வியாழன், 29 டிசம்பர், 2016

அன்னை மீனாம்பாள்

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்காகப் போராடிய ஓய்வில்லா உழைப்பாளி இவர்! அம்பேத்கர், மீனாம்பாளின் பணியைப் பாராட்டி, என் அன்பு  சகோதரி என்று மகிழ்ந்து கூறினார்.

1904 டிசம்பர் 26 அன்று ரங்கூனில் பிறந்தார் மீனாம்பாள். அவரது தந்தை வாசுதேவபிள்ளை மிகப்பெரிய வர்த்தகர்... செல்வந்தர். அம்மா மீனாட்சி.  ரங்கூனில் கல்லூரிப் படிப்பை முடித்தார் மீனாம்பாள். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளை நன்கு கற்றார். அவரது தந்தை ஆதி திராவிடர்  இயக்கத் தலைவராக இருந்ததால், இயல்பிலேயே அரசியலில் மீனாம்பாளுக்கு ஆர்வம் இருந்தது.

அம்பேத்கரின் கருத்துகள் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு  கொண்டிருந்தார். 16 வயதில் சென்னை வந்தவர், தலித் தலைவர் சிவராஜை திருமணம் செய்து கொண்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள்  கவுரவ நீதிபதியாகப் பணியாற்றினார்.

அக்காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் ஆழமாக அறிந்து கொண்டார். சைமன் குழு  வருகையை ஆதரித்து குரல் எழுப்பி, பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

தலித் உரிமைப் போராட்டங்கள், சுயமரியாதைக் கூட்டங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெண்ணுரிமைப் போராட்டம் என்று தமிழ்நாட்டில் நிகழ்ந்த  அத்தனை முக்கிய நிகழ்வுகளிலும் துணிச்சலுடன் பங்கேற்றார். திராவிட இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தைச்  சூட்டியவர் மீனாம்பாள்தான்!

அம்பேத்கரின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியையும் மேற்கொண்டார். மும்பையில் ஒரு  முறை மீனாம்பாளின் வீட்டுக்கு வந்த அம்பேத்கர், அவரின் பணியைப் பாராட்டி, என் அன்பு சகோதரி என்று மகிழ்ந்து கூறினார்.

சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் துணை மேயராகப் பொறுப்பேற்றார். திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர், சென்னைப்  பல்கலைக்கழக செனட் உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி நிறுவனத்தின் தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குநர், மகளிர்  தொழிற் கூட்டுறவு குழுத் தலைவர், லேடி வெலிங்டன்  கல்லூரி தேர்வுக்குழுத் தலைவர் என்று இன்னும் இன்னும் பல பொறுப்புகளை ஏற்று,  சிறப்பாகச் செயல்பட்ட மீனாம்பாள், 1992 நவம்பர் 30 அன்று காலமானார்.

-விடுதலை,15.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக