விளையாட்டுகளில்கூட நம் சமூகத்தில் ஆண்பால், பெண்பால் பேதம் இருக்கிறது. இதெல்லாம் போன தலைமுறை உருவாக்கிவைத்த பழங்கதைகள். இந்தத் தலைமுறைப் பெண்கள் இந்தப் பழங்கதைகளையெல்லாம் தாண்டி இமாலயச் சாதனைகளைப் படைத்துவருகிறார்கள். அவர்களுள் சிலர் இமயத்திலேயே ஏறிச் சாதனை படைத்துவருகிறார்கள்.
உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இந்தச் சிகரத்தில் ஏற 1921-லிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. என்றாலும் 1953-ல்தான் முதன்முதலில் எவரெஸ்ட்டில் மனிதனின் காலடி பட்டது. ஏனெனில், எவரெஸ்ட் ஏறுவது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை. கடும் குளிரைத் தாங்கி, பனிச் சரிவிலிருந்து மீண்டு ஒருவர் உச்சியைத் தொடுவது கடினம். அப்படித் தொட்டாலும் திரும்பிவருவது அதிசயம். அதனால்தான் அது உலக சாதனையாகக் கொண்டாடப்படுகிறது. இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று 292 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களில் 200 பேரின் உடல் களைத்தான் மலை யேறுபவர்கள் மைல்கற்களாகப் பாவித்துவருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த டிஸ்வாங் பல்ஜாரின் 1996-ல் மலைச் சரிவின்போது இறந்துவிட்டார். பச்சை நிறக் காலணியுடன் கிடக்கும் அவரது உடல் கிரீன் பூட் என்னும் பெயரில் மைல்கல்லாகப் பயன்பட்டுவருகிறது.
இந்தப் பின்னணியுடன் பார்த்தால் எவரெஸ்டில் ஏறுவதிலுள்ள அறைகூவல்கள் புரியும். வாழ்நாளில் ஒருமுறை எவரெஸ்ட் ஏறுவதே பெரும் சாதனைதான். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷு ஜாம்சென்பா பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை ஏறிச் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை 2011இல் அவர் நிகழ்த்தினார். அத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்து 2013இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்டார். ஆனால் இந்தச் சாதனையை நேபாள அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. கடந்த மாதம் 12ஆம் தேதி நான்காவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறியுள்ளார். இந்த ஆண்டு அன்ஷுவுடன் ஏறத் தொடங்கியவர்களில் சிலர் இறந்துவிட்டனர். சிலர் காணாமல் போய்விட்டனர். இவரது சொந்த ஊர் பம்டிலா. 38 வயதான இவர் இரு குழந்தைகளுக்குத் தாய்.
1921இல் தொடங்கிய எவரெஸ்ட் ஏறும் பயணத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் முயன்றுவருகிறார்கள். இவர்களில் பலர் பாதியிலேயே திரும்பியிருக்கிறார்கள். பலர் திரும்பாமல் எவரெஸ்ட் பனியில் உறைந்து
போயிருக்கிறார்கள். இந்தத் தடைகளைக் கடந்து கடினமான இலக்கை நூற்றுக் கணக்கான பெண்கள் மட்டுமே அடைந்திருக்கிறார்கள்; சாதனை படைத்திருக் கிறார்கள்.
முதல் பெண்
இந்தச் சாதனைப் பட்டியலைத் தொடங்கிவைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஜுன்கோ டபெய்.
1975இல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இமயம் தொட்டு இமாலயச் சாதனையைப் படைத்த 492 பேர்களுள் இந்தியப் பெண்களுக்கும் கணிசமான பங்குண்டு. பச்சேந்திரி பால்தான் எவரெஸ்ட் தொட்ட முதல் இந்தியப் பெண். 1984ஆம் ஆண்டு அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். உத்தராகண்ட் மாநிலத்தில் நகுரி என்னும் கிராமம்தான் இவரது சொந்த ஊர். அந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரிப் பெண் இவர்தான். கல்லூரியில் படித்தபோது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பதக்கங்கள் பெற்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்துக்காக ஒருமுறை மலையேறியிருக்கிறார். பிறகு மலையேற்றத்தையே தன் வாழ்க்கையாகக் கொண்டார். அதற்காக முறையான பயிற்சி எடுத்துக் கொண்டார். முதலில் கங்கோத்ரி, ருத்ரகிரியா ஆகிய மலைகளில் ஏறினார். 1984ஆம் ஆண்டு மே 23 எவரெஸ்ட் சிகரம் தொட்டார். இந்தியாவே அவரைக் கொண்டாடியது. அந்த ஆண்டே மத்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தது. அர்ஜூனா விருது போன்ற பல விருதுகளும் அவரைத் தேடி வந்தன.
அரிதிலும் அரிது
அருணிமா சின்ஹா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தின் கடைசிக் குழந்தை. இளம் வயதிலேயே கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர். விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். ஆனால், குடும்பச் சூழல் கருதித் தனது விளையாட்டுத் திறமையை வைத்து ஏதாவது அரசு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பணிக்கான நேர்காணலுக்குச் சென்றபோது 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அருணிமாவின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழிப்பறித் திருடர்கள் அவரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். கால் ரயில் சக்கரத்தில் சிக்கிச் சிதைந்தது. காலை இழந்தபோதும் கலங்காத அவர், ஏதாவது ஒரு விதத்திலாவது சாதித்தே ஆக வேண்டும் என நினைத்தார். கால் போய்விட்டது. இனி என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்குப் பதிலாக ஊனமுற்ற காலைக் கொண்டு இமயம் தொடத் துணிந்தார். இரண்டே ஆண்டுகளில் 2013இல் 52 நாட்கள் பயணத்தில் தன் ஒற்றைக் காலால் இமயம் தொட்டார். ஒற்றைக் காலில் இமயம் தொட்ட முதல் பெண் என்ற உலக சாதனைக்கும் சொந்தக்காரரானார்.
முதல் சிறுமி
மலாவத் பூர்ணா, தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்திலுள்ள பகலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிச் சிறுமி. இவருடைய தந்தை விவசாயக் கூலி. அரசுப் பள்ளியில் இலவசக் கல்வி பயின்றுவந்திருக்கிறார். ஆபரேஷன் எவரெஸ்ட் என்னும் திட்டத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். லடாக், டார்ஜிலிங் ஆகிய மலைகளில் முதலில் ஏறினார். 2014ஆம் ஆண்டு தனது 13 வயதில் எவரெஸ்ட் ஏறினார். மிகக் குறைந்த வயதில் இமயம் தொட்ட பெண் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் பூர்ணா. இவரது போராட்ட வாழ்க்கை திரைப்படமாக வெளி வந்துள்ளது.
இரட்டையர் சாதனை
இன்னொரு புதிய சாதனையை தஷி மாலிக், நுங்ஷி மாலிக் சகோதரிகள் படைத்துள்ளனர். இரட்டையர் களான மாலிக் சகோதரிகள் 2013ஆம் ஆண்டு இணைந்து இமயம் தொட்டார்கள். முதன்முதலில் எவரெஸ்ட் தொட்ட பெண் இரட்டையர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். அரியானாவைச் சேர்ந்த இந்தச் சகோதரிகள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள்கள். அதனால் இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாடு, கேரளா, மணிப்பூர், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் எனப் பல மாநிலங்களில் கல்விபயின்றுள்ளனர்.
நீங்கள் யார் எனக் கேட்டால், தாய், மனைவி, மகள் போன்ற குடும்ப அடையாளங்களையே நம் இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர் சொல்வார்கள். ஆனால், இந்தக் குடும்ப அடையாளங்களைத் தங்கள் சமூக அடையாளங்களாக பெண்கள் உருவாக்க வேண்டியது அவசியம்.
-விடுதலை,20.6.17