பெரியார் இல்லையெனில் பெண் விடுதலை சாத்தியமில்லை!இந்திய விடுதலைக்கு முன்னரே ‘பெண் விடுதலை’ பற்றி முழங்கியவர் பெரியார். ஆணாதிக்கச் சிந்தனைகளால் பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாக இருந்த பெண்ணின விடுதலைக்கு வித்திட்டவர். ‘The second sex’ எனும் புத்தகம் அதிகப் பக்கங்களைக் கொண்ட உலகப் பெண்ணியவாதிகளின் ‘கைடு’. அதற்கு இணையாய் அறுபதே பக்கங்களில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற புத்தகத்தை எழுதிய மேதை தந்தை பெரியார்.
பெரியார் பேசிய பெண் விடுதலை என்பது மிகவும் தனித்துவமானது. காத்திரம் நிறைந்தது. சமூகம் பேசத் தயங்கிய பெண்ணியக் கருத்தியலை முற்போக்காக மிகவும் தீவிரமாகப் பேசியது. அடிமைத்தனம் எந்த வகையில் இருந்தாலும் அதை கொஞ்சமும் எதிர்க்கத் தயங்கவில்லை. பெண் விடுதலைக்கு தடைகளாய் இருக்கும் சாதி, மதம், கடவுள், தேவையற்ற சடங்கு சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்று அனைத்தையும் கடுமையாய் சாடி.. சுக்கு நூறாக்கியது.
பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்றால் கல்வியறிவு அடிப்படை என்பதை உணர்ந்து, பெண்களின் கரங்களில் இருக்கும் கரண்டிகளைப் பறிக்க வேண்டுமென்றார். பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். கும்மி கோலாட்டங்களை மறந்து விட்டு, ஆண்களைப் போல எல்லா விளையாட்டுக்களிலும் ஈடுபட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கும் பலமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்ற நிதர்சனத்தை முன்வைத்தார்.
ஆண்களைப் போல் பெண்களும் சுயமாக இருப்பதும், பொருளாதார சுதந்திரத்திற்கு வழி வகை செய்வதும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
இளவயது திருமணத்தால் பெண்கள் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட, அதனை வன்மையாக எதிர்த்தார். வெறும் பிள்ளை பெறும் இயந்திரமா பெண் என்றவர், ஆணாதிக்கத்தை சாட்டையால் அடிக்கும் கேள்விகளை தொடர்ந்து எழுப்பினார். கட்டாயத் திருமணங்களை ஒழிக்க நினைத்தவர், மறுமணங்களை ஊக்குவித்தார். தாலியை அடிமைச் சின்னமாகக் கருதியவர், திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற வேறுபாட்டைக் காட்டுவதற்கு பெண்களுக்கு தாலி என்றால் ஆண்களுக்கான அடையாளம் என்ன? என்கிற கேள்வியை
வைத்தார்.
பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என அவர்கள் முடிவு செய்யட்டும். அவர்கள் அலமாரியில் உங்களுக்கென்ன வேலை? என மௌனிக்கும் கேள்விகளை எழுப்பியவர், கெட்ட வார்த்தைகள்கூட பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிப்பதாய் மட்டுமே இருக்கின்றது எனச் சாடினார்.
இச்சமூகம் பெண்ணுக்கு இழைத்த அநீதியைத் தொடர்ந்து தோலுரித்தவர், கற்பு என்பது பெண்களை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது என்றும், உண்மையில் அப்படி ஒன்றில்லை எனவும், அப்படியே இருந்தாலும், ஆண்களுக்கு அது ஏன் இல்லை என்று வினவினார்.
ஓர் ஆண் எப்படித் தான் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்கிறானோ, அதேபோல பெண்ணும் தான் விரும்பும் ஆணைத் திருமணம் செய்யலாம் என்றார். கற்புக்காக உண்மையான அன்பை, காதலை மறைத்து, காதலும்-அன்பும் இல்லாதவனுடன் வாழும் சமூகக் கொடுமை அழிய வேண்டுமென துணிந்து பேசினார். பெண் மறுமணம், திருமண விடுதலை, பெண்களுக்கும் சொத்தில் உரிமை போன்ற கருத்துகளைக் கொண்டு, ஆண்மை என்கிற பதம் அழியாமல் பெண் விடுதலை சாத்தியம் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறினார்.
அந்தக் காலத்தில் கணவனை இழந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது. நகைகள் எதுவும் அணியக் கூடாது. பூ மற்றும் பொட்டு வைத்தல் கூடாது, வெள்ளைச் சேலையினை மட்டுமே உடுத்த வேண்டும். குறிப்பாக பிராமண சமூகத்தில் பெண்கள் தங்கள் தலைமுடியை மழித்து மொட்டைப் போடும் பழக்கமும் இருந்தது. கணவனை இழந்த பெண்கள் படும் துயரைப் பார்த்தவர், அவர்களின் மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தார். தான் பேசியும் எழுதியும் வந்த சீர்திருத்தங்களை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார் பெரியார். திருமணமாகி ஒரே மாதத்தில் கணவனை இழந்த தன் தங்கையின் 10 வயது மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்.
கோவில்களில் பெண்களைப் பொட்டு கட்டுதல் எனும் பெயரில் தேவதாசிகளாக உருவாக்கினார்கள். இதனால் பாலியல் தொழில் வளர்ந்தது. இதனை பெரியார் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். விலைமாதர் நிலைக்கு ஒரு பெண்ணைத் தள்ளுவதும் ஆண் வர்க்கம்தானே? ஏன் ஆண்களுக்கு இந்த சொல் வழக்கில் இல்லை என்ற காத்திரமான கேள்விகளை முன் வைத்தார்.
வெறும் பேச்சளவில் அவர் எதையும் சொல்லவில்லை. தன் வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகளைப் பேச வசதி செய்து கொடுத்துள்ளார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள்
தங்குவதற்காக ஒரு விடுதி ஒன்றையும் நடத்தி இருக்கிறார் பெரியார். 1920களிலேயே மனைவியையும், இளைய சகோதரியையும் பொது வாழ்வில் ஈடுபடச் செய்தார். பெரியாருடன் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் கூட கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டனர்.
பெண் விடுதலையை சுயமரியாதை இயக்கத்தின் ஒரு செயல்பாட்டாகக் கருதினார் பெரியார். சமுதாயம் சார்ந்த பெண்ணியத்தை தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார். ‘தனியாக வாழும் பெண்கள், கணவனை இழந்த பெண்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக மாநாட்டில் பங்கேற்க வேண்டும்’ என்று 1928 செங்கல்பட்டில் நிகழ்ந்த முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே பெரியார் எழுதுகிறார். அந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது…
* 16 வயதுக்குக் கீழுள்ள பெண்களுக்குத் திருமணம் நடத்தக் கூடாது.
* திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
* கணவனை இழந்த பெண்களின் மறுமணம் வரவேற்கப்பட வேண்டும்.
* ஜாதி, மதக் கட்டுப்பாடு இல்லாமல் ஆண், பெண் இருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கைத் துணையினை தாங்களே தேர்வு செய்யலாம்.
* பெண்களுக்கும் சொத்துரிமை வழங்க வேண்டும்.
* பெண் தான் விரும்பும் எந்தத் துறையிலும் வேலை செய்யலாம்.
* ஆரம்பக் கல்வி ஆசிரியர் பணியிடங்களைப் பெண்களுக்கே ஒதுக்க வேண்டும்
போன்றவை முக்கியமான தீர்மானங்கள்.
தான் வாழும் காலமெல்லாம்
பெண்களின் அடிப்படை உரிமைகளுக் காகக் குரல் கொடுத்தவர் பெரியார். பெண்கள் மாநாட்டில், பெண்களால் வழங்கப்பட்ட பெரியார் என்கிற பட்டத்துக்கு நூறு சதவிகிதமும் உரித்தானவர். பெரியார் என்றொருவர் இல்லை என்றால், இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கான 33% இட
ஒதுக்கீட்டை நாம் பெற்றிருக்க முடியாதுதான்.
http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6364&id1=118&issue=20200301
- குங்குமம் வெளியீடான தோழி இதழ், 1.3.20