையே குழந்தையின்மைக்கான சிகிச்சை, மகப்பேறு, மகனை வளர்த்தல் என்று நாட்கள் காலில் இறக்கையைக் கட்டிக் கொண்டு பறந்தன. ஆனால் கிடைக்கிற சில நிமிடங்களிலும் ஓவியங்கள் வரைந்துவிடுவார் ஸ்வர்ணலதா. இவரது கணவர் பணி நிமித்தம் டில்லியில் இருந்ததால் தன் மகனுடன் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கே சென்றிருந்தார். அப்போது நிர்பயா வழக்கு குறித்த ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் உச்சத்தை அடைந்திருந்தன. அது இவரை வெகுவாகப் பாதித்தது.
நிர்பயாவுக்கு நீதி கேட்டு நின்ற பெண்களின் முகங்கள் அனைத்திலும் நான் நிர்பயாவைப் பார்த்தேன். ஒவ்வொரு பெண்ணும் இந்தச் சமூகத்தால் ஏதோ வொரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. எல்லா முகங்களிலும் வலியும் வேதனையும் பரவியிருந்தன. அந்த முகங்களை, அவர்கள் குரலில் ஒலித்த கோபத்தை, நிர்பயாவின் வேதனையை ஓவியங்களாக வரைந்தேன் என்று சொல்லும் ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள் அனைத்திலும் பெண்களே பிரதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு ஓவியமும் பெண்களின் வலியையும் வலிமையையும் சுமந்தபடி இருப்பதுதான் இவரது தனிச்சிறப்பு.
கடந்த டிசம்பர் மாதம்  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து என்னுடைய புகைப் படத்தை  அனுப்பச் சொல்லி எனக்கு மெயில் வந்திருந்தது. ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. சில நாட்கள் கழித்து, இந்தியாவின் சிறந்த சாதனைப் பெண்கள் பட்டியலுக்கு நானும் தேர்வாகியிருப்பதாக தகவல் வந்தது.
என் மாமனாரின் இழப்பால் அதைக் கொண்டாடும் மனநிலையில்கூட நாங்கள் இல்லை. ஆனால் பேஸ்புக்கில் பலரும் ஆதரவு தந்து என்னை வெற்றிபெற செய்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன் என்றார்.  மேலும் இவர் ஓவியங்கள் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார்.
-விடுதலை,9.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக