சனி, 24 ஜூன், 2017

விவசாயத்தை நவீனமாக்கும் பெண்!



அங்கிதா குமாவத், அய்அய்.எம். கல்கத்தாவில் படித்த எம்.பி.ஏ. பட்டதாரி. புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், அந்த வேலையைத் துறந்து பால் பண்ணை விவசாயியாக மாறியிருக்கிறார். மாத்ருத்வ பால் மற்றும் இயற்றை உணவு நிறுவனத்தைத் தற்போது அஜ்மீரில் நிர்வகித்து வருகிறார். அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பணியாற்றிக் கொண்டி ருந்த அங்கிதா, அந்தப் பணியை உதறிவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவருடைய அப்பா.

அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய தந்தை பூல்சந்த் குமாவத், விருப்ப ஓய்வுபெற்று சில ஆண்டுகளுக்கு முன் பால் பண்ணை வியாபாரத்தைத் தொடங்கினார். கலப்படமற்ற உணவைத் தன்னுடைய ஊர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பால் பண்ணையை அவர் ஆரம் பித்தார்.  பொறியியல் படித்து பொதுப்பணித்துறையில் பணி யாற்றினாலும் பூல்சந்த் விவசாய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அதனால், நாமே ஏன் ஒரு மாடு வாங்கி குடும்பத் தேவைக்காக வளர்க்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 3,500 ரூபாய்க்கு ஒரு மாட்டை வாங்கி மகளுக்குக் கலப்படமற்ற பாலையும், பால் பொருட்களையும் கொடுத்திருக்கிறார். இந்தக் கலப்பட மில்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்ததும் அங்கிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பால் பொருட்கள் மட்டு மல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் கலப்பட மில்லாமல் சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர், வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்கலாமே என்று நினைத்தார்.   2009இல் அஜ்மீரில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார்.  2014ஆம் ஆண்டு, அப்பாவின் வழித்தடத்தைப் பின்பற்றி, அங்கிதாவும் தன்னுடைய பெருநிறுவன வேலையைத் துறந்தார். தற்போது மாத்ருத்வ பால் மற்றும் இயற்கை உணவு நிறுவனத்தின் இணை உரிமையாளராக இருக்கிறார் அங்கிதா. இவரது பண்ணையில் கோதுமை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விளைவிக்கிறார். அத்துடன் காளான் வளர்ப்பிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் அவர். அங்கிதா பொறுப்பேற்ற பின், பலவிதமான தொழில்நுட்பங்களைத் தங்களுடைய பால் பண்ணையிலும் விவசாய முறையிலும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். மொத்த பண்ணையும் சொட்டு நீர்ப்பாசன முறையிலும் சூரிய ஆற்றலிலும் இயங்குகிறது. மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் தங்களுடைய பண்ணையில் நிறுவியிருக்கிறார்.

தங்கள் பண்ணையில் பாரம்பரியம், நவீனம் இரண்டும் கலந்த விவசாய முறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறார் அங்கிதா

-விடுதலை,20.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக