சிந்தனை : ஆணைவிட பெண்ணே சிறந்தவள் அறிவியல் ஆதாரங்கள் இதோ:
“Inferior” என்னும் புத்தகத்தின் ஆசிரியர், அஞ்சலினா சயினி (Angelina Saini). ‘இவர் எழுதிய கட்டுரைகள்“Guardian”, “New Scientist”, “Wired”, “The Economist”, “Science” போன்ற புகழ் பெற்ற மாத இதழ்களில் இடம் பெற்றுள்ளன.
இவர் 2015ஆம் ஆண்டுக்கான ‘American Association for the Advancement of Science Kavli Science Journalism gold award’ பெற்றுள்ளார். இந்த நூலில் இவர் பெண்களின் பாதிப்புகளையும் இயற்கையாய் பெண்களுக்கான சிறப்புகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.
இந்தியாவில் பொதுமக்கள் ஆண் குழந்தைகள் பெறவேண்டும் என்பதையும், பெண் குழந்தைகள் எனில் கருவிலே கலைப்பு செய்வதையும், பெண்களுக்கு படிப்புரிமை மறுக்கப்படுவதையும் புள்ளி விவரங்களுடன் விளக்கமாக எழுதியுள்ளார். 2007இல் ஒரிசாவில் ஒரு கிணற்றை பெண்குழந்தைகளின் சடலங்களை இடும் புதைகுழியாக மக்கள் உபயோகப்படுத்தியதையும், 2013இல் மத்தியப் பிரதேசத்தில் உயிரோடு பெண் குழந்தைகளைப் புதைத்த கொடூரத்தையும், 2014இல் போபாலில் பெண் குழந்தைகளை குப்பையில் எறிந்ததையும், ஆகிய கருணையற்ற நடவடிக்கைகளைப் பற்றி துயரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
1994இல் இந்திய அரசாங்கம் ஒலிக்கருவி மூலம் குழந்தைகள் ஆணா_பெண்ணா என்று கண்டறிவதைத் தடுக்க சட்டம் போட்டாலும், காசுக்காக சில மருத்துவமனைகள் சட்டத்தை மீறுகின்றன. 2011இல் இந்தியாவின் பிறப்பு விகித கணக்கெடுப்பில் ஆண் குழந்தைகள் அதிக விகிதம், பெண்குழந்தைகள் 11 மில்லியன் குறைவு என்று தெரியவருகிறது.
ராணி விக்டோரியா காலத்தில் பெண்களை அழகுப் பொம்மைகளாகவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளும் வேலைக்காரிகளாகவும், குழந்தை பெறும் கருவிகளாகவும்தான் பார்த்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலம் அப்படி.
பிரித்தானிய அறிஞர்கள் வால்டர் ஹீப் (Biologist-Walter Heape, Scotland Naturalist), ஆல்பட் உல்ஃப் (Texas Sociologist Albert Wolfe) ஆகியோர் பெண்கள் ஆண்களுக்கு சரிசமம் என்று வாதித்தாலும், பெண்கள் உடல் நிலை வீட்டு வேலை செய்யத்தான் பொருந்தும் என்றார்கள்.
பிரித்தானிய விஞ்ஞானியான பிரவ்ன்_செகார்டு (Brown-Sequard)- என்பவர் பெண் guinea pig ovary (கருமுட்டை பை) யிலிருந்து திரவம் எடுத்து ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் (estrogen, Progesterone) என்கிற ஹார்மோன் (hormone) களைக் கண்டுபிடித்தார். கரு தரித்தவுடன் ஆறு வாரங்கள் வரை எல்லா சிசுக்களும் பெண்களாகத்தான் இருக்கின்றன. ஏழாவது வாரம் சிசு பையனாக இருந்தால் ஆண் திரவம் testosterone சுரக்க ஆரம்பிக்கும் என்று அறிவிக்கிறார் – ஆங்கிலேய நாளமில்லாச் சுரப்பு மருத்துவர் ரிச்சர்டு க்யுண்டன் (endocrinologist Richard Quinton).
கலாச்சார மானுடவியலாளர் மார்க்கரெட் மீடு (Cultural anthropologist – Margret Mead) என்பவர், ஆண் பெண் வெளிப்பாடு செய்கைகள் எல்லாம் அவர்கள் வளரும் சூழ்நிலையைப் பொறுத்துதான் இருக்கிறது என்றார். உதாரணமாக, நியூகினியாவில் (New Guinea) பெண்கள் ஆண்கள் போல் செயலாற்றுகிறார்கள். இதேபோல் பிலிப்பைன்சில் (Philippines) உள்ள ஒரு பழங்குடியினர் சமூகத்தில் (tribe) பெண்கள் வேட்டையாடுவதில் திறமையாக உள்ளனர். 2008, 2015ஆம் ஆண்டுகளில் நாளமில்லாச் சுரப்பு மருத்துவர் ரிச்சர்டு க்யுண்டன் (Endocrinologist Richard Quinton), நரம்பியல் மருத்துவர் ஜான் கோட்ஸ் (Neuroscientist Jhon Coates) ஆகியோர், ஆண் திரவம் tமீstஷீstமீக்ஷீஷீஸீமீ அளவை வைத்து முரட்டுத்தனம், அதிக துணிச்சல் என்பவற்றை ஆராய்ந்ததில் ஒரு தெளிவான முடிவு செய்ய முடியவில்லை என்றனர்.
ஜாய் லான் (Joy Lawn) என்னும் பிரித்தானிய விஞ்ஞானி (Director of Maternal, Adolescent Reproductive and Child health at London School of Hypiene and Tropical medicine) சொல்லுகிறார் _ பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை விட ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாக உள்ளது என்று. இது எப்படி என்றால், பெண்களுக்கு மரபணுக்கள் (chromosomes) 46 என முழுமையான அளவுடன் உள்ளன. ஆனால், ஆண்களுக்கு sex chromosomeஇல் ஒரு பகுதி இயற்கையால் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இந்தக் குறைவினால் ஆண்குழந்தைகள் வளரும் போது எளிதாக நோய்க்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு நிறக்குருடு (color blindness), இரத்த ஒழுக்கு (hemophilia) போன்ற மரபணு சார்ந்த நோய்கள் வர ஏதுவாக உள்ளது. பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஆண்களை மட்டும் சோதனைகளில் (clinical studies) சேர்த்திருந்தார்கள். பெண்களைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கினார்கள். பெண்களுக்கு மருந்தினால் நேரும் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் இருந்ததுதான் காரணம். தற்பொழுது பெண்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள் _ பல போராட்டங்களுக்குப் பிறகு.
1888 முதல் பெண்கள் – ஆண்கள் மூளை பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “மூளை எடை அவரவர் உடல் எடையைப் பொறுத்து உள்ளது; அவர்களுடைய அறிவாற்றலைப் பொறுத்தது அல்ல’’ என்று முடிவாகி உள்ளது. 1982இல் டாக்டர். குர் (Dr. Gur, professor of psychology from university of Pennsylvania) சில வித்தியாசங்களைக் கண்டுபிடித்தார். பெண்களுக்கு நிறைய பழுப்பு நிற மூளை(grey matter), ஆண்களுக்கு நிறைய வெள்ளை நிற மூளை (white matter) உண்டு என அறிவித்தார். பெண்கள் – பேச்சுத் திறமையும், தீர்மானங்கள் எடுப்பதில் ஆண்களைவிட சிறந்தவர்கள் என்றும், ஆண்கள் இடங்கள், தடங்கள் கண்டுபிடிப்பதில் சிறந்தவர்கள் என்றும், பெண்கள் ஒரே சமயத்தில் பல காரியங்கள் செய்வதில் வல்லவர்கள்; ஆண்கள் ஒரே காரியத்தில் மட்டும் குறியாக வேலை செய்வார்கள் என்றும் அறிவித்தார். ஆகவே, பெண்களும் ஆண்களும் ஒத்து வாழ்ந்தால், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நல்லது என்கிற கண்டுபிடிப்பை வழங்கினார்.
மூளையின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை (plasticity) பற்றி நிறைய சோதனைகள் நடை பெற்றன. முடிவு என்னவென்றால், ஒவ்வொரு மனிதரின் மூளையும் தனித்தனி திறமை (unique) கொண்டது. புதுப்புது திறமைகளைக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்பதை பரிசோதனைகள் செய்து உலகிற்கு அறிவித்தனர். ஆகவே, யார் வேண்டுமானாலும், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தால் திறமைசாலியாக முடியும்.
பெண்கள், வீட்டில் வேலை செய்யத்தான் பிறந்தவர்கள் என்கிற காலம் போய், நோபல் பரிசு வாங்கத் தகுதியானவர்கள் என்று நிரூபிக்க, மேரி க்யூரி, ரோசலின் சுஸ்மேன் யாலோ (Rosalyn Sussman Yalow-1977) (Physiology & Medicine) மற்றும் உலகப்புகழ் மிருக ஆய்வாளர் ஜேன் குடால் (Jane Goodall), பல பெண் விண்வெளி ஆய்வாளர்கள் (astronomers) என பெண் அறிஞர்கள் பெருகி வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பெண்ணியலாளர் (Feminist) என்றால் என்ன? என்பதற்கு விளக்கம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனை உடையவர்தான்.
சான்டியாகோ விலங்குக் காப்பகத்தில் (San Diego Zoo) வளரும் போனோபோ (Bonobo) குரங்குகளில் பெண் குரங்குகள் ஆண் குரங்குகளை ஆதிக்கம் செலுத்துகின்றன. குழந்தைக் குரங்குகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்கின்றன.
லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியர் பால் மேத்யூ அவர்களின் (Professor Paul Mathew, Imperial college of London) கண்டுபிடிப்பு என்னவென்றால், ஒரு பாலின ஆண்கள் (Homosexual) மூளை பெண்கள் மூளைத் திறனோடு ஒத்து இருக்கிறது என்பது. ‘Amygdala’ என்னும் மூளையின் மன உணர்ச்சிப் பாகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிறைய மாற்றங்கள் இல்லை என சில விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஒரு சமூகத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்மட்டும் இருந்தால் போதாது. தாய்க்கு உதவியாக தந்தை , பாட்டன், பாட்டி மற்ற உறவினர்கள் தேவைப்படுகிறார்கள். தனிமையாகக் குழந்தை வளர்க்கும் தாய்மார்களுக்கு குழந்தைகளிடம் அன்பு குறைவாகக் காணப்படுகிறது.
அமேசான் காடுகளில் ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்ளுகிறார். பிறக்கும் குழந்தையை எல்லா ஆண்களும் பராமரித்துக் கொள்கிறார்கள். இவர்கள் சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பாக வளர ஏதுவாக இருக்கிறது.
ஆப்பிரிக்காவில் பழங்குடி ஆண்கள் பெண்கள் சரிசமமாக வேட்டையாடுவதிலும், காடுகளில் உணவு சேகரிப்பதிலும் ஒத்துழைக்கிறார்கள். பெண்கள் சிறு வேட்டைகளுக்குத் தேவையான ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்களாக இருந்திருக்கின்றனர். அட்ரின்னே ஸின்மேன் (Adrienne Zihnman) என்னும் ஆராய்ச்சியாளர் வலிமை மிக்க பெண்கள் உலகெங்கும் பரந்திருப்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார். புரூக் செக்கல்ஸ் (Brook Seclze) என்னும் மனித நல ஆராய்ச்சியாளர், வடநமீபிய நாடோடி பழங்குடியினர் சமூகத்தில் (North Namibia nomadic tribe) பெண்களுக்கு அதிக சுதந்திரம், (sexual freedom) உண்டு. அதுவே அவர்கள் பண்பாடு என்கிறார்.
கடைசியாக இன்னொரு ஆப்பிரிக்க கொடூரமான கலாச்சாரம் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது. இதில் வயதான பெண்களும் துணை போகிறார்கள். ஹிபோ வார்டெர் (Hibo Wardere), 46 வயது உள்ள ஆப்பிரிக்க பெண்போராளி. இவருக்கு ஏற்பட்ட கொடுமையை இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தவுடன் உலகறிய வெளியிட்டார். அதுதான் பெண் பிறப்பு உறுப்பு அறுவை (girls genital mutilation). இந்தக் கொடூரம் எதற்கு என்றால், பெண்களின் கன்னித்தன்மையை காப்பாற்று வதற்காகவும் ஆண்களுக்கு பெண்களின் கற்பில் நம்பிக்கை வருவதற்கும்தானாம். இந்த வழக்கத்தை, கடும் எதிர்ப்பு, கொலை மிரட்டல், எல்லாவற்றையும் கண்டு கொள்ளாமல் வீரத்துடன் எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கிறார். இந்தப் போராட்டத்தால் ஆப்பிரிக்க பெண்களுக்கு விழிப்புணர்வு வந்து இந்தக் கொடூரத்திலிருந்து விடுபட ஆரம்பித்துவிட்டனர்.
வெள்ளை நிற மூளை பழுப்பு நிற மூளை
இந்தியாவில் உள்ள “சதி வழக்கம்’’ ஆங்கிலேயர் வரவால் ஆட்டம் கண்டது. “சதி’’ வழக்கத்தை ஒழிக்க சட்டமும் போட்டது. ஆனாலும் சில நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்தவாறு இருக்கின்றன. இந்தியாவிலும், மற்றும் உலகெங்கிலும் பெண்களைத் துன்புறுத்த ஒரு கூட்டம் முயன்று கொண்டுதான் இருக்கிறது. பெண்கள்தான் பெண்களுக்காகப் போராட வேண்டியிருக்கிறது. அதுதான் இயற்கை நியதி போலும்.
இந்தப் புத்தக ஆசிரியர் அஞ்சலினா தன்னை மிகவும் சிறந்த வாழ்வைப் பெற்றவராக மகிழ்வுடன் தெரிவிக்கிறார். ஏனென்றால், இவர்தம் பெற்றோர், இணையர், மாமியார், 6 வயது மகன் அனைவரும் இவருடைய அறிவாற்றலையும், புத்தகம் எழுதும் திறமையும் மதிக்கின்றனர், ஆதரவும் தருகின்றனர். அவர்களுடைய உறுதுணைக்கு நன்றியுடன் பெருமையுடனும் அன்போடு நினைவு கூர்கிறார். இப்படிப்பட்ட குடும்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அமைந்தால் உலகில் அன்பும் அமைதியும் நிலவும் என்பதில் அய்யமே இல்லை!
ஆணும் பெண்ணும் சமம். வளரும் சூழ்நிலை மற்றவற்றைத் தீர்மானிக்கின்றது என்பதுதான் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து.