திங்கள், 30 ஜனவரி, 2017

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டு முதல் பெண் நீதிபதி




உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றதன் மூலம் தமிழகத்திலிருந்து அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் ஆர்.பானுமதி. தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரி யில் சட்டம் பயின்றவர். 1981ஆம் ஆண்டு வழக்குரை ஞராகப் பதிவுசெய்துகொண்டார்.

இந்தியா சுதந்திரம்பெற்ற பின்னர் உச்சநீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள பானுமதி யின் பதவிக் காலம் ஆறாண்டுகள். முப்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் இவர் உள்பட இப்போது இரண்டு பெண் நீதிபதிகள் உள்ளனர்.

கோயம்புத்தூர், சென்னை, வேலூர், புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இவர் நீதிபதி யாகப் பணியாற்றியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட் டத்தில் நீதிபதியாகப் பணியாற்றியபோதுதான், பிரேமானந்தா வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார். பிரபல வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி அந்த வழக்கில் பிரேமானந்தாவுக்கு ஆதரவாக வழக்காடியது குறிப்பிடத்தக்கது. பானுமதி வழங்கிய திட்டவட்டமான தீர்ப்பை, உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது, கல்விக் கட்டண நிர்ணய வழக்கு, சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டுக்கொன்ற சிறப்பு காவல் படையி னருக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பதவி உயர்வு ஆகிய வழக்குகளில் பானுமதி தீர்க்கமான தீர்ப்புகளை வழங்கி னார். இரண்டு வயதிலேயே, தம் தந்தையை இழந்துவிட்டார். இவருடைய கணவர் கிருஷ்ணகிரியில் வழக்குரைஞராகப் பணிபுரிகிறார்.

இவர் உடன்பிறந்த சகோதரிகள் மூவர்.

தொழில்ரீதியில் குற்றம் குறையற்றவர். சட்டத்துறை சார்ந்த அனைத்து வழிமுறைகளையும், ஒழுங்குக் கட்டுக் கோப்பையும் கொஞ்சமும் பிறழாமல் கடைப்பிடிப்பவர். நேர்மைக்கும், பாரபட்சமற்ற தன்மைக்கும் பெயர் போனவர்.

அடிப்படையில் ஒரு சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர், எளிமையானவர். முழுக்க முழுக்க கடுமையான உழைப்பு, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம், இன்று இந்த உயரிய பதவிக்கு முன்னேறியிருக்கிறார். உண்மையிலேயே பகட்டற்ற, தன்னடக்கம் கொண்ட வாழ்க்கை நெறிமுறைக்கு இலக்கணமாக விளங்குகிறார்.

-விடுதலை,9.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக