வெள்ளி, 14 அக்டோபர், 2022

உலகிற்கு தடுப்பூசி தந்த பெண்கள்!

 

பெண்ணால் முடியும்! : உலகிற்கு தடுப்பூசி தந்த பெண்கள்!

செப்டம்பர் 1-15,2021

தகவல் : சந்தோஷ்

கொரோனா ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்-கிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்-கொண்டவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, மக்களிடையே உருவாகி இருக்கிறது. குறுகிய காலத்தில் ஒரு நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பது மருத்துவ உலக வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தத் தடுப்பூசிகளைக் கண்டு-பிடிப்பதற்கு உழைத்த விஞ்ஞானிகள் யார் யார் என்பதை கொஞ்சம் அறிவோம்.

‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசிக்கு அதைக் கண்டறிந்த விஞ்ஞானக் குழுவிற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் ‘சாரா கில்பர்ட்’ என்ற பெண் விஞ்ஞானி. அவருடைய பங்கு இதில் மிகவும் முக்கியமானது. ‘கோவேக்சின்’ இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி-யாகும். விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை-யேற்று வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர் ‘சுமதி’ என்ற பெண் விஞ்ஞானி.

 

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த ‘‘ஜேன்சன்’ (Janssen) என்ற தடுப்பூசியைத் தயாரிப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ‘Elena smolyarchuk’ என்னும் பெண் விஞ்ஞானி. இந்தத் தடுப்பூசிதான் ஏனைய தடுப்பூசிகளைவிட சக்தி வாய்ந்தது என்று இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அடிப்படையான ஓர் ஆய்வை நடத்தியதும் ஒரு பெண் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமானது. அவரது பெயர் ‘கேட்டலின் கேரிகோ’. ஹங்கேரியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.

நோய்த் தொற்றுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அவர் 22 ஆண்டுகளாக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கண்டுபிடித்த ஒரு மகத்தான மருத்துவப் புரட்சிதான் mRNA என்ற புதிய நுட்பவியல் ஆகும். இதை அவர் கண்டுபிடித்ததன் வழியாகத்தான் இன்றைக்கு இந்த நோய்களில் இருந்து தடுக்கின்ற தடுப்பு ஊசிகளையும் கண்டுபிடிக்க முடிந்தது என்பது மிகவும் அடிப்படையான ஒரு செய்தி ஆகும். உலகத்தில் இதற்கு முன் mRNA என்ற மருத்துவ நுட்பவியலை இதுவரை கற்பனையில் கூட எவரும் சிந்தித்தது இல்லை. அத்தகைய கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கி மகத்தான புரட்சியைச் செய்து காட்டியிருப்பவர், இந்த கேட்டலின் கேரிகோ என்ற அமெரிக்காவில் பணியாற்றுகின்ற, ஹங்கேரியப் பெண் விஞ்ஞானி.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைக்கும், நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வந்த போது கூடியிருந்த சுகாதாரப் பணியாளர்கள் எழுந்து நின்று கைதட்டி, கண்ணீருடன் அந்த விஞ்ஞானிக்கு வரவேற்புக் கொடுத்த போது ‘என்னுடைய 22 ஆண்டு கனவு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது’ என்று அவர் மனம் நெகிழ்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தகுதி படைத்த ஒரே ஒரு விஞ்ஞானி இவராகத்தான் இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அறிவியல் உலகிலும், மருத்துவ உலகிலும்,  ஆண்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. பெண் விஞ்ஞானிகள்  புறக்கணிக்கப் படுகிறார்கள். இந்தியத் திருநாட்டில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகள் வேறு வேறு வடிவத்தில் இருந்தாலும், அய்ரோப்பிய நாடுகளில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகளை முறியடித்து இந்த உலகம் முழுவதும் நோயினால் தவித்த மக்களைக் காப்பாற்றி அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த இந்தப் பெண் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.