பெண்ணுரிமை என்பதை மனிதநேயத்தின் மறுபகுதியாகப் பார்த்த மானுடநேயர் தந்தை பெரியார் அவர்கள். அதனால்தான் 1930களிலேயே இந்தியத் துணைக் கண்டத்தின் முன்னோடியாக (Pioneer) கர்ப்பத்தடை அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல் எப்படி என்ற தலைப்பில், வெளிநாட்டு மருத்துவ அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து - எளிய முறையில் - தமிழில் நமது மக்கள் குறிப்பாக பெண்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் மலிவு விலையில் வெளியிட்டுப் பரப் பினார்கள்!
மேரிஸ்டோப்ஸ் என்ற இங்கிலாந்து நாட்டு அம்மையாரின் அரிய கருத்துகளையும், இன்னும் பல மேதைகளின் கருத்தையும் விளக்கி "குடிஅரசு" வாரஏட்டில் கட்டுரை களாகவும் வெளியிட்டு, அதனை மேடைகளில், சுயமரியாதைத் திருமண பிரச்சாரக் களங்களில் கூறி, மக்களை ஆயத்தப்படுத்தியதுபோலவே, புத்தகங்களை வெளியிட்டு விளக்கினார்கள்.
அக்காலத்தில் பிள்ளைபெற்றுக் கொள்ளாதீர்கள் என்றால், அது கடவுள் விரோதம், மதவிரோதம், சமூக விரோதம் என்று கருதி, கூறியவர்களைச் சாடிய காலம் ஆகும்!
அதில் தந்தை பெரியார் செய்த பணி அசாதாரணமான பெண்ணிய விடுதலைக்கான அமைதியான புரட்சியாகும்!
குடும்பக் கட்டுப்பாடு என்று இன்று அரசுகளால் அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு முக்கியமாகக் கூறப்படும் காரணம் - மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதேயாகும். பொருளாதாரக் காரணமே பெரிதும் பெரும்பாலோரால் சொல்லப்பட்டு வருகின்றது.
ஆனால் தந்தை பெரியார்தம் கண்ணோட்டமே இப்பிரச்சினையில் வேறு, வெறும் மக்கள் தொகை (Population) கட்டுப்பாடு என்பது பெரியார் அவர்களைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம்தான்.
முதலில் பெண்களின் சுதந்திரத்திற்கும், சுகவாழ்வுக்கும் பிள்ளைப் பேறு மிகப்பெரிய இடையூறு ஆகும்! அவர்களைப் பிள்ளைகளைப் பிரசவிக்கும் இயந்திரங்களாக்கி, அவர்கள் சுதந்திரத்தை, இழந்து, உடல் நலம்குன்றி, என்றென்றும் மற்றவர்கள் தயவில் தான் பெண் என்பவள் வாழ வேண்டும் என்ற ஒரு நிலையைத் தவிர்க்கவே கர்ப்பத் தடை - கர்ப்ப ஆட்சி முக்கியம்; ஆணின் அகம்பாவம்தான் பெண்களை இத்துறையில் அடக்கி, பிள்ளை பெறாதவர்களைக் கொச்சைப்படுத்துவது, அதை சாக்காகக் கொண்டு, மற்ற பெண்களுடன் வாழ்க்கையை அமைப்பது போன்ற முறையற்ற செயல்களுக்கு இதை ஒரு வாய்ப்பான கருவியாக ஆண்கள் பயன்படுத்துவது கூடாது என்பதை பெண் ஏன் அடிமை ஆனாள்? என்ற பெண்ணுரிமைச் சாசனமான அந்த நூலில் விளக்கியுள்ளார் புத்தகர் பெரியார்!