செவ்வாய், 9 மே, 2017

இரு கால்களை இழந்தபின் கட்டை கட்டி ஓடிச் சாதிக்கும் பெண்!



எல்லாம் இருந்தும் எதையும் செய்யாதவர்கள் வாழும் உலகில், எல்லாம் இழந்தாலும் எப்படியும் சாதிப்பேன் என்பவர்களும் உள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரஸ்வதி இரு கால்களையும் இழந்து, பெங்களூர் மாரத்தான் ஓடும் பெண்களில் முக்கியமானவர்!
தன் கைகால்கள், வயிற்றில் சுமந்து-கொண்டிருந்த குழந்தை என எல்லாவற்றையும் இழந்தார். ‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை... என்கிற நிலையில், தான் சாதித்ததுபற்றி அவரே கூறுகிறார்.
“பெங்களூருல படிச்சு, வளர்ந்தேன். அப்பாவுக்கு டிஃபென்ஸ்ல வேலை, அம்மா இல்லத்தரசி.
ரொம்ப சந்தோஷமான குழந்தைப் பருவம். படிப்பு, வேலைனு எல்லாமே நல்லாப் போயிட்டிருந்தது. என் அடையாளமே சிரிப்புதான். ‘எப்போதும் சிரிச்சுட்டே இருப்பாங்களே அந்தப் பொண்ணு!’ங்கிறது-தான் எனக்கான அடையாளமா இருந்திருக்கு. அந்த நிறைவான மனசுதான் வழ்க்கையின் துயரமான நாள்களைக் கடக்கும்போது உதவியிருக்கு.
நானும் பிரஷாந்த் சவுடப்பாவும் பொதுவான நண்பர்கள் மூலம் அறிமுகமா-னோம். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். திகட்டத் திகட்ட அத்தனை இனிப்பான வாழ்க்கை. இப்போதும் அந்த இனிமை குறையலை. ஆனாலும், அப்படியொரு சம்பவம் மட்டும் நடக்காம இருந்திருந்தா...’’ என நிறுத்துகிற ஷாலினியின் மௌனம் சில நொடிகள் நீடிக்கிறது.
“2012ம் வருஷம்... வெட்டிங் ஆனிவர்சரியைக் கொண்டாடிட்டு, கம்போடியாவிலேருந்து வந்துக்கிட்டிருந்தேன். அப்ப நான் பிரெக்னென்ட்டா இருந்தேன். லேசான காய்ச்சல் இருந்தது. டாக்டரைப் பார்த்தோம். பாரசிட்டாமல் கொடுத்தார். காய்ச்சல் குறையலை. டெங்குவாகவோ, மலேரியாவா-கவோ இருக்கலாம்னு சந்தேகப்பட்டாங்க. அப்படியும் இல்லை. உடம்புல ஒவ்வொர் உறுப்பா செயலிழக்க ஆரம்பிச்சது. என் குழந்தையையும்  இழந்துட்டேன். டாக்டர்ஸுக்கே நம்பிக்கை போய், ‘சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க. பார்க்கிறவங்க வந்து பார்த்துட்டுப் போயிடட்டும்’னு சொல்லிட்டாங்க. எனக்கு வந்திருந்தது அபூர்வமான பாக்டீரியா தொற்றுன்னு சொன்னாங்க. ஆஸ்பத்திரியில ‘ஐசியூ’வில் மாசக்கணக்கா இருந்தேன். உடம்பெல்லாம் நீலநிறமா மாறியது. எனக்குள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாத ஒரு நிலை.
அடுத்து என்னோட இடது கை அழுக ஆரம்பிச்சது. என்னால இப்பக்கூட அந்த அழுகின வாசனையை மறக்க முடியலை. ஆஸ்பத்திரிக்குப் போறதும், அழுகின செல்களை சுத்தப்படுத்திக்கிட்டு வர்றதும் வாடிக்கையானது. 2013ல என் இடது கையை எடுத்துட்டாங்க. அதை ஜீரணிச்சுக்கிறதுக் குள்ளேயே அடுத்த ஆறே மாசத்துல வலது கை இன்ஃபெக்ஷனாகி, தானாவே விழுந்தருச்சு. அடுத்தடுத்து என் கால்களையும் இழந்தேன். கால்களை எடுக்கப் போற அன்னிக்கு நல்ல பிரைட் கலர்ல நெயில்பாலிஷ் போட்டுக்-கிட்டுப் போனேன்... வெட்டி எறியப்படப் போற கால்கள் போகும்போது அழகா இருக்கட்டுமேன்னுதான்!’’ _ ஷாலினி சிரிக்கிறார். நமக்கோ நெஞ்சம் கலங்குகிறது.
“ரெண்டு வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன். அந்த ரெண்டு வருஷமும் எனக்கு வெளி உலகமே தெரியாது. படுக்கையிலேயே என் வாழ்க்கை முடங்கிப் போயிடுமோனு பயந்தேன். இந்தச் சமுதாயம் என்னை ஒதுக்கிடுமோங்கிற கவலையும் இருந்தது. கால்களை எடுத்த பிறகாவது வெளி உலகத்தை எட்டிப் பார்க்க முடியும்கிற நம்பிக்கை வந்தது. அதனால, கால்களை எடுக்கணும்னு சொன்ன-போது, அதிர்ச்சியைவிடவும் மகிழ்ச்சிதான் அதிகமா இருந்தது.
அப்படியொரு சமாதானத்துக்கு வர்றதுங்-கிறதும் சாதாரண விஷயமில்லை. ‘நான் என்ன செய்தேன்... எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ங்கிற கேள்விகள் என்னை விரட்டாம இல்லை. தப்பு செய்யறவங்களுக்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்னு நம்ம சமுதாயத்துல ஒரு நம்பிக்கை இருக்கில்லையா... அப்படி எந்தத் தவறுமே செய்யாத எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு மாசக்கணக்கா அழுது தீர்த்திருக்கேன். ஒரு கட்டத்துல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அழுது-கிட்டே இருக்கப் போறோம்னு தோணினது. அழுதுகிட்டே இருக்கிறதால வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போறதில்லைனு உணர்ந்தேன். அம்மா, அப்பா, கணவர், தங்கைனு என் குடும்பத்துல உள்ள எல்லாரும் எனக்கு ஆதரவா நின்னாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கைதான் நான் எழுந்திருக்கக் காரணம். செயற்கைக் கால்கள் பொருத்தினதும் அந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது...’’ என்கிற ஷாலினியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த எல்லாமே சாதனைகள்!
“படுத்த படுக்கையா இருந்த காரணத்தினால தூங்கித் தூங்கி ரொம்ப குண்டாயிட்டேன். ஆரோக்கியமாகவும் ஆக்டிவாகவும் இருக்கிறதுக்காக வெயிட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அப்பதான் கோச் ஐயப்பாவோட அறிமுகம் கிடைச்சது. அவரோட வழிகாட்டுதலின் பேர்ல தினமும் ஒன்றரை மணி நேரம் நடக்கவும் உடற்பயிற்சிகள் செய்யவும் பழகினேன். உடம்பை பேலன்ஸ் பண்ணவும், மாடிப்படிகள் ஏறவும் கத்துக்-கிட்டேன். நடக்க ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து ஓடணும்னு தோணினது. வலியைப் பொறுத்துக்-கிட்டு ஓடிப் பழகினேன். அந்தப் பயிற்சிதான் எனக்கு மாரத்தான்ல ஒடற ஆசையைக் கொடுத்தது’’ என்பவர் ‘டிசிஎஸ்’ சார்பாக நடந்த மாரத்தான் போட்டியில் 10 கிலோமீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார். தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
“படுக்கையிலேயே என் வாழ்க்கை முடிஞ்சுடு-மோன்னு பயந்தேன். ஓட ஆரம்பிச்சதும் வாழ்க்கையின் மேல புது ஈர்ப்பும் ரசனையும் வந்தன. ஓடும்போது எனக்குள்ள புது நம்பிக்கை வருது.அது ஒரு தெரபி மாதிரி எனக்கு உதவுது. செயற்கைக் கால்களோட வாழப் பழகறதுங்-கிறது முதல்ல பெரிய சவாலா இருந்தன. ரெண்டரை கிலோ எடை உள்ள அந்தக் கால்களைச் சுமக்கறதும், நடந்து பழகறதும் சாதாரணமானதா இல்லை. ஒவ்வொரு முறை அதை மாட்டும்போதும் வலிக்கும், ரத்தம் வரும். புதுசா செருப்போ, ஷூஸோ வாங்கிப் பயன்படுத்தும்போது முதல் சில நாள்களுக்கு அந்த அசௌகரியத்தை உணருவோமில்லையா... செயற்கைக் கால்களை நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு அந்த வலியி-லேருந்து விடுபடறதை விடவும் வாழ்க்கையில வேற பெரிய லட்சியங்கள் இருந்தது. வலியைப் பொறுத்துக் கிட்டேன். பிராக்டீஸ் பண்ணப் பண்ண உடம்பும் மனசும் சரியானது. முதல் நாள் பத்து நிமிஷங்கள், அடுத்தடுத்த நாள்கள்ல அரை மணி நேரம், முக்கால் மணி நேரம்னு செயற்கைக் கால்கள் அணியற நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்கினேன். இன்னிக்கு என்னால 15 மணி நேரம் வரைக்கும் அதை அணிய முடியுது...’’ வலியை விழுங்கிச் சொல்கிறார்.
தற்போது, பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஷாலினி, அடுத்து 2020_ல் நடக்கவிருக்கும் பாரா ஒலிம்பிக்ஸில் ஓடவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
“எனக்கு வாழ்க்கையில பெரிய ஆசைகளோ, கனவுகளோ இல்லை. என் ஒரே லட்சியம், எப்போதும் சந்தோஷமா இருக்கிறது மட்டும்தான். சந்தோஷமா இருக்கணும்னா பணமோ, வசதிகளோ எதுவுமே தேவை-யில்லைனு நம்பறேன். அது என்னால முடியுது. இன்றைய பொழுதைவிடவும் நாளைய பொழுது இன்னும் இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்னு நம்பறேன். இதுவரைக்கும் அப்படித்தான் நடந்தது. இனியும் தொடரும்’’ என்று நம்பிக்கையின் மறுவடிவமாகப் பேசினார். வெல்க அவரது முயற்சிகள்! ஸீ
-உண்மை இதழ்,16-30..4.17

தேசிய விருது பெற்ற பெண்கள்!

விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது. இந்தத் தருணத்தில் தமிழகத்தின் மண் சார்ந்த விவசாயத்துக்காக ஆய்வு மேற்கொண்டு தேசிய விருது பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள் மூன்று விஞ்ஞானிகள்.

விவசாயத்தில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், மண் இல்லாத விவசாயத்தை நோக்கிய பயணம் சவாலானது. மண்தான் உயிர்ச் சங்கிலியின் ஆதாரம். அப்படிப்பட்ட மண்ணையும் அதில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளையும் அவை எவ்வாறெல்லாம் விவசாயத்தை மேம்படுத்தும் என்பதையும் ஆய்வு செய்துவருகிறார்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சித்தேஸ்வரி, ஜெகதீஸ்வரி, மாலதி ஆகியோர்.

சித்தேஸ்வரி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியராகவும் நுண்ணூட்ட ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவருடன் உதவிப் பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரியும் மாலதியும் பணிபுரிகிறார்கள்.

மூவரும் தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்களில் மண் மாதிரிகளைச் சேகரித்து, நுண்ணூட்டச் சத்துகள் விவரப் பட்டியலைத் தொகுத்து வருகிறார்கள். இவர்களது ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் பாராட்டி, இந்திய மண்ணியல் துறை நிறுவனம் தேசிய விருதை வழங்கியுள்ளது.

இந்த மூவர் குழுவால் வேளாண்மைப் பல்கலைக்கழக மண்ணியல் துறையின் ஒருங்கிணைந்த நுண்ணூட்ட ஆய்வு மய்யம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல, துத்தநாகம் குறித்த ஆய்வுக்காகச் சிறந்த விஞ்ஞானி என்ற எஸ்.என்.ரானடே விருதும் சித்தேஸ்வரிக்குக் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் சித்தேஸ்வரிக்குச் சொந்த ஊர் பெருந்துறை. விவசாயப் பின்புலம் இல்லாத குடும்பம். விவசாயத்தின் மீதான ஆர்வமே தன்னைப் பணியில் ஈடுபடவைத்திருக்கிறது என்கிறார்.

1967ஆம் ஆண்டுக்கு முன்பு மண்வள ஆய்வு அதிகமாக இல்லை. அதற்குப் பிறகுதான் ஒவ்வொரு பகுதியாக மண் மாதிரிகளைச் சேகரித்து, என்னென்ன நுண்ணூட்டச் சத்துகள் இருக்கின்றன, எவையெல்லாம் தேவை என்று விவசாயிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

2005-க்குப் பிறகு ஜி.பி.எஸ். வசதி வந்திருக்கிறது. மண் மாதிரி எடுத்து, அதில் இருக்கிற சத்துகள் குறித்து எடுத்துச் சொல்லி, கூடுதலாக என்னென்ன சத்துகள் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தால் மகசூல், லாபம், மண்வளம் கூடும்.

விவசாயத்தை மட்டுமல்ல, இந்த மண்ணையும் பாதுகாக்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மற்ற ஆய்வுகளைவிட, நுண்ணூட்டச் சத்துக்கான ஆய்வு ரொம்பவும் நுணுக்கமானது. தொய்வில்லாமல் வேலை நடந்தால் மட்டும்தான், நல்ல முடிவுகளைக் கொடுக்க முடியும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும்

22 மய்யங்கள் இருக்கின்றன. விவசாயிகளுக்குக் கொடுக்கிற பரிந்துரைகள், தொடர்ச்சியான ஆய்வுகள் என்று இந்தியாவிலேயே நம் மய்யம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு மண் மாதிரி வரைபடம் வெளியிட வேண்டும். அந்த வரைபடம் தமிழக விவசாயிகளுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும் என்று சித்தேஸ்வரி சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

உதவிப் பேராசிரியர் ஜெகதீஸ்வரி, போரான் சத்து தொடர்பாக நான் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன். மற்ற சத்துகளைவிட போரான் ஆய்வு கடினம். ஒரு புள்ளி அதிகமானாலும் மண்ணுக்கு விஷமாகிவிடும். காலிஃபிளவர் போன்ற பயிர்களுக்கு இந்தச் சத்துதான் தேவை. அதனால் போரானைத் தவிர்க்க முடியாது.

இந்தத் துறையைப் பொறுத்தவரை உடலுழைப்பு, ஆய்வு இரண்டும் தேவை. நாங்கள் மூவரும் ஒரு பக்கம் குடும்பப் பொறுப்புகளை கவனித்துக்கொண்டு இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கான ஆய்வுகளைச் செய்துவருகிறோம் என்று சொல்கிறார். இவர் மதுரை மாவட்ட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

சவால்களைக் கடந்த பயணம்

ஆய்வைவிட, ஆய்வு முடிவுகளை நிரூபிக்க விவசாயிகளை நேரடியாகச் சந்திக்கும் அனுபவம் சவாலானது. காலம் காலமாகப் பயிரோடு வாழ்கிற விவசாயிக்கு அனுபவப்பூர்வமான அறிவு அதிகம்.

அதோடு அறிவியலும் இணைகிறபோது விவசாயம் செழிப்பாக இருக்கும்.

எடுத்த எடுப்பிலேயே நம் பரிந்துரைகளைச் சொல்லி விவசாயிகளை நம்பவைக்க முடியாது. செயல் விளக்கத் திடல் அமைத்து நாங்களும் விவசாயம் செய்ய வேண்டும். செயல் விளக்கம் மூலம் நிரூபித்தால் மட்டுமே விவசாயிகள் நம்புவார்கள்.

ஒருமுறை நம்பிக்கை வந்துவிட்டால் அதுவே நிலைத்துவிடும். உங்கள் மண்ணில் இந்தச் சத்து குறைவாக இருக்கிறது, அதற்கு இதைப் பயன்படுத்துங்கள், இந்தப் பயிர் விதையுங்கள் என்று சொன்னால் போதும். அதை நம்பி விவசாயம் செய்வார்கள்.

குழந்தைகள் மாதிரி இருக்கிற விவசாயிகளைச் சரியாக வழிநடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு எங்களுக்கு ரொம்பவும் அதிகம் என்று பொறுமையாகச் சொல்கிறார் உதவிப் பேராசியர் மாலதி.

உடலுழைப்பு மட்டுமே கடினமல்ல, அறிவு சார்ந்த தளமும் கடினமானதுதான். இரண்டிலும் பெண்கள் தடம் பதிக் கிறார்கள். 
படித்த பெண்கள் விவசாயத்துக்கு வரவேண்டும் என்பதில் மூவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. விவசாயத்தில் பெண்கள் இருந்தால், உற்பத்தித் திறன் கூடும். காலத்துக் கேற்ற பயிர் செய்யும் நுட்பம் மேலோங்கும்.

நுண்ணூட்டச் சத்து ஆய்வு மண்ணுக்கானது மட்டுமல்ல. மண் மூலம் தாவரத்துக்கும், தாவரத்திலிருந்து கால்நடைக்கும், கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு செல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் உலக அளவில் ஆய்வுகள் நடக்கின்றன. அதில் எங்களது பங்கும் நிச்சயம் இருக்கும். அது சவால்கள் நிறைந்த, சவால்களைக் கடந்த பயணமாக இருக்கும்.

பெண்கள் என்ற முறையில் ஊக்கமும் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளுமே எங்களுக்குத் தேவை. அவை சாத்தியமென்றால், இந்த வேலையே உயரத்தைத் தேடித் தரும். தனியாக அதைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை என்கிறார்கள் இந்த விவசாய விஞ்ஞானிகள்.

-விடுதலை,9.5.17
.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

அய்.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் ஒரு முஸ்லிம் பெண்

அய்க்கிய நாடுகள் அவையின் புதிய துணை பொதுச் செயலாளர் அமினா முஹம்மத்நைஜீரியாவைச் சேர்ந்தவர். நைஜீரியா வின் சுற்றுச் சூழல் அமைச்சராக பதவி வகித்தவர். பதவியேற்ற பின்பு செய்தியாளர் சந்திப்பில் தாம் பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் சவாலான பணி என்பது எனக்குத் தெரியும். ஆனால் அடுத்து வரும் ஆண்டுகளில் அதனை விரைந்து செய்து முடித்து சச்சரவுகளை மு ன் கூட்டியே தடுக்கும் அஜெண்டாவை செயற்படுத்த முடிவு செய்துள்ளேன் என்கிறார்.
பாதுகாப்பு சபையில் மேலும் பிரதிநிதிகளை அதிகப்படுத்து வது தனதுபணிகளில் மிகமுக்கியமானது என தெரிவித்து. இருக் கிறார். அய்நா பொது செயலாளரின் முழு ஒத்துழைப்புடன் அதனை செய்து முடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அமினா,
இந்தியா அய்நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக கடும் முயற்சி களில் ஈடுபட்டிருந்தது.
அது தொடர்பான வலுவான லாபியை அமைத்து இருந்தும் கூட சீனா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகளைத் தவிர முக்கிய நாடுகள் ஆதரவு அளித்து இருந்த போதிலும் முயற்சி கைகூடா மல் இருந்தது. ஆனால் அமினா முஹம்மத் முன் முயற்சியால் அது விரைவில் நிறைவேறும் என நம்பலாம்.
உலகின் மிக முக்கியத்துவம் மிகுந்த பொறுப்பான அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளராக ஒர் பெண்மணியைக் கொண்டுவர பல்வேறு தொண்டு அமைப்புகள் செய்த முயற்சி தோல்வியில் முடிய துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் அமினா முஹம்மதை பொது செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் நியமித்தார் இது அய்நாவின் இரண்டாவது உயர் பதவியாகும் .
அய்.நாவுக்கான அமெரிக்க நிதியுதவியை குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச் சுறுத்தல் குறித்து அமினா கூறும் போது, இது மிகவும் கவலைக்குரிய ஒன்றுதான். இது போன்ற பின்னடைவுகளை மற்றும் சில கருத்து திரித்தல்களை பேசித் தீர்த்து களைய முயல்வோம் என்று தெரிவித்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் துறையில் ருமானா அஹ்மத் பணியாற்றி வந்தார். அவர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவராக வலம் வந்தார். ஆட்சி மாறியதன் பின்னர் ருமானா விலகினார். ருமானா முக்கியத்துவம் மிகுந்த வெள்ளை மாளிகை பொறுப்பில் இருந்து வெளியேறினார். இன்று அய்நா அவையில் துணை பொதுச்செயலாளராக அமினா என்ற முஸ்லிம் பெண் மணி பொறுப்பேற்றுள்ளார்.
-விடுதலை ஞா.ம.,1.4.17

புதன், 15 மார்ச், 2017

பெண்களுக்குத் தொழிற்கல்வி கொடுக்க வேண்டும்




 

- தந்தை பெரியார்

இந்த வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி ஒரு புதிய திருப்பத்தில் நடைபெறும் ஒன்றாகும். இதுவரையிலும் நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சி, ஒரு ஜாதிக்கு நாம் கீழான மக்கள் - கீழானவர்கள் என்கின்ற முறையை அடிப் படையாகக் கொண்டு நடத்தி வைத்தோம். இப்போது நாம் கீழ் மக்களல்ல. ஆணுக்குப் பெண் அடிமையல்ல. ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு. பெண் சுதந்திர-முடையவள் என்பதை நிலைநிறுத்தும் வகையில், இம்முறை திருமணமானது தோற்றுவிக்கப்பட்டு, பல்லாயிரக் கணக்கான மக்களால் நடத்தப்பட்டு வருகிறது! இதில் பல காரியங்கள் மதத்திற்கு, சாஸ்திர, சம்பிரதாயத்திற்கு மாறாக இருப்பதோடு இதுவரை இருந்த இழிவான நிலையை மாற்றக்கூடியதாகவும் இருக்கின்றது. மாற்றம் ஏற்படுவதென்றால் சிறப்பான காரியங்களைச் செய்துதானாக வேண்டும். அப்படிப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதுவரை இருந்த ஆட்சி அனைத்தும் நம்மை அடிமை யாகவே கருதி நடத்தப்பட்டு வந்ததேயாகும். இப்போதுள்ள ஆட்சியானது நம்மை மக்களாக மதித்து வருகின்ற ஆட்சி என்பதோடு, நாமெல்லாம் அடிமைகள் அல்ல மனிதர்கள் என்பதை உணர்ந்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியானதால், இதுவரை சட்டப்படிச் செல்லுபடியற்ற முறையாக இருந்த இதை இன்றைய அரசு சட்டப்படிச் செல்லும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இது சட்டப்படிச் செல்லாதிருந்த காலத்திலேயே பல்லாயிரக்கணக்கில் மக்கள் இம்முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. இப்போதும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்-கிறவர்கள் தான், இன்றைக்கும் பழைய முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் பார்ப்பனருக்கு அடிமைகளல்ல - சூத்திரர்களல்ல என்று கருதுகின்றவர்கள் அனைவரும் இப்புதிய - மாறுபாடான முறையினையே பின்பற்றி நடத்தி வருகின்றனர்.

தாய்மார்களே! தோழர்களே! நாம் நன்றாகச் சிந்திப் போமானால், தமிழர்களாகிய நமக்கு இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை முறையென்றோ, விவாகம் என்றோ, திருமணம் என்றோ, ஒரு முறை இருந்ததே இல்லை. இன்றையத் தினம் நமக்கு நீதியாக இருக்கும். மனுதர்ம முறையில் சூத்திரனுக்குத் திருமண முறையில்லை என்றிருக்கிறது. இதுவரை நடைபெற்ற பல புரட்டுகளின் காரணமாகக் கடந்த 20, 30 வருஷ காலமாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ள மனுதர்மத்தில் தான் சூத்திரனுக்குத் திருமண முறை உண்டு என்றிருக்கின்றது. பழைய 25 வருடத்திற்கு முன் அச்சிடப்பட்ட எல்லா மனு தர்மத்திலும் சதிபதியாக வாழும் உரிமை சூத்திரனுக்கு இல்லையென்றே இருக்கிறது. இதற்குக் காரணம் நம் பெண்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியவர்கள்; சூத்திரச்சிகள். எனவே அவர்களுக்குத் திருமண உரிமை இல்லை என்பதேயாகும்.

இம்முறை தவிர்த்து இதுவரை நம்மில் நடைபெற்று வந்த திருமண முறையும் நம்நாட்டிற்கு உரிய முறை இல்லை. பார்ப்பன நாட்டிலிருந்து வந்ததேயாகும். திருமணம் என்கின்ற மன்றல் என்பது மறையோர் தேசத்திலிருந்து வந்தது _- இங்கு புகுத்தப்பட்டது என்பதனைத் தொல்காப்பியத்திலேயே குறிப்பிடப்-பட்டிருக்கிறது. அதாவது, “மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்’’ என்கிற சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதுவும் பார்ப்பனரிடம் ஒழுக்கக் கேடும், பொய்யும் புகுந்த பின்னர், பார்ப்பானே சடங்குகளை உண்டாக்கினான் என்பதும் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப’ என்கின்ற சூத்திரத்தின் மூலம் இதனை விளக்கியதோடு இப்படிப் பார்ப்பனருக்காக _- மேல்ஜாதிக்காரனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு ஆன காலமும்  உண்டு என்பதை, “மேலோர்  மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே’’ என்கின்ற சூத்திரத்தின் மூலம் விளக்கியிருக்கிறார். இதையெல்லாம் நான் பாமர மக்களுக்காகச் சொல்லவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் புரியவும் புரியாது. எப்படியோ நடந்தால் சரி என்றுதான் கருதுவார்கள். பின் யாருக்காக இதைச் சொல்கிறேனென்றால் நம்மிடையே இருக்கிற படித்த _ பட்டம் பெற்ற முட்டாள் களுக்காகவே சொல்-கின்றேன்.

நமது புலவர்கள் எல்லாம் பெருமையாக -_ சிறந்த இலக்கியமாகக் கருதி பரப்பி வருகின்றார்களே, எதற்கெடுத்தாலும் பயன் படுத்துகின்றார்களே திருக்குறள். மனுதர்மத்தில் எப்படிப் பார்ப்பானுக்கும், சூத்திரனுக்கும் பேதம் கற்பிக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல, அதைவிட மேலேயே பெண்களுக்கும், ஆண்களுக்கும் அதில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பெண் நிரந்தர அடிமையாகக் கணவனுக்குத் தொண்டு செய்யும் ஏவலாளாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தோழர்களே! பெண்கள் ஆண்களுக்கு நிபந்தனையற்ற அடிமைகளாக இருக்க வேண்டும். சூத்திரர்கள் அறிவு பெறக் கூடாது. பாமரர்களாகவே இருக்க வேண்டும்; ஜாதி இழிவு காக்கப்பட வேண்டும் என்கின்ற மூன்று காரியங்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வந்ததுதான் _ - புரோகித வைதிகத் திருமணங்களாகும்.

ஆனால், சுயமரியாதைத் திருமணங்கள் பெண்களைச் சம உரிமையுடையவர்களாக்கவும், மக்கள் அறிவோடு நடக்க வேண்டுமென்ப தற்காகவும், மக்கள் அனைவரும் சமம், ஜாதியின் காரணமாக உயர்வு, தாழ்வு இல்லை என்பதை வலியுறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டதேயாகும். இதன் காரணமாகப் பெண்கள் விடுதலை பெற்று சுதந்திரமுடையவர் களானதோடு, அதுவரை பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கணவன் - தகப்பன் சொத்தில் உரிமை, மறுமணம் செய்து கொள்ளும் உரிமை - மணவிலக்குப் பெறும் உரிமை, விதவா, விவாக உரிமை, ஆண்களைப் போன்று சகலத் துறைகளிலும் போட்டியிடும் உரிமை, கல்வி உரிமை முதலியவை அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளன.

பொதுவாக இந்துக்கள் என்பவர்கள் திருமணம், ஜாதி உணர்ச்சியோ, மத உணர்ச்சியோ இல்லாவிட்டாலும், அவர்கள் சமுதாயத்தில் அதுவரை நடைபெற்று வந்த பழக்க வழக்கப்படி நடைபெற வேண்டும். அதுதான் சட்டப்படிச் செல்லுமென்பது இந்து லாவாகும். அதனால்தான் இப்போது இங்கு நடைபெற்ற இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகவே மதிக்கப்பட்டுக் கருதப்பட்டு வந்தது.

நம் நாட்டில் பெண்கள் விடுதலைக்காக இதுவரை - சரித்திரக் காலம் முதல் எவனுமே பாடுபடவில்லை. நம் இலக்கியங்கள் அத்தனையும் பெண் அடிமையை வலியுறுத்து வதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்குச் சம உரிமை, சுதந்திரம் கொடுக்கக்கூடிய, அறிவு கொடுக்கக்கூடிய இலக்கியம் என்று எதுவுமே கிடையாது. நாம் பூரணமாக சுதந்தரம் அடைய இன்னும் பல தடைகள் இருக்கின்றன. நாம் வளர்ச்சியடைய வேண்டியதும் நிறைய இருக்கின்றன என்றாலும், நம் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருப்பவர்கள் நம் பெண்களே யாவார்கள்.

நம் பெண்கள் இன்னமும் சமுதாயத்திற்குப் பெரும் பாரமாக இருக்கிறார்களே ஒழிய, சமுதாய வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்குப் பயன்படக் கூடியவர்களாக இல்லை. ஏனில்லை யென்றால், நாம் அவர்களுக்குப் போதிய அறிவை, கல்வியைக் கொடுக்காததாலே யாகும்.  பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்றுச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமானால் பெற்றோர்கள் அவர்களை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். அவர்கள் வாழ்வை அவர்களே நடத்திக் கொள்ளும் படியான தொழிலை அவர்களுக்கு பயில்விக்க வேண்டும். அவர்களாக முன்வருகிற வரை அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது. கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமையினை அவர்களுக்கே கொடுத்து விட வேண்டும். மேல் நாடுகளிலெல்லாம் இப்படித் தான் நடக்கின்றன. எந்தப் பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கிடையாது. அவர்களாகப் பார்த்துத்தான் செய்து கொள்வார்கள்.

வெள்ளைக்காரன் இங்கு வருகிறவரை நம் நாட்டில் 8 வயது, 9 வயதில் திருமணங்கள் நடைபெற்று வந்தன. வெள்ளைக்காரன் வந்த பின்தான் இக்கொடுமையை நிறுத்தினான். இம்முறையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் கோயிலுக்கே போகக் கூடாது; குழவிக் கல்லைக் கும்பிடக் கூடாது, புராண - இதிகாசங்களில் வரும் எந்த விழாக்களையும் கொண்டாடக் கூடாது; சினிமாவிற்குப் போகவே கூடாது. சினிமாவால் ஏற்பட்ட கேட்டால் - உணர்ச்சியால் 10 வயதாவதற்குள் பெண்கள் ஆளாகி விடுகின்றனர். காரணம், உணர்ச்சிப் பெருக்காலேயே யாகும். ஆடம்பரமாக இருக்கக் கூடாது; சிக்கனமாகச் செலவிட வேண்டும். பிற மக்களுக்கு நம்மாலான உதவியினைச் செய்ய வேண்டும். இன்னொரு வரிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கா மலிருப்பதே ஆண்மையாகும். பிறருக்கு நம்மாலான உதவியைச் செய்வதே பெருமையாகும். குழந்தைகள் பெறாமல் இருப்பதே நல்லது. இல்லையென்றால் ஒன்று, இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதனை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்காகப் பிறரிடம் போய்ப் பல்லைக்காட்டிக் கெஞ்சாத வகையில் நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இம்முறையில் ஏற்பாடு செய்த மணமக்களின் பெற்றோர்களையும், சுற்றத்தாரையும் பாராட்டுகின்றேன்.

(19.1.1969 அன்று திருச்சியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள்

ஆற்றிய அறிவுரை)

 ‘விடுதலை’ 23.1.1969

-உண்மை,1-15.3.17