புதன், 7 ஜூன், 2017

கர்ப்பகால மூடநம்பிக்கைகள்

தன் வயிற்றில் புதிய உயிர் ஒன்றை  ஒன்பது மாதங்களில் உருவாக்கும் பெண்ணின் தியாகம்மகத்தானது. தாயின் வயிற்றில் கரு உருவாகி வளர்வது மிகவும் சிக்கலானது. இந்தக் காலகட்டத்தில் கணவன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனமும் அந்தப் பெண் மீது இருக்கும்.

கர்ப்பகாலத்தில், பெண்ணின் உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் சில அறிகுறிகளை வைத்துப் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா எனக் கணித்துவிட முடியும் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

தவறான நம்பிக்கை  1

தாயின் வயிற்றுக் கோணத்தை வைத்தும் பருமனை வைத்தும் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. கர்ப்பமான தாயின் வயிறு மேலே இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் எனவும் கீழே இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் எனவும் கூறுவர்.

உண்மை நிலை:

தாயின் வயிற்றில் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்புப் படலத்தின் அளவு, தசை வலிமை, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தே கருவைச் சுமக்கும் வயிற்றின் அளவு மாறுபடும். எனவே, தாயின் வயிற்றின் அமைப்புக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை  2

தாய்க்கு உப்புச் சுவை பிடித்தால் ஆண் குழந்தையும் இனிப்புச் சுவை பிடித்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

உண்மை நிலை:

நமது உடலில் தாதுஉப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது உடல் தானாகவே சுவைத் தேடல் மூலம் குறைபட்ட ஊட்டச்சத்தைத் தேடும். இதை ஃபுட் க்ரேவிங் என்பார்கள். ஃபுட் க்ரேவிங்குக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தச் தொடர்பும் இல்லை.

தவறான நம்பிக்கை  3

கர்ப்பமுற்ற மூன்றாவது மாதத்தில் தாய் அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தைக்கு முடி அதிகம் இருக்கும்.

உண்மை நிலை:

குழந்தையின்  உச்சந்தலை, முடியின் அடர்த்தி பரம்பரை மரபணுக்களைப் பொறுத்தது. இதற்கும் வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கும் தொடர்பு இல்லை.

தவறான நம்பிக்கை  4

தாய்க்கு வலியில்லாத சுகப்பிரசவம் ஆகியிருந் தால், அவரது மகளுக்கும் சுகப்பிரசவமே ஆகும்.

உண்மை நிலை:

இதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் எடை, வயிற்றில் குழந்தையின் நிலை, தாயின் இடுப்பு எலும்பின் சுற்றளவு, கர்ப்பகாலத்தில் தாயின் உணவுக்  கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் ஆகியவையே சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யும் முக்கியக் காரணிகள்.

தவறான நம்பிக்கை  5

கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

உண்மை நிலை:

கருவுற்ற தாயின் வயிற்றின் கீழ்ப் பகுதியில் (Abdominal wall) ஏழு அடுக்குத் தோல் படலம் கருவைப் பாதுகாக்கிறது. இந்தத் தோல் படலம், வெளியில் இருந்து வரும் எதிர்பாராத அதிர்வுகளிடமிருந்து கர்ப்பப்பை நீரில் மிதக்கும் கருவைப் பாதுகாக்கும். எனவே, மென்மையான உடலுறவு பாதிக்காது

மேலும் கரு முட்டையில் விந்து நுழைந்து, கர்ப்பப் பையில் கரு பதிந்ததும், செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். இதனால் மேற்கொண்டு விந்து நுழைய முடியாது. ஆகையால், உடலுறவு கொள்வதால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதீத ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல், கருச்சிதைவுக்கான வாய்ப்பு மற்றும் வேறு சில கோளாறுகள் உள்ள தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உறவு வைத்துக் கொள்வது நல்லது.

தவறான நம்பிக்கை  6

குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

உண்மை நிலை:

தோலின் நிறம், மெலனின் நிறமியின் அளவைப் பொறுத்தது. குழந்தையின் கண், காது, மூக்கு, கை, கால் உள்ளிட்ட உடற்பகுதிகளின் அமைப்பு, தோலின் நிறம், குணாதிசயங்கள் ஆகியவை, தாய்,  தந்தை, முன்னோர்கள் ஆகியோரின் மரபணுக்களைச் சார்ந்தது. தாய் ஊட்டச்சத்து பானங்களைப் பருகுவதன் மூலமாகவோ குங்குமப்பூவைப்  பாலில்  கலந்து  சாப்பிடு வதனாலோ, குழந்தையின் தோலின் நிறத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது.

தவறான நம்பிக்கை  7

கர்ப்பகாலத்தில் தாயின் ஊட்டச் சத்துக்காக இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால், குழந்தையின் தோலின் நிறம் கறுக்கும்.

உண்மை நிலை:

இது மிகத் தவறான நம்பிக்கை. கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இந்தியாவில், பிரசவ காலத்தில் ஏற்படும் மரணங்களில், 50 சதவிகிதம் ரத்தச்சோகையினால் ஏற்படுகிறது. இந்த நோய் வராமல் தடுக்க, மருத்துவர் ஆலோசனையின் பேரில் தாய்மார்கள் கட்டாயம் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

தவறான நம்பிக்கை  8

மாதவிலக்கு தள்ளிப்போன மூன்றாவது மாதத்தில்தான் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடனே செய்து கொண்டால், கரு கலைந்துவிட வாய்ப்புஉண்டு.

உண்மை நிலை:

இந்தத் தவறான நம்பிக்கை, தமிழகத்தில் பல குடும்பங்களில் நிலவுகிறது. சிக்கலான பிரசவத்தில் மிக முக்கியமானது எக்ட்டோபிக் கர்ப்பம் (Ectopic pregnancy).  இந்த நிலையில் கர்ப்பப்பைவாய் (Cervix) வழியாக உள்ளே நுழையும் விந்தணு, கரு முட்டையை அடையாமல், இடையில் உள்ள கருக்குழாயில் (Fallopian tube) தங்கி, அங்கேயே கரு உருவாகி வளரத் தொடங்கிவிடும். கருவின் எடையைத் தாங்க முடியாமல் கருக்குழாய் வெடித்து, சிசுவுக்கு ஆபத்து ஏற்படும். கரு, முட்டையில்தான் உருவாகி வளர்ந்து வருகிறது என்பதை உறுதிசெய்துகொள்ள, மாதவிலக்கு தள்ளிப்போனதுமே கட்டாயம் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து, ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தவறான நம்பிக்கை  9

தாயின் வயிற்றில் மச்சம் இருந்தால், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்.

உண்மை நிலை:

மச்சம் (nevus) என்பது, நிறமியைத் தயாரிக்கும் தோல் செல்களான மெலனோசைட்கள், தோலில் ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் மச்சம்  உருவாகிறது. மனிதர்களுக்கு 40 வயது வரை புதிய புதிய மச்சங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தோலின் நிறத்தைப் பொறுத்து இவை சிவப்பு, கறுப்பு, பழுப்பு எனப் பல நிறங்களில் உடலில் தோன்றும். இதற்கும் கர்ப்பத்துக்கும், பிரசவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை  10

குழந்தையின் உடல்பருமன் முன்னோர்களின் மரபணுக்களை மட்டுமே சார்ந்தது.

உண்மை நிலை:

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் தவறான உணவுப் பழக்கம் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கருவுற்ற சமயத்தில் அதிக அமிலத்தன்மை உடைய உணவுகள், மசாலா மற்றும் நிறைவுறாக் கொழுப்பு கலந்த உணவுகளைத் தாய்மார்கள் சாப்பிட்டால், அவை குழந்தையின் உடல்பருமனை அதிகரிப்பதோடு, நலத்தையும் பாதிக்கும். எனவே, கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு  பயறு வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 -உண்மை,1-15.5.17


திங்கள், 5 ஜூன், 2017

வரலாறு படைத்தீர் வீராங்கனைகளே!



உண்மையிலேயே பெரும் வரலாறு படைத்த விட்டனர் -நம் கழக வீராங்கனைகள். நமது இயக்க வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்படப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டன.

அண்மைக்காலமாக நமது இயக்கத்தில் இயக்க வீராங்கனைகளின் பணிகள் வியப்பை ஊட்டுகின்றன. அவை ஆக்கப்பூர்வமானவை என்று நினைக்கும் பொழுது நெஞ்சம் நிமிர்கிறது - குளிர்கிறது!

மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச் செல்வியும் வடசென்னை கழக மகளிர் அணிச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனியும், சென்னை மண்டல மகளிர்ப் பாசறை செயலாளர் திருவொற்றியூர் உமாவும், பகுத்தறிவாளர் கழக மாநில செயல் தலைவர் பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வியும், (ஆங்காங்கே உள்ள மகளிர் அணியினருடன்) தமிழ்நாடு முழுவதும் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் செய்த நேர்த்தியின் விளைச்சலை கடந்த சனியன்று திருச்சிராப்பள்ளியிலே பளிச்சென்று காணமுடிந்தது.

தமிழர் தலைவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கருஞ்சட்டை வீரர்களும் திரண்டிருந்தனர் என்றாலும், அவர்களின் மத்தியில் கூட ஒரு மலைப்புதான்.

முந்துகின்றனர் வீராங்கனைகள் என்று கழகத் தலைவர் வெளிப்படையாகவே கூறிவிட்டாரே - இனி அவர்கள் மத்தியிலும் வேகப் புயல் வீறு கொண்டு கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம்.

“சபாஷ், சரியானப் போட்டி!” என்று சொல்லத் தோன்றுகிறது! அன்று காலை திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்திலே, திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர்ப் பாசறை மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கலந்துரையாடல் கூட்டம்தானே; மாநிலத்திலிருந்து சில பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று கணக்கு போட்டிருந் தவர்களுக்குத் தலையைச் சுற்றியது. காலையிலே ஓர் கலந்துரையாடல், மாநாடாக களை கட்டி விட்டது. 1200 பெண்கள் பங்கேற்றனர் என்றால் யாரால்தான் நம்ப முடியும்? மதிய சாப்பாட்டுக்கு போர்க்கால அடிப்படையிலேயே பணிகளை மேற்கொள்ள வேண்டியதாகியது - தங்காத்தாள் தலைமையில்.

அந்த கலந்துரையாடலில் 39 பெண்கள் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. கழகத்தில் மகளிர் பங்கின் அவசியத்தையும், மகளிர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படாவிட்டால் மறுமலர்ச்சி என்பது முயற்கொம்பே என்பதையும் எடுத்துக் கூறினர்.

அதுவும் இந்தக் காலக்கட்டத்தில் மகளிர் மீதான வன்முறை, பாலியல் கொடுமைகள் தலை தூக்கி நிற்கின்றன. பெண்கள் மத்தியில் கல்வியும், கைநிறைய சம்பாதிக்கும் பொற்காலமும் ஒரு பக்கத்தில் பூத்துக் குலுங்கும் நிலையில், புதுப்புது சவால்களும் தோன்றத்தான் செய்கின்றன. குறிப்பாக ஆணவப் படுகொலைகளில் (வெட்கம் சிறிதுமின்றி கவுரவக் கொலை என்றும் கூறுவோரும் உண்டு.) பெற்றோர்களே தங்கள் மகளைக் கொல்லும் கொடூரங்களும் நிகழ்ந்து கொண்டுள்ளன.

அரசியலிலே அடிப்படையான, ஆழமான, நேர்த்தியான இலட்சியங்கள் ஏதுமற்று கையறு நிலையில் உள்ளவர்கள் - ஜாதி வெறி தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.

இவைப் பற்றியெல்லாம் கலந்துரையாடல் கூட்டத்தில் சூடாகப் பரிமாறப்பட்டன.  தந்தை பெரியார் என்னும் பேராசான் அளித்துச் சென்றுள்ள அழிவில்லா அறிவு மொழிகள் மகளிர் மத்தியில் சென்றால் தான், அவர்கள் அய்யாவின் அந்த மூலிகைச் செல்வங்களை நுகர்ந்தால்தான், சுவாசித்தால்தான் அவற்றைத் தம் வாழ்வின்  படிக்கட்டுகளாகக் கொண்டு கால்களை பதித்தால்தான் ஆதிக்கச் சக்திகளை புறந்தள்ளி, மானமும் அறிவும் உள்ளவர்களாக மணம் வீச முடியும் என்பதையெல்லாம் ஆகா எவ்வளவு அழகாக , அடுக்கடுக்காக   எடுத்து வைத்தார்கள்.

இந்த மாநாட்டுக்கென்றே ஒரு வெளியீடு வரவேண்டும் என்று கழகத் தலைவர் விரும்பினார். அதன் விளைவு - “பெரியார் அறிவுரை பெண்களுக்கு!” (தொகுப்பாசிரியர் கி.வீரமணி) எனும் நூல்! அது. 48 பக்கங்களைக் கொண்டது. திராவிடர் கழக வெளியீடாக பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டையொட்டி மலர்ந்த மலர்ச்சோலையது! பொருத் தமாக கோபியைச் சேர்ந்த கழக மூதாட்டி லட்சுமி அம்மையார் (வயது 81) அந்நூலை வெளியிட, திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அதனைப் பெற்றுக் கொண்டார். அந்த நூலில் இருந்து ஒரு கருத்தினை கழகத் தலைவர் எடுத்துக் கூறிய, “உண்மையான ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால் தேவை குறைய வேண்டும், தேவையும் அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக்கேடும், ஒழுக்கக்கேடும் வளர்ந்து கொண்டுதான் போகும்” என்ற தந்தைபெரியாரின் வழிகாட்டும் கருத்துகள் தான் - ஆகா எத்தனைச் சிறப்பு!

மதுரை தோழர் ராக்கு தங்கம், இயல்பாகப் பேசியது அனைவரையும் கவர்ந்தது. இத்தகையவர்களையெல்லாம் பிரச்சாரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். (விரைவில் மகளிரே கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படவும் உள்ளன.)

கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் தெரிவித்த கருத்துக்களும், அறிவிப்புகளும் மிகவும் முக்கியமானவை. கழக மகளிர் அணியினருக்கு பாசறையினருக்கு ஆண்டுக்கு இருமுறை பயிற்சிப் பட்டறை (திருப்பத்தூர், ஏலகிரியில் அத்தகு பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டது) பெண்களுக்கான உடல்நலம், மனநலம் குறித்த ஆலோசனைகளுக்காக “பெரியார் குடும்பநல ஆலோசனை மய்யம்“ விரைவில் தொடங்கப்படும் (மேனாள் நீதிபதி வேணுகோபால் அவர்களின் தலைமையில் சிறப்பாக சென்னையில் நடைபெற்று, எண்ணிறந்த குடும்பங்களுக்கு பேருதவி செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர்)  என்றும் நமது பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை உடற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் கூறினார்.

முத்தாய்ப்பாக ஒன்றை கழகத் தலைவர் சொன்னது ‘சலசலப்பை’ ஏற்படுத்தி விட்டது. அதனை ஆண்களுக்கு ஒரு பெரும் சவாலாகவும் கூடக் கருதலாம்.

ஆண்களைப் பார்த்து கழக மகளிர் அணியினர், பாசறையினர் இப்படிக் கூறலாம்.

“உங்களால் முடியாதது எங்களால் முடியும், எங்களால்தான் முடியும்!” என்று பெண்கள் சொல்லவும் வேண்டும், செயலிலும் காட்ட வேண்டும் என்று சொன்ன பொழுது பெண்கள் மத்தியிலிருந்து எழுந்த கரவொலி அடங்கிட வெகு நேரமாயிற்று.

-விடுதலை,29.5.17
.

செவ்வாய், 9 மே, 2017

இரு கால்களை இழந்தபின் கட்டை கட்டி ஓடிச் சாதிக்கும் பெண்!



எல்லாம் இருந்தும் எதையும் செய்யாதவர்கள் வாழும் உலகில், எல்லாம் இழந்தாலும் எப்படியும் சாதிப்பேன் என்பவர்களும் உள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரஸ்வதி இரு கால்களையும் இழந்து, பெங்களூர் மாரத்தான் ஓடும் பெண்களில் முக்கியமானவர்!
தன் கைகால்கள், வயிற்றில் சுமந்து-கொண்டிருந்த குழந்தை என எல்லாவற்றையும் இழந்தார். ‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை... என்கிற நிலையில், தான் சாதித்ததுபற்றி அவரே கூறுகிறார்.
“பெங்களூருல படிச்சு, வளர்ந்தேன். அப்பாவுக்கு டிஃபென்ஸ்ல வேலை, அம்மா இல்லத்தரசி.
ரொம்ப சந்தோஷமான குழந்தைப் பருவம். படிப்பு, வேலைனு எல்லாமே நல்லாப் போயிட்டிருந்தது. என் அடையாளமே சிரிப்புதான். ‘எப்போதும் சிரிச்சுட்டே இருப்பாங்களே அந்தப் பொண்ணு!’ங்கிறது-தான் எனக்கான அடையாளமா இருந்திருக்கு. அந்த நிறைவான மனசுதான் வழ்க்கையின் துயரமான நாள்களைக் கடக்கும்போது உதவியிருக்கு.
நானும் பிரஷாந்த் சவுடப்பாவும் பொதுவான நண்பர்கள் மூலம் அறிமுகமா-னோம். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். திகட்டத் திகட்ட அத்தனை இனிப்பான வாழ்க்கை. இப்போதும் அந்த இனிமை குறையலை. ஆனாலும், அப்படியொரு சம்பவம் மட்டும் நடக்காம இருந்திருந்தா...’’ என நிறுத்துகிற ஷாலினியின் மௌனம் சில நொடிகள் நீடிக்கிறது.
“2012ம் வருஷம்... வெட்டிங் ஆனிவர்சரியைக் கொண்டாடிட்டு, கம்போடியாவிலேருந்து வந்துக்கிட்டிருந்தேன். அப்ப நான் பிரெக்னென்ட்டா இருந்தேன். லேசான காய்ச்சல் இருந்தது. டாக்டரைப் பார்த்தோம். பாரசிட்டாமல் கொடுத்தார். காய்ச்சல் குறையலை. டெங்குவாகவோ, மலேரியாவா-கவோ இருக்கலாம்னு சந்தேகப்பட்டாங்க. அப்படியும் இல்லை. உடம்புல ஒவ்வொர் உறுப்பா செயலிழக்க ஆரம்பிச்சது. என் குழந்தையையும்  இழந்துட்டேன். டாக்டர்ஸுக்கே நம்பிக்கை போய், ‘சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்க. பார்க்கிறவங்க வந்து பார்த்துட்டுப் போயிடட்டும்’னு சொல்லிட்டாங்க. எனக்கு வந்திருந்தது அபூர்வமான பாக்டீரியா தொற்றுன்னு சொன்னாங்க. ஆஸ்பத்திரியில ‘ஐசியூ’வில் மாசக்கணக்கா இருந்தேன். உடம்பெல்லாம் நீலநிறமா மாறியது. எனக்குள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாத ஒரு நிலை.
அடுத்து என்னோட இடது கை அழுக ஆரம்பிச்சது. என்னால இப்பக்கூட அந்த அழுகின வாசனையை மறக்க முடியலை. ஆஸ்பத்திரிக்குப் போறதும், அழுகின செல்களை சுத்தப்படுத்திக்கிட்டு வர்றதும் வாடிக்கையானது. 2013ல என் இடது கையை எடுத்துட்டாங்க. அதை ஜீரணிச்சுக்கிறதுக் குள்ளேயே அடுத்த ஆறே மாசத்துல வலது கை இன்ஃபெக்ஷனாகி, தானாவே விழுந்தருச்சு. அடுத்தடுத்து என் கால்களையும் இழந்தேன். கால்களை எடுக்கப் போற அன்னிக்கு நல்ல பிரைட் கலர்ல நெயில்பாலிஷ் போட்டுக்-கிட்டுப் போனேன்... வெட்டி எறியப்படப் போற கால்கள் போகும்போது அழகா இருக்கட்டுமேன்னுதான்!’’ _ ஷாலினி சிரிக்கிறார். நமக்கோ நெஞ்சம் கலங்குகிறது.
“ரெண்டு வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன். அந்த ரெண்டு வருஷமும் எனக்கு வெளி உலகமே தெரியாது. படுக்கையிலேயே என் வாழ்க்கை முடங்கிப் போயிடுமோனு பயந்தேன். இந்தச் சமுதாயம் என்னை ஒதுக்கிடுமோங்கிற கவலையும் இருந்தது. கால்களை எடுத்த பிறகாவது வெளி உலகத்தை எட்டிப் பார்க்க முடியும்கிற நம்பிக்கை வந்தது. அதனால, கால்களை எடுக்கணும்னு சொன்ன-போது, அதிர்ச்சியைவிடவும் மகிழ்ச்சிதான் அதிகமா இருந்தது.
அப்படியொரு சமாதானத்துக்கு வர்றதுங்-கிறதும் சாதாரண விஷயமில்லை. ‘நான் என்ன செய்தேன்... எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ங்கிற கேள்விகள் என்னை விரட்டாம இல்லை. தப்பு செய்யறவங்களுக்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்னு நம்ம சமுதாயத்துல ஒரு நம்பிக்கை இருக்கில்லையா... அப்படி எந்தத் தவறுமே செய்யாத எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு மாசக்கணக்கா அழுது தீர்த்திருக்கேன். ஒரு கட்டத்துல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அழுது-கிட்டே இருக்கப் போறோம்னு தோணினது. அழுதுகிட்டே இருக்கிறதால வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போறதில்லைனு உணர்ந்தேன். அம்மா, அப்பா, கணவர், தங்கைனு என் குடும்பத்துல உள்ள எல்லாரும் எனக்கு ஆதரவா நின்னாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கைதான் நான் எழுந்திருக்கக் காரணம். செயற்கைக் கால்கள் பொருத்தினதும் அந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது...’’ என்கிற ஷாலினியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த எல்லாமே சாதனைகள்!
“படுத்த படுக்கையா இருந்த காரணத்தினால தூங்கித் தூங்கி ரொம்ப குண்டாயிட்டேன். ஆரோக்கியமாகவும் ஆக்டிவாகவும் இருக்கிறதுக்காக வெயிட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அப்பதான் கோச் ஐயப்பாவோட அறிமுகம் கிடைச்சது. அவரோட வழிகாட்டுதலின் பேர்ல தினமும் ஒன்றரை மணி நேரம் நடக்கவும் உடற்பயிற்சிகள் செய்யவும் பழகினேன். உடம்பை பேலன்ஸ் பண்ணவும், மாடிப்படிகள் ஏறவும் கத்துக்-கிட்டேன். நடக்க ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து ஓடணும்னு தோணினது. வலியைப் பொறுத்துக்-கிட்டு ஓடிப் பழகினேன். அந்தப் பயிற்சிதான் எனக்கு மாரத்தான்ல ஒடற ஆசையைக் கொடுத்தது’’ என்பவர் ‘டிசிஎஸ்’ சார்பாக நடந்த மாரத்தான் போட்டியில் 10 கிலோமீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார். தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
“படுக்கையிலேயே என் வாழ்க்கை முடிஞ்சுடு-மோன்னு பயந்தேன். ஓட ஆரம்பிச்சதும் வாழ்க்கையின் மேல புது ஈர்ப்பும் ரசனையும் வந்தன. ஓடும்போது எனக்குள்ள புது நம்பிக்கை வருது.அது ஒரு தெரபி மாதிரி எனக்கு உதவுது. செயற்கைக் கால்களோட வாழப் பழகறதுங்-கிறது முதல்ல பெரிய சவாலா இருந்தன. ரெண்டரை கிலோ எடை உள்ள அந்தக் கால்களைச் சுமக்கறதும், நடந்து பழகறதும் சாதாரணமானதா இல்லை. ஒவ்வொரு முறை அதை மாட்டும்போதும் வலிக்கும், ரத்தம் வரும். புதுசா செருப்போ, ஷூஸோ வாங்கிப் பயன்படுத்தும்போது முதல் சில நாள்களுக்கு அந்த அசௌகரியத்தை உணருவோமில்லையா... செயற்கைக் கால்களை நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு அந்த வலியி-லேருந்து விடுபடறதை விடவும் வாழ்க்கையில வேற பெரிய லட்சியங்கள் இருந்தது. வலியைப் பொறுத்துக் கிட்டேன். பிராக்டீஸ் பண்ணப் பண்ண உடம்பும் மனசும் சரியானது. முதல் நாள் பத்து நிமிஷங்கள், அடுத்தடுத்த நாள்கள்ல அரை மணி நேரம், முக்கால் மணி நேரம்னு செயற்கைக் கால்கள் அணியற நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்கினேன். இன்னிக்கு என்னால 15 மணி நேரம் வரைக்கும் அதை அணிய முடியுது...’’ வலியை விழுங்கிச் சொல்கிறார்.
தற்போது, பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஷாலினி, அடுத்து 2020_ல் நடக்கவிருக்கும் பாரா ஒலிம்பிக்ஸில் ஓடவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
“எனக்கு வாழ்க்கையில பெரிய ஆசைகளோ, கனவுகளோ இல்லை. என் ஒரே லட்சியம், எப்போதும் சந்தோஷமா இருக்கிறது மட்டும்தான். சந்தோஷமா இருக்கணும்னா பணமோ, வசதிகளோ எதுவுமே தேவை-யில்லைனு நம்பறேன். அது என்னால முடியுது. இன்றைய பொழுதைவிடவும் நாளைய பொழுது இன்னும் இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்னு நம்பறேன். இதுவரைக்கும் அப்படித்தான் நடந்தது. இனியும் தொடரும்’’ என்று நம்பிக்கையின் மறுவடிவமாகப் பேசினார். வெல்க அவரது முயற்சிகள்! ஸீ
-உண்மை இதழ்,16-30..4.17

தேசிய விருது பெற்ற பெண்கள்!

விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது. இந்தத் தருணத்தில் தமிழகத்தின் மண் சார்ந்த விவசாயத்துக்காக ஆய்வு மேற்கொண்டு தேசிய விருது பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள் மூன்று விஞ்ஞானிகள்.

விவசாயத்தில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், மண் இல்லாத விவசாயத்தை நோக்கிய பயணம் சவாலானது. மண்தான் உயிர்ச் சங்கிலியின் ஆதாரம். அப்படிப்பட்ட மண்ணையும் அதில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளையும் அவை எவ்வாறெல்லாம் விவசாயத்தை மேம்படுத்தும் என்பதையும் ஆய்வு செய்துவருகிறார்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சித்தேஸ்வரி, ஜெகதீஸ்வரி, மாலதி ஆகியோர்.

சித்தேஸ்வரி, மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியராகவும் நுண்ணூட்ட ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவருடன் உதவிப் பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரியும் மாலதியும் பணிபுரிகிறார்கள்.

மூவரும் தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்களில் மண் மாதிரிகளைச் சேகரித்து, நுண்ணூட்டச் சத்துகள் விவரப் பட்டியலைத் தொகுத்து வருகிறார்கள். இவர்களது ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் பாராட்டி, இந்திய மண்ணியல் துறை நிறுவனம் தேசிய விருதை வழங்கியுள்ளது.

இந்த மூவர் குழுவால் வேளாண்மைப் பல்கலைக்கழக மண்ணியல் துறையின் ஒருங்கிணைந்த நுண்ணூட்ட ஆய்வு மய்யம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல, துத்தநாகம் குறித்த ஆய்வுக்காகச் சிறந்த விஞ்ஞானி என்ற எஸ்.என்.ரானடே விருதும் சித்தேஸ்வரிக்குக் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் சித்தேஸ்வரிக்குச் சொந்த ஊர் பெருந்துறை. விவசாயப் பின்புலம் இல்லாத குடும்பம். விவசாயத்தின் மீதான ஆர்வமே தன்னைப் பணியில் ஈடுபடவைத்திருக்கிறது என்கிறார்.

1967ஆம் ஆண்டுக்கு முன்பு மண்வள ஆய்வு அதிகமாக இல்லை. அதற்குப் பிறகுதான் ஒவ்வொரு பகுதியாக மண் மாதிரிகளைச் சேகரித்து, என்னென்ன நுண்ணூட்டச் சத்துகள் இருக்கின்றன, எவையெல்லாம் தேவை என்று விவசாயிகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

2005-க்குப் பிறகு ஜி.பி.எஸ். வசதி வந்திருக்கிறது. மண் மாதிரி எடுத்து, அதில் இருக்கிற சத்துகள் குறித்து எடுத்துச் சொல்லி, கூடுதலாக என்னென்ன சத்துகள் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்தால் மகசூல், லாபம், மண்வளம் கூடும்.

விவசாயத்தை மட்டுமல்ல, இந்த மண்ணையும் பாதுகாக்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மற்ற ஆய்வுகளைவிட, நுண்ணூட்டச் சத்துக்கான ஆய்வு ரொம்பவும் நுணுக்கமானது. தொய்வில்லாமல் வேலை நடந்தால் மட்டும்தான், நல்ல முடிவுகளைக் கொடுக்க முடியும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும்

22 மய்யங்கள் இருக்கின்றன. விவசாயிகளுக்குக் கொடுக்கிற பரிந்துரைகள், தொடர்ச்சியான ஆய்வுகள் என்று இந்தியாவிலேயே நம் மய்யம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு மண் மாதிரி வரைபடம் வெளியிட வேண்டும். அந்த வரைபடம் தமிழக விவசாயிகளுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும் என்று சித்தேஸ்வரி சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

உதவிப் பேராசிரியர் ஜெகதீஸ்வரி, போரான் சத்து தொடர்பாக நான் ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன். மற்ற சத்துகளைவிட போரான் ஆய்வு கடினம். ஒரு புள்ளி அதிகமானாலும் மண்ணுக்கு விஷமாகிவிடும். காலிஃபிளவர் போன்ற பயிர்களுக்கு இந்தச் சத்துதான் தேவை. அதனால் போரானைத் தவிர்க்க முடியாது.

இந்தத் துறையைப் பொறுத்தவரை உடலுழைப்பு, ஆய்வு இரண்டும் தேவை. நாங்கள் மூவரும் ஒரு பக்கம் குடும்பப் பொறுப்புகளை கவனித்துக்கொண்டு இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கான ஆய்வுகளைச் செய்துவருகிறோம் என்று சொல்கிறார். இவர் மதுரை மாவட்ட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

சவால்களைக் கடந்த பயணம்

ஆய்வைவிட, ஆய்வு முடிவுகளை நிரூபிக்க விவசாயிகளை நேரடியாகச் சந்திக்கும் அனுபவம் சவாலானது. காலம் காலமாகப் பயிரோடு வாழ்கிற விவசாயிக்கு அனுபவப்பூர்வமான அறிவு அதிகம்.

அதோடு அறிவியலும் இணைகிறபோது விவசாயம் செழிப்பாக இருக்கும்.

எடுத்த எடுப்பிலேயே நம் பரிந்துரைகளைச் சொல்லி விவசாயிகளை நம்பவைக்க முடியாது. செயல் விளக்கத் திடல் அமைத்து நாங்களும் விவசாயம் செய்ய வேண்டும். செயல் விளக்கம் மூலம் நிரூபித்தால் மட்டுமே விவசாயிகள் நம்புவார்கள்.

ஒருமுறை நம்பிக்கை வந்துவிட்டால் அதுவே நிலைத்துவிடும். உங்கள் மண்ணில் இந்தச் சத்து குறைவாக இருக்கிறது, அதற்கு இதைப் பயன்படுத்துங்கள், இந்தப் பயிர் விதையுங்கள் என்று சொன்னால் போதும். அதை நம்பி விவசாயம் செய்வார்கள்.

குழந்தைகள் மாதிரி இருக்கிற விவசாயிகளைச் சரியாக வழிநடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு எங்களுக்கு ரொம்பவும் அதிகம் என்று பொறுமையாகச் சொல்கிறார் உதவிப் பேராசியர் மாலதி.

உடலுழைப்பு மட்டுமே கடினமல்ல, அறிவு சார்ந்த தளமும் கடினமானதுதான். இரண்டிலும் பெண்கள் தடம் பதிக் கிறார்கள். 
படித்த பெண்கள் விவசாயத்துக்கு வரவேண்டும் என்பதில் மூவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. விவசாயத்தில் பெண்கள் இருந்தால், உற்பத்தித் திறன் கூடும். காலத்துக் கேற்ற பயிர் செய்யும் நுட்பம் மேலோங்கும்.

நுண்ணூட்டச் சத்து ஆய்வு மண்ணுக்கானது மட்டுமல்ல. மண் மூலம் தாவரத்துக்கும், தாவரத்திலிருந்து கால்நடைக்கும், கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் நுண்ணூட்டச் சத்துகள் கொண்டு செல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் உலக அளவில் ஆய்வுகள் நடக்கின்றன. அதில் எங்களது பங்கும் நிச்சயம் இருக்கும். அது சவால்கள் நிறைந்த, சவால்களைக் கடந்த பயணமாக இருக்கும்.

பெண்கள் என்ற முறையில் ஊக்கமும் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளுமே எங்களுக்குத் தேவை. அவை சாத்தியமென்றால், இந்த வேலையே உயரத்தைத் தேடித் தரும். தனியாக அதைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை என்கிறார்கள் இந்த விவசாய விஞ்ஞானிகள்.

-விடுதலை,9.5.17
.