வெள்ளி, 27 மே, 2016

பெண்களுக்குச் சொத்துரிமை


04.10.1931, குடிஅரசிலிருந்து...
மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச் சட்டம்
1931-அக்டோபர் மாதம் 22ஆம் தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்த மான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட் டன. அதின் மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப் போகும் சட்டசபையின் விவாதத்திற்குக் கொண்டு வரப்படும்.
அவையாவன :-
பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்த காரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக்கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர், தான் சுயார்ஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு.
ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.
பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமை களிலும் கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதை தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்;
ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்குக் கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.
பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக் குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்ப சொத்தில் கணவனுக்குள்ள பாகம் சர்வசுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்து விட வேண்டும். குடும்ப சொத்துக் கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்டக் காலங் களிலும் அச்சொத்துகளின் மீது பெண்களுக்கு ஜீவனாம் சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.
-விடுதலை,25.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக