ஞாயிறு, 10 நவம்பர், 2024

சமத்துவம் மலரப் போராடிய அமெரிக்கப் பெண்கள்

 


அமெரிக்கா என்ற ஒரு நாடே ஒரு காலத்தில் இல்லை. இங்கிலாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் உருவாக்கிக் கொண்ட நாடு அது. எப்படி முழு நாடும் உருவாயிற்று? வெள்ளையர்கள் உடல் உழைப்பில் வல்லவர்கள் அல்ல. எனவே, கட்டடங்கள் கட்டவும், சாலைகள் உருவாக்கவும் லட்சக்கணக்கான கருப்பு நிற உழைப்பாளிகளை ஆப்பிரிக்க வனப் பகுதிகளிலிருந்து வரவழைத்தார்கள். அவர்கள் வியர்வை சிந்தி முழு நாட்டையே உருவாக்கினார்கள். பல நூறு ஆண்டுகளுக்குப் பின் – “உங்கள் வேலை முடிந்துவிட்டது கருப்பு நாய்களே! உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்கள் வெள்ளைத் தோல் அமெரிக்கர்கள். வெகுண்டு எழுந்த ஆப்பிரிக்க மக்கள் – “அடேய்! இது உன் நாடு மட்டுமல்ல. எங்கள் நாடும் இதுதான். நாங்கள் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று முழக்கமிட்டார்கள்.

“எங்கள் மூதாதையர் ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து வந்தது உண்மை. ஆனால், என் பெற்றோரும் இங்கே பிறந்தவர்கள். அவர்களுடைய பெற்றோரும் இங்கே பிறந்தவர்கள். நாங்களும் இங்கே பிறந்தோம். எங்களைப் போகச் சொல்ல நீங்கள் யார்?” என்று கொதித்தெழுந்துக் கேட்டார்கள். போராட்டம் வெடித்தது.
நாளடைவில் – “இருந்துத் தொலையுங்கள்! ஆனால், எங்களோடு ஒட்டி உறவாடக் கூடாது. எல்லா இடங்களிலும் எங்களை விட்டு விலகியே இருங்கள்!” என்றார்கள்.

சமூக அநீதியும் கொடுமைகளும்
கருப்பர் இனப் பிள்ளைகளுக்கு தனியாகப் பள்ளிகள்; உணவகங்களில் தனி இடங்கள்; பேருந்துகளில் பின்புறம் மட்டுமே ஒரு ஓரத்தில் உட்கார அனுமதி; அஞ்சல் நிலையங்களில் தூரத்தில் உட்கார அனுமதி; அஞ்சல் நிலையங்களில் தூரத்தில் நின்றபடி அஞ்சல் தலைகள் வாங்கும் நிலை; இப்படி நாடு முழுவதும் கருப்பு நிற அமெரிக்கர்கள் ஒதுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். தென் அமெரிக்காவில் கொடுமைகள் மிக அதிகமாக இருந்தன. மறுபடியும் பல போராட்டங்கள் நடந்தன – சமூக நீதிக்காவும் சமத்துவத்திற்காகவும். நிற வெறிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட ஆரம்பித்தன. சமூக உரிமைகள் இயக்கம் (Civil Rights Movement) உலகப் புகழ் பெற்ற, வரலாற்று சிறப்புடைய இயக்கமாக இன்றும் போற்றப்படுகிறது. ஆப்பிரகாம் லிங்கன் பற்ற வைத்த நெருப்பு மார்டின் லூதர்கிங் ஜூனியர் வரை கொழுந்துவிட்டு எரிந்தது. காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்படவும் செய்தன. இருந்தாலும் நிறவெறி இருள் அகலவில்லை.

பேருந்துகளில் நிகழ்ந்த கொடுமை
வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே பேருந்துகளில் முன்புறம் ஏறி நல்ல இருக்கையில் அமர அனுமதிக்கப்பட்டனர். கருப்பு நிற அமெரிக்கர்களுக்கு பேருந்தின் பின்புறம் மோசமான ஓரிரு இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. கருப்பு நிற குடிமக்கள் “காக்கை”கள் என்று கேலி செய்யப்பட்டனர். வீதி நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஒரு வெள்ளைத் தோல் கலைஞர் முகத்தில் கருப்பு சாயம் பூசிக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வது போல் நடிப்பது வழக்கமாம். அந்த நடிகரின் பெயர் ஒரு நிகழ்ச்சியில் Jimஎன்று இருந்துள்ளது. பார்வையாளர்கள் – “Jim Crow”  குதி! குதி!” என்று உற்சாகமாகக் குரலெழுப்புவார்களாம். நாளடைவில் Jim Crow – JC  என்று சுருங்கி JC Bus Law என்று மாறியது.

பேருந்துகளில் காட்டப்பட்ட பாரபட்சத்தை எதிர்த்து முதலில் போராடிய கருப்பர் இனப் பெண் (Irene Morgan)  அய்ரீன் மார்கன் என்பவர். இது நடந்தத 1946இல். அதன் பிறகு அதே போன்ற ஒரு பேருந்து எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய கருப்பர் இனப் பெண் ரோஸா பார்க்ஸ்  (Rosa Parks). 1955 டிசம்பர் 1ஆம் நாளன்று அவர் துவக்கிய போராட்டம் அமெரிக்காவையே உலுக்கி எடுத்தது வரலாறாகும்!
அலுவலகப் பணி முடிந்த வீடு திரும்ப ஒரு பேருந்தில் ஏறிய ரோஸா பார்க்ஸ் வெள்ளையர்களுக்காக இருந்த இருக்கை ஒன்றில் களைப்புடன் அமர்ந்து விட்டார். பேருந்தில் ஏறிய ஓட்டுநர் – “போர்டைப் பார்க்கலையா? இறங்குடீ!” என்று உறுமியுள்ளார். “முடியாது போடா!” என்றார் ரோஸா. “பின்னால் போய் உக்காரு!” என்று ஓட்டுநர் மிரட்டியுள்ளார். அதற்கும் மசியவில்லை ரோஸா. “எல்லோரும் சமம்!” என்று பதிலடி கொடுத்தார். அவ்வளவுதான்! போராட்டம் வெடித்தது.
“இனி பேருந்துகளில் பயணம் செய்ய மாட்டோம்!” என்று முடிவு செய்த கருப்பு அமெரிக்கர்கள் சாலை மறியல் போராட்டங்களிலும் இறங்கினர். 1955 டிசம்பரில் துவங்கிய “பேருந்து எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து 381 நாட்கள் நடந்து 1956ஆம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. ரோஸா பார்க்ஸ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. பேருந்துப் பயணப் பாரபட்சமும் முடிவுக்கு வந்தது.

மார்டின் லூதர் கிங் ஜூனியர்
சமூக நீதிக்காகப் போராடிய உலகப் புகழ்பெற்ற கருப்பர் இனத் தலைவர் மார்டின் லூதர் கிங். இவருடைய “I have a dream”(எனக்கு ஒரு கனவு உள்ளது) என்ற உரை உலக வரலாற்றில ஒரு மகத்தான அத்தியாயமாகும். நிறவெறி, பிறப்பு சார்ந்த பாகுபாடுகள், இனவெறி இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடிய மார்டின் லூதர் கிங் 1968 ஏப்ரல் 4ஆம் நாளன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய வயது 39. அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் அமெரிக்கர்கள் கலந்து கொண்டார்கள்.
கருப்பு நிற மக்களை நீக்ரோக்கள் என்று அழைத்த காலம் மறைந்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று பின்னர் அழைத்தனர். இன்று அமெரிக்கர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். திரை உலகிலும், இலக்கிய உலகிலும், நூற்றுக்கணக்கான உயர் பதவிகளிலும் இன்று அவர்கள் உச்சத்தில் உள்ளார்கள். போராளிகள் புதைக்கப்படுவதில்லை – விதைக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மைதான்.