வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நவீன உலகிலும் அடிப்படை உரிமைக்காக போராடும் பெண்கள்



சவுதி அரேபியா, அரபு தீபகற்பத்தில் எண்ணெய் வளமிக்க நாடு. செல்வச் செழிப்பிற்கு பஞ்சம் இல்லை. ஆனால் இங்கு பெண்களுக்கு சாலைகளில் தனியாக செல்லக்கூட உரிமை இல்லை. அதாவது வயது வந்த பெண் ஒருவர் கடைக் குச்செல்லவேண்டுமென்றால் சகோதரன், கணவன் தந்தை போன்ற ஒரு ஆண் துணையோடு தான் செல்லவேண்டும், இது சமீபத்திய காலம் வரையிலான தடை ஆகும்.  ஆனால் தற்போது மிகவும் பழை மைவாத சிந்தனைகள் உடைய நாடு  என்று கருதப்படும் சவுதி அரேபியாவில்,  பெண் கள் தங்களுக்கான சம உரிமைப் போராட் டத்தில்  கணிசமான வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். . சமீபத்தில் தான் சவுதியில்  ஒரு ஆண் பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெறாமல் பெண் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பையும், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழ்நிலையையும், தாங் களாகவே முன்வந்து கல்யாணத்தையும், மணவிலக்கையும் பதிவு செய்யும் உரிமை யையும், சவுதி பெண்கள் பெற்றுள்ளனர்.

உலகில் கிட்டத்தட்ட எல்லா இடங் களிலும் இயற்கையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கைகள் இன்று வரை சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கிடைக்காத ஒன்றாகவே இருந்தது. சவுதி அரசு ஆணை களை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் உம் அல்-குரா என்ற தினசரி நாளிதழில் இந்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யானது.

சவுதி அரசின் இந்த நடவடிக்கையை மேற்குலக நாடுகளின் பெண் உரிமைப் போராளிகள் ஒரு கண் துடைப்பு என்றே கூறுகின்றனர். அதாவது சவுதி அரசர்  ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சிக்கி பெரும் நெருக்கடிக்கு ஆளான நிலையில் எழுந்துள்ள மனித உரிமை கேள்விகளில் இருந்து தப்பிப்பதற் காகவும், திசை திருப்புவதற்காகவுமே இதை செய்தார்கள் என்று கூறுகின்றனர். .

சுவாசிக்கும் சுதந்திரம்

புதிய அரசாணையின் கீழ், சவுதி பெண்கள் தங்கள் ஆண் பாதுகாவலர்களிட மிருந்து ஒப்புதல் பெறாமல் வெளிநாடு களுக்குச் செல்ல முடியும். 21 வயதை எட்டியதும் அவர்களால் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த, சீர்திருத் தங்களால் பயணிக்கும் சுதந்திரம்  சவூதியில் ஆணுக்கும், பெண்ணுக்கும்  ஒன்றாக்கப் பட்டுள்ளது.

பெண்கள் இப்போது தங்கள் திருமணம், விவாகரத்து மற்றும் தங்கள் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய முடியும். அத்துடன், தன்னிச்சையாக  குடும்ப ஆவணங்களை யும் பெற முடியும். பெண்கள் கணவருடன் வாழ்கிறோம் என்று பதிவு செய்யும் வாய்ப் பும் தற்போது கிடைத்திருப்பதால், இது சவுதி தேசிய அடையாள அட்டைகளை அவர்கள் பெறுவதை எளிதாக்கும்.

இதுவரை, சவுதியில் ஒரு ஆண் மட் டுமே  குழந்தையின்  சட்டப்பூர்வ பாதுகாவ லராக இருக்க முடியும். ஆனால், இந்த விதிமுறையை மாற்றி இனி  பெண்களும் தங்கள் குழந்தைகளின் சட்டப்பூர்வ பாது காவலராக முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது சவுதி அரசு.

வேலை வாய்ப்புகள்

சவுதியில் இனி  பாலினம், அங்க குறை பாடு அல்லது வயது அடிப்படையில் வேலை வாய்ப்புகளை மறுக்கக் கூடாது என்ற முக்கிய கட்டளைகளையும் புதிய அரசாணை உள்ளடக்கி உள்ளது.

சமீபகாலமாகவே, சவுதி அரேபியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்காக பல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். எடுத் துக்காட்டாக வேலைக்கு செல்லும் பெண் களுக்கு ஆடைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட் டுள்ளது, அதாவது உடல் முழுவதையும் மூடும் ஆடையை வேலைக்குச்செல்லும் பெண்கள் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது., இது  பெண்கள் மட்டும் வேலைசெய்யும் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளதால் அதிக அளவு பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி வேலைக்குச் செல்ல விண்ணப்பித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ். (2013) மற்றும் விப்ரோ (2017) முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் வணிக செயல்முறை சேவை  மய்யங்களை சவுதியில் திறந்தன.

விரிவாக்கப்படும் பெண் விடுதலை

2012 இல், சவுதி அரேபியா முதல் முறை யாக லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு பெண் பங்கேற்பாளர்களை அனுப்பி வைத்தது.

2015இல்  நகராட்சி தேர்தலில்  பெண்கள் போட்டியிட்டனர். ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆண் கவுன்சிலர்களை எதிர்த்து 20 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்தாலும், சவுதி அரேபியாவின் மேலா திக்க  அரசியலில்  அவர்களின் தோற்றம் ஒரு திருப்புமுனையாகவே  காணப்பட்டது.

2016ஆம் ஆண்டு, 22% ஆக இருந்த வேலைக்குச் செல்லும் சவுதி பெண்களின் எண்ணிக்கையை  2030-க்குள் 30% ஆக உயர்த்துவோம்  என்று  அதிகாரப்பூர்வமாக சவுதி பெண்கள் நலத்துறை அறிவித்தது.

சவுதி நாட்டில் பெண்களுக்கான வாகன ஓட்டுநர் தடை  2018 இல் அகற்றப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே ஆண்டு செப்டம்பரில், ஒரு பெண் தொகுப்பாளர் முதல் முறையாக  தொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பை வழங் கினார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்காவுக்கான தூதர்  பதவியை  ஒரு பெண்ணுக்கு  அளித்தது அந்நாட்டு அரசு.

சவூதி அரேபியாவின் சக்திவாய்ந்த பழைமைவாத குழுக்கள் அரசு பெண் களுக்கு சுதந்திரம் கொடுப்பதை கடுமை யாக எதிர்க்கிறார்கள். இந்த அரசாணையில்  சொல்லப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களைத் தாண்டி   இன்னும்  பெண் சுதந்திரத்தை  தடுக்கும்  பல விதிகள் நடைமுறையில் தான் உள்ளன. உதாரணமாக, திருமணம் செய்ய , சிறையை விட்டு வெளியேற மற்றும்  ஒரு தொழிலைத் தொடங்க ஆண் பாதுகாவ லரின் அனுமதி இன்னும்  தேவைப்படுகிறது . சவுதி பெண்கள் இன்றும் தங்கள் விருப்பப்படி தங்களின் குழந்தைகளுக்கு வேறு நாட்டுக் குடியுரிமை கோர முடியாது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான சீர்திருத்தம் என்பது சாதாரணமாக வந்து விடவில்லை. ஆணாதிக்கமும் பழைமை வாதமும் ஊறிப்போன ஒரு அரசரின் தலைமையின் கீழ் உள்ள சவுதி அரேபியா வில் சீர்திருத்தங்களுக்காக போராடி வந்த பெண்ணுரிமையாளர்கள் மீது அந்த நாட்டு அரசே கட்டவிழ்த்து விட்ட வன்முறையை  இன்றும் சவுதி அரேபியப் பெண்கள் மறந்து விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொடூர சர்வாதிகாரிகள் என்று மேலை நாடுகளால் பக்கம் பக்கமாக எழுதி விமர் சனம் செய்யப்பட்டு அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட ஈராக் அதிபர் சதாம் உசைன், லிபிய அதிபர் முகமது கடாபி போன்றோர் கூட தங்களின் ஆட்சிக்காலத் தில் தங்களின் நாட்டில் பெண்களுக்கு சுதந்திரமான சூழலை உருவாக்கித் தந் தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ச.ரா.

 - விடுதலை ஞாயிறு மலர், 24.8 .19