திங்கள், 15 ஆகஸ்ட், 2016

மாதாவிடாய் பற்றி அவசியம் அறிய வேண்டியவை!

சினைப்பையில் உருவாகும் கருமுட்டைகள், ஹார்மோன் சுழற்சிக்கு உட்பட்டு, முழு வளர்ச்சியடைந்து, உடைந்து, பின்னர் வரக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் முடிவில், கர்ப்பப்பையில் உதிரப்போக்கு ஏற்படுவதை மாதவிடாய் என்கிறோம். சினைப்பையின் செயல்பாட்டை மூளையின் உதவியோடு நாளமில்லாச் சுரப்பிகள் கவனித்துக்கொள்ளும். பொதுவாக, 9 _15 வயதுக்குள் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவார்கள் (முதல் தடவை மாதவிலக்கு ஏற்படுவது). இந்த வயதுக்குக் குறைவான / அதிகமான வயதில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவது இயல்பிற்கு மாறானது. சிலருக்கு நிகழக்கூடியது. அந்தச் சிறுமிகளை மருத்து-வரிடம் அழைத்துச் சென்று, பூப்பெய்துதல் பிரச்சினைக்கான காரணத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்து, சரிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். தவறினால், அந்தச் சிறுமி பெரியவளாகி வளரும்போது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுவதில் தொடங்கி கேன்சர் உள்ளிட்ட பிரச்சினைகள் வரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பூப்படையும் முன்...

பெண் பிள்ளைகள் பூப்படைவதற்கு 3, 4 வருடங்களுக்கு முன்பிருந்தே, உயரம் அதிகரிப்பது, எடை கூடுவது, மார்பகம் வளர்ச்சியடைவது என அதற்கான மாற்றங்கள் அவர்கள் உடலில் வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போதிருந்தே அவள் அம்மா, அந்தச் சிறுமியை மாதவிடாய் நாட்களுக்குத் தயார்படுத்த வேண்டும். ‘மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படும்’ என்பதை பூப்பெய்வதற்கு முன்கூட்டியேவும், முதல் மாதவிலக்கு நிகழ்ந்த பின்னர் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும், சோர்வும் இயல்பானவையே என்பதையும், அந்நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், நாப்கின் பயன்பாடு, எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துணவின் அவசியம் என... மாதவிடாயை அந்தச் சிறுமி இயல்பானதொரு உடல் மாற்றமாக கடப்பதற்-கான விழிப்பு உணர்வை அளிக்க வேண்டும்.

பாலியல் சம்பந்தமான கேள்விகளை அவர்கள் எழுப்பினால், அவற்றைத் தவிர்க்காமல், ‘அதெல்லாம் பேசக்கூடாது’ என்று அவர்களை அடக்காமல், உரிய பதிலை எளிமையாக அவர்களுக்கு அளிக்க வேண்டும். பள்ளிக்கு முன்பாக, வாழ்க்கைக் கல்வியின் அடிப்படை குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டிய இடம், வீடுதான்.
சிறுமிகளுக்கு சுழற்சி மாறலாம்...!

சில சிறுமிகளுக்கு பூப்படைந்த முதல் மூன்று வருடங்கள்வரை, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கலாம். அது இயல்பானதே. காரணம், பருவமடையும்போது அந்தச் சிறுமியின் நாளமில்லாச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாமல் இருக்கலாம். மூன்று வருடங்களுக்குள் வளர்ச்சி முழுமையடைந்து, நாளமில்லாச் சுரப்பிகள் சரியாக வேலை செய்யத் தொடங்கிவிடும், மாதவிலக்கு சுழற்சியும் சீராகிவிடும். ஆனால், பூப்படைந்த மூன்று வருடங்களுக்குப் பிறகும் சுழற்சி சீராகவில்லை எனில், மருத்துவ ஆலோசனை அவசியம்.

மாதவிடாய் சுழற்சி... எது சரி, எது பிழை?

21 _ 35 நாட்களுக்குள் சுழற்சி முறையில் உதிரப்போக்கு ஏற்படலாம். ஆரம்ப கட்டங்களில் ஒவ்வொரு முறையும் 2 _ 8 நாட்கள்வரை உதிரப்போக்கு இருக்கலாம். ஒரு சுழற்சியில் 15 முதல் 80 மில்லி அளவுக்கு உதிரப்-போக்கு வெளிப்படலாம். இவையெல்லாம் வழக்கமான ஒன்று, மாதவிடாய், இயல்பைவிட அதிகளவில் வித்தியாசப்பட்டால், அது இரண்டு மாதங்களுக்குப் பின்னும் இதேபோன்ற சுழற்சியாகவே நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஹார்மோன் ஏற்ற இறக்கம் முதல், சினைப்பையில் நீர்க்கட்டி, அதிக அல்லது குறைந்த எடை, இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சினை, இன்சுலின் குறைபாடு, மன அழுத்தம், மனச்சோர்வு, ரத்தம் உறைவதில்  ஏற்படும் சிக்கல் வரை இதற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். அதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தவறினால், பின்னாளில் அது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம்.

அந்த மூன்று நாட்களில்...

மாதவிடாய் நாட்களின் வலியும், உதிரப்போக்கும் இயற்கையானது என்பதால், அச்சம் தேவையில்லை. சிலரால் சாப்பிட முடியாது. சிலருக்கு பசிக்காது. இருந்தாலும், சத்துணவு அவசியம். ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இந்நாட்களில் ஓய்வு அவசியம் என்றாலும், ஒரேயடியாக முடங்கி இருக்கத் தேவையில்லை. மாறாக, உடலுக்கு அதிக வேலை கொடுக்காமல் சிறுசிறு வேலைகளை செய்யலாம். சுகாதாரமாக இருப்பதுடன், அரிப்பு, துர்நாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கெமிக்கல்கள் கொட்டி தயாரிக்கப்படும் நாப்கின்கள் தவிர்த்து, பருத்தியிலான பட்டை (காட்டன் பேடுகள்), பருத்தி உள்ளாடைகள் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக, ஒரு பெண் தன் மாதாந்தர சுழற்சி தேதி, அப்போது ஏற்படும் உடல் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதில் மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

நடுத்தர வயது முதல் மாதவிடாய் நிற்கும் வரை...!

மாதவிடாய் காரணிகளைப் பொறுத்தவரை, 15_25 வயதுக்குள் படிப்புச்சுமை, வேலை அழுத்தம், திருமணம் என ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் என்பதால், அதனால் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சியிலும் பிரதிபலிக்கலாம். இந்த வயதுகளில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டால், மருத்துவரைச் சந்தித்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை 21_26 வயதுக்குள் பிறக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது. ஒருவேளை தள்ளிப் போடுவதாக இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். இன்றைய சூழலில் 28, 30 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், அதன் பின்னரும் சில பல காரணங்களுக்காக 3, 4 ஆண்டுகளுக்கு கருத்தரிப்பதைத் தள்ளிப் போடுகிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமாகக் காலம் தாழ்த்துவதால், பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, அதுபோன்ற முடிவில் இருக்கும் பெண்களுக்கும் மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை. அதேபோல, நிரந்தரமாக குழந்தை பெற்றுக்-கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதற்கான மருத்துவ ஆலோசனைகள், வழிமுறைகளை மருத்துவமரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

30 _ 40 வயதில் அதிகமான உதிரப்போக்கு இருந்தால், அதற்கு கர்ப்பப்பை கட்டி உள்ளிட்டவை காரணங்களாக இருக்கலாம். மாதவிடாய் இல்லாத சமயத்தில் உதிரப்போக்கு, உடலுறவுக்குப் பின் உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், அது உள் உறுப்பு பிரச்சினையின் அறிகுறியென உணர்ந்து, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

40 _ 45 வயதை மாதவிடாய் நிற்பதற்கு (மெனோபாஸுக்கு) முந்தைய நிலை எனலாம். இந்தச் சமயத்தில் பெண்களுக்கு கட்டுக்-கடங்காத உதிரப்போக்குடன் அதிக சோர்வு, இடுப்பு வலி, மூட்டு வலி, சர்க்கரை, உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனால் அதிக மன அழுத்தம் உண்டாகும்.

45 வயதுக்கு மேல் ஓராண்டு காலம் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படவில்லை என்றால், அது மாதவிடாய் நின்றதன் அடையாளம். (முழுமையான மெனோபாஸ் ஆகும்.) அதற்குப் பிறகு 52 வயது வரை திடீரென உதிரப்போக்கு ஏற்பட்டால் அதை புற்றுநோய்க்கான அறிகுறி என எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மொத்தத்தில், ஏன், எதனால், எப்படி என மாதவிடாயின் நிகழ்வுகளை ஒவ்வொரு பெண்ணும் அறிவியல் ரீதியாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியதும், அதில் மாற்றங்கள் ஏற்படும்போது தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியதும் மிக முக்கியம்.

சத்தான உணவு... கட்டாயம் தேவை!

பெண்களின் மாதவிலக்கு உதிரம், கழிவு அல்ல. ஒவ்வொரு மாதமும் அது அவர்களின் உடல் உருவாக்கி வெளியேற்றும் குருதி. ஒவ்வொரு சுழற்சிக்கும் அவர்கள் தங்களின் உடலில் 80 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள் எனில், அதை ஈடுகட்டும் அளவுக்கு அவர்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம்? குறிப்பாக, கீரை, பச்சைக் காய்கறிகள், பேரீச்சை என இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின்_சி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கு சில வார்த்தைகள்

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல், மனக்குழப்பம், அவள் மனதை படாதபாடு படுத்தும், பிரசவ உதிரப்போக்கு அவளுக்கு ஏற்படுத்தும் ரத்தச்சோகை, கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும், மாதவிடாய் நிற்கப் போகும் நிலையில், ஏற்படும் மிக அதிகமான உதிரப்போக்கு, வாழ்க்கையையே வெறுக்கும் அவளை அல்லல்படுத்தும்.

உதிரப்போக்கு நாட்களில் அவள் படும் துயரங்களைப் புரிந்துகொண்டு, அவள் சுமைகளைக் குறைத்து, அந்நாட்களில் பலம் குறைந்து இருக்கும். அவள் வேலைகளைப் பகிர்ந்து, அவளை ஓய்வாய் மன அமைதியுடன் இருக்கச் செய்ய வேண்டியது ஆண்களின் கட்டாயக் கடமையாகும்.
--உண்மை,1-16.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக