அய்யாவின் அடிச்சுவட்டில்....
புரட்சி வெளியிட்ட செய்தி
பெரியார் எதற்காக இதழ் நடத்த விரும்பினார் என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறதன்றோ? மேலும், அக்காலத்திய பரோடா மன்னரின் தனியாட்சியில் மகளிர் முன்னேற்றம் கருதிச் செய்யப்பட்ட ஓர் அரிய சட்டம்பற்றிய செய்தியைப் புரட்சியின் 4.2.1934 ஆம் நாளிட்ட இதழ் நமக்குத் தருகிறது.
பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இந்துச் சமுதாயச் சட்டத்தைப் பின்வருமாறு திருத்திப் புதிய சட்டம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். புதிய சட்டப்படி, ஓர் இந்துப் பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து போனால், அவருடைய விதவைக் குடும்பத்தில் ஒரு பங்காளியாகிவிடுகிறார். விதவைகளின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டு பண்ணிவிட்டிருக்கிறது. முந்தியெல்லாம் ஒரு விதவைக்குப் புருஷன் குடும்பத்திலே சோறும் உடையும்தான் கிடைக்கும். இந்தச் சட்டப்படி, ஒரு விதவை தன் புருஷன் குடும்பத்தில் மற்ற நபர்களைப் போல் ஒரு சம பங்காளி ஆகிவிடுகிறார். இந்தப் புதிய சட்டத்தினால் மகன் பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணுக்கும் சமபங்கு கிடைக்க உரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விதவையான ஒரு மருமகளுக்கு, மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது.
முந்தின சட்டப்படி, பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துகளை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்; விற்பனை செய்ய முடியாது. இப்போது, பெண்கள் தங்கள் சொத்துகளை விற்பனை செய்யவோ அல்லது வேறு விதமாக விநியோகிக்கவோ புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது. இந்தப் புரட்சியான செய்தியினைத் தந்தது மட்டுமின்றி, பெரியாரின் புரட்சி இதழ், இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பாராட்டி, இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும் மற்ற சமஸ்தானங்களிலும் இந்தச் சட்டம் திருத்தப்படுமாயின் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும் என்பதாகத் தன் பெயருக்கேற்ற வகையில் கருத்து வெளியிட்டது!
அளவில் சிறிதான இச்செய்தி நமக்குப் பலவற்றை உணர்த்தவல்லது. நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் ஆட்சி செய்யும் அதிகாரத்தில் இருந்த மன்னர் என்பவர், மக்களாயச் சிந்தனையும், மகளிர் இனத்தின்பால் நல்லுணர்வும் படைத்தவராய் இருக்க முடியும் என்பது; தன்னாட்சி நடத்திக் கொண்டிருந்த சுதேச சமஸ்தான மன்னர்கள் எண்ணற்றோரில் இந்துச் சட்டத்தினைத் திருத்தும் அளவுக்கு மாபெருந் துணிச்சல் வாய்க்கப் பெற்றிருந்தவர் பரோடா மன்னரே என்பது; இந்தியாவைக் கட்டியாண்ட வெள்ளையர்களுக்குப் பரோடா மன்னர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது; இத்தகைய இந்து சட்டத் திருத்தத்தினை வலியுறுத்தியது பெரியாரின் புரட்சி இதழ் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக